Published:Updated:

இளம் தலைமுறையினர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய `பண நிர்வாகம்'

நம் இளைய தலைமுறை காலம் முழுவதும் கஷ்டமில்லாமல் சுக வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக அந்நியரிடம் கடன் வாங்கக் கூட தயங்காத நாம், அவர்களின் தினசரி வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான பணவளக் கலையை கற்றுத்தர இனியும் தயங்குவது சரியல்ல.

நம் பெற்றோர் நமக்குத் தராத ஒரு சொத்து, பள்ளியிலும் கல்லூரியிலும் நாம் பயிலாத ஒரு கலை, இன்று வரை எழுந்து, விழுந்து நாம் அடையத் துடிக்கும் ஒரு இலக்கு? - அதுதான் பணத்தைக் கையாளும் ஞானம். நம் அடுத்த தலைமுறையாவது இதை அடைய வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏனோ நமக்கு வர மறுக்கிறது. மதம், சாதி, அரசியல் பற்றியெல்லாம் டீனேஜ் குழந்தைகளிடம் பேசத் தயங்காத பெற்றோர்களும்கூட, பணம், அதைக் கையாளும் விதம் பற்றியெல்லாம் அதிகமாகப் பேசுவதில்லை.

இதற்குக் காரணம், நம் மீதே நமக்கு நம்பிக்கை இல்லாததுதான்; நாம் பணத்தைக் கையாளும் விதம் மிகச் சரி என்ற தைரியம் இல்லாததுதான். இவ்வாறு தயங்குபவர்கள் ஒன்றை உணர வேண்டும் - நம்மில் யாரும் வாரன் பஃபெட்டோ, ஜுன்ஜுன்வாலாவோ இல்லை. ஆனால், நம்மிடம் அனுபவமும் குழந்தைகள் மீதான அக்கறையும் உள்ளன. நாம் கற்றுத் தராவிட்டால், குழந்தைகள் தம் வயதொத்த பிறரிடமிருந்து கற்க முற்படுவார்கள். இது எந்த விதத்திலும் நல்லது அல்ல.

அல்ஜீப்ராவும் ஜியோமெட்ரியும் மட்டுமே ஒரு சராசரி மனிதனின் தினசரி வாழ்வில் உபயோகப்படுவதில்லை. பணத்தை ஒழுங்காகக் கையாளும் விதம், சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் உள்ள வித்தியாசம், பட்ஜெட் போட்டு செலவழிக்கும் கலை இவற்றை அறியாவிட்டால், லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும் பிரயோசனமில்லை என்பதை நாம் அறிவோம்.

அதிலும் வேலையில் சேரும்போதே ஐந்து இலக்க சம்பளங்களும், பிளாஸ்டிக் மணி எனப்படும் கார்டுகளும் வந்தபின், பணத்தின் மீதான மரியாதை குறைந்துள்ளது. நம் காலம் முழுமைக்கும் கொட்டிக்கொண்டிருக்க பணம் ஒன்றும் நயாகரா நீர்வீழ்ச்சி இல்லை; அது வரும் காலத்திலேயே அதைச் சேமிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பல இளைஞர்களுக்கு இல்லை. பணத்தை சரியாகக் கையாளத் தெரியாததாலேயே மன அழுத்தம், விவாகரத்து, குற்றங்கள் பெருகுதல் போன்றவை அதிகரிப்பதாக ஒரு சர்வே கூறுகிறது.

பணம்
பணம்

இன்ஸ்டன்ட் காபி, டூ மினிட்ஸ் நூடுல்ஸ், ஏடிஎம்மில் பணம், ஆன்லைனில் ஷாப்பிங் என்று வளரும் தலைமுறைக்கு செல்வ நிலை உருவாக, நம் பணம் பெருக, சில காலம் பொறுமையாக இருக்க வேண்டியதின் அவசியம் புரியாது. மியூச்சுவல் ஃபண்டில் 20% வளர்ச்சி இந்தக் காலாண்டில் வரவில்லையா, உடனே ஸ்கீமை மாற்று; ஷேர் மார்க்கெட்டில் சிறிது சுணக்கமா, விற்று வெளியேறு என்பது போன்ற எண்ணங்கள் நம் செல்வத்தின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் என்பது போன்ற சூட்சுமங்கள் நமக்கே இன்னும் கைவரவில்லையே!

