
மற்ற நாடுகள் இயல்பு நிலையை அடைய 2022 ஆகிவிடும்; அதற்குமேல் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என இந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது!
உலக பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு அறிக்கையை சர்வேதேச நிதியம் (ஐ.எம்.எஃப்) வெளியிட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) வளர்ச்சி கடந்த 2019 -2020-ம் ஆண்டில் 3.3% வீழ்ச்சி அடைந்திருந்தது. இந்த நிலையில், நடப்பு 2021-2022-ம் நிதி ஆண்டில் 6% வளர்ச்சி இருக்கும் எனக் கணித்திருக்கிறது இந்த அமைப்பு.
சர்வதேச நிதியம் ஜனவரி மாதத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையின்படி, நடப்பு 2021-22 -ம் நிதி ஆண்டில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 11.5 சதவிகிதமாக இருக்கும் எனக் கூறியிருந்தது. ஆனால், புதிய மதிப்பிட்டில் அதைவிட அதிகமாக அதாவது 12.5% வளர்ச்சி இருக்கும் என இப்போது தெரிவித்துள்ளது.

ஜி.டி.பி அளவின் அடிப்படையில் அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் சீனாவின் வளர்ச்சி நடப்பு 2021-2022-ம் நிதி ஆண்டில் 8.6 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும்பட்சத்தில் இந்தியாவின் வளர்ச்சி இந்தக் காலகட்டத்தில் 12.5 சதவிகிதமாக இருக்கும் என ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது. வளர்ந்து வரும், வளர்ந்த நாடுகளில் நடப்பு நிதி ஆண்டில் இரட்டை இலக்க ஜி.டி.பி வளர்ச்சி பெறும் ஒரே நாடாக இந்தியா உள்ளது.
சீனாவின் ஜி.டி.பி வளர்ச்சி அதிகம் ஏற்றுமதியை சார்ந்திருக்கிறது. கொரானா பரவல் விஷயத்தில் பல்வேறு உலக நாடுகள் சீனாவுக்கு எதிரான நிலையை எடுத்திருப்பது இந்தியாவுக்கு சாதகமான அம்சமாக இருக்கிறது.
கொரோனா தாக்கத்தால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மிக அதிகமாகக் குறையும் என பீதியடைந்திருந்த சமயத்தில், நடப்பு நிதி ஆண்டில் இரட்டை இலக்க ஜி.டி.பி வளர்ச்சி பெறும் ஒரே நாடாக இந்தியா இருப்பது ஆசுவாசமளிக்கிறது. மேலும், இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சியில் உள்நாட்டு நுகர்வு மிக அதிகமாக இருப்பதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதைவிட வேகமாகவும் அதிகமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த 2022-23-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவிகிதமாகவும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 5.6 சதவிகிதமாகவும் இருக்கும் என இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு, தன் பழைய நிலைக்கு எட்டும் முதல் நாடாக அமெரிக்க இருக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மற்ற நாடுகள் இயல்பு நிலையை அடைய 2022 ஆகிவிடும், அதற்கு மேல் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என இந்த ஆய்வில் கணிக்கப் பட்டுள்ளது.
கொரோனா காலகட்டத்திலிருந்து படிப்படியாக பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி அதிவேகமாகவே இருக்கும் என சர்வதேச நிதியம் சொல்லி இருப்பது மகிழ்ச்சியையே அளிக்கிறது!