நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 12.5 சதவிகிதமாக அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF - International Monetary Fund) கடந்த ஏப்ரல் மாதம் கணித்திருந்தது. அது, தற்போது 9.5 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என தனது கணிப்பை மாற்றியிருக்கிறது. சர்வதேச நாணய நிதியம் என்பது 189 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு அமைப்பாகும். சர்வதேச நாணய நிதியம் இப்படிச் சொல்வதற்கு என்ன காரணம்?
கொரோனா முதல் அலையின் பாதிப்பிலிருந்து இந்தியா முழுமையாக மீண்டுவருவதற்குள், இரண்டாம் அலையின் தாக்கம் வேகமெடுத்தது. அதனால் போடப்பட்ட ஊரடங்கினால் பெரும்பாலான தொழில் துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் கடுமையாக சுணக்கம் கண்டன.
இரண்டாம் அலை ஓரளவுக்குத் தணிந்த நிலையில், தற்போது மூன்றாவது அலை வருமா, வராதா என்பது தெரியாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது இந்தியா. ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் இந்தியாவை கொரோனாவின் மூன்றாம் அலை தாக்கக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இப்படியான சூழலில், தற்போதைய பொருளாதார பாதிப்பு இந்தியாவின் நடப்பு நிதி ஆண்டின் ஜி.டி.பி வளர்ச்சியில் எதிரொலிக்கும் என ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது. நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் கொரோனா தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அதிக அளவிலான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அதனால் இனிவரும் காலத்தில் அந்த நாடுகளில் பொருளாதார பாதிப்பானது குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மக்களுக்குத் தடுப்பூசி போடும் வேகம் குறைவாக இருக்கிறது. இதனால், ஜி-20 நாடுகளில் அதிகம் பாதிப்படையும் நாடுகளாக இந்த இரு நாடுகளும் இருக்கும் என ஐ.எம்.எஃப் கருத்து தெரிவித்துள்ளது.
அதேபோல, தடுப்பூசி வர்த்தகத்தில் இருக்கும் தடைகளை உலக நாடுகள் நீக்க வேண்டும் என்றும், அப்போதுதான் வளரும் நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்கும் என்றும், தடுப்பூசி மருந்துகள் விநியோகம் வேகமெடுப்பதைத் பொறுத்துத்தான் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் எவ்வாறு இருக்கும் என்று கூறமுடியும் எனவும் ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது.

ஐ.எம்.எஃப் போல, சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங் (Fitch Rating) நிறுவனமும், நடப்பு நிதி ஆண்டுக்கான இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தை ஏற்கெனவே 10 சதவிகிதமாகக் குறைத்தது. இதற்கு முன்பாக, இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 12.6 சதவிகிதமாக இருக்கும் என இந்நிறுவனம் கணித்திருந்தது.
இந்திய ரிசர்வ் வங்கியும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டில் 9.5% மட்டுமே இருக்கும் எனக் கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.