மத்திய அரசு சமீபத்தில் ஏர் இந்தியாவை டாடா நிறுவனத்திற்கு விற்பனை செய்தது. ஏர் இந்தியா கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடனில் சிக்கியிருந்ததால் அதனை மத்திய அரசு விற்பனை செய்துவிட்டது. இதையடுத்து டாடா நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்திற்குப் புதிதாக தலைமை நிர்வாக அதிகாரியாக இல்கர் அய்சி என்பவரை நியமித்தது.
ஆனால், இல்கர் அய்சி என்பவரை நியமிக்க ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு தெரிவித்துள்ளது. துருக்கியுடன் இல்கர் அய்சிக்கு தொடர்பு இருந்தது என்று கூறி அவரது நியமனத்திற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்.தெரிவித்திருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
முன்னாள் துருக்கி ஏர்லைன்ஸ் தலைவரான இல்கர் அய்சி 1994-ம் ஆண்டு துருக்கி முன்னாள் அதிபர் தையிப் எர்டோகன், இஸ்தான்புல் மேயராக இருந்த போது அவருக்கு இல்கர் அய்சி ஆலோசகராக இருந்தார். துருக்கியுடன் இந்தியாவிற்கு நட்புறவு இருந்ததில்லை. வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை இந்தியாவை சேர்ந்த ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிப்பதாக இருந்தால் அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவையாகும்.
பாதுகாப்பு காரணங்களைக் காரணம் காட்டி இல்கர் அய்சியை ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கும் முன்பு தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று மத்திய அரசும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இல்கர் அய்சி டாடா நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரை சந்தித்து இது குறித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தன்னால் ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி ஏற்க முடியாது என்று தெரிவித்தார். இதனை டாடா நிறுவனமும் உறுதிபடுத்தியுள்ளது. அதே சமயம், இது தொடர்பாக மேற்கொண்டு தகவல்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டது.

இல்கர் அய்சி தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை ஏற்க மறுத்திருப்பது டாடா நிறுவனத்திற்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இனி டாடா நிறுவனம் ஏர் இந்தியாவிற்கு வேறு ஒரு தலைமை நிர்வாக அதிகாரியை தேடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடுமையான கடனில் சிக்கி இருக்கும் ஏர் இந்தியாவின் நிதிநிலையை சரி செய்து சகஜ நிலைக்கு கொண்டு வரும் டாடா நிறுவனத்தின் முயற்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.