மேலை நாடுகளில் பிள்ளைகளுக்கு இந்த நிதி நிர்வாகத்தைக் கற்றுத் தருவதற்கு பல தனியார் நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. அமெரிக்காவில் `வேன்கார்ட்' எனப்படும் மிகப் பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பள்ளிகளிலேயே செயல்படுத்தும் விதமாக அன்றாடப் பொருளாதாரத்தை வடிவமைத்து, ஆசிரியர்களுக்கும், அவர்கள் மூலம் மாணவர்களுக்கும் கற்றுத்தருகிறது. பத்தே வாரங்களில் மாணவர்களிடம் சிறந்த முன்னேற்றம் தென்படுவதாகப் பயிற்சி தரும் ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நம் நாட்டில் இப்படிப்பட்ட நிறுவனங்கள் இல்லாத நிலையில், பட்ஜெட் போட்டு செலவு செய்வது, அதிகம் கடன் வாங்காதிருப்பது, கிரெடிட் கார்டைக் கையாளுவதில் கவனம் போன்ற நல்ல பழக்கங்களின் அருமையை பெற்றோர்தான் எடுத்துச் சொல்ல முடியும். மூன்று வயதிலேயே குழந்தைகளுக்குப் பணத்தின் முக்கியத்துவம் தெரிய ஆரம்பித்துவிடுவதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். 5 வயதுக் குழந்தைகூட வங்கி, ஏ.டி.எம், டெபிட் கார்ட் போன்றவை பணம் சம்பந்தப்பட்டவை என்று புரிந்து கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் பணம் வருவதையும், அதனால் ஏற்படும் பயன்களையும் பார்க்கமுடிகிறதே தவிர, அதைச் சம்பாதிக்கவும் பெருக்கவும், காப்பாற்றவும் நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளை அறிய முடிவதில்லை.

money
money

இதைப் பற்றியெல்லாம் பெரிய உரைகள் நிகழ்த்தி அவர்கள் மனதில் பதிய வைக்கவும் முடியாது. அன்றாட வாழ்வில் நாம் நிகழ்த்தும் வரவு செலவு விவகாரங்களில் அவர்களையும் ஈடுபடுத்துவது ஒரு நல்ல தொடக்கம். நேரம் கிடைக்கும்போது ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதைத் தவிர்த்து வங்கிக்கு பிள்ளைகளை அழைத்துச் சென்று அதன் செயல்பாடுகளை விளக்கலாம். நீங்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட வங்கியைத் தேர்ந்தெடுத்தீர்கள்... அங்கு, உங்களுக்குக் கிடைக்கும் சேவைகள் என்னென்ன... என்பது போன்ற விவரங்களைக் கூறினால் 7 வயதுக் குழந்தைகூட புரிந்துகொள்ளும்.

நிதித் திட்டமிடலின் 5 நிலைகள்! - அடிப்படை அம்சங்கள்

மின்சாரம், தண்ணீர், பால், பேப்பர் இவற்றுக்கான பில்களைக் காட்டி விளக்கி, கட்ட வேண்டிய தேதியில் நினைவுபடுத்தும்படி பழக்கப் படுத்தப்பட்ட பிள்ளைகள், தம் வாழ்நாள் முழுவதும் பில்களைச் சரியாகக் கட்டுவார்கள். அதோடு, மின்சார செலவைக் குறைக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தில் அவர்களையும் இணைத்துக்கொண்டால் வீட்டுக்கும் நாட்டுக்கும் மின்சாரத்தை சேமிக்கும் பணியில் உற்சாகமாக ஈடுபடுவார்கள்.

அவர்களுக்கு எது வாங்குவதாக இருந்தாலும், ஒரு பட்ஜெட் தொகையை முன்னதாகவே குறிப்பிட்டுவிட்டால், அவர்கள் அதை மீறுவதில்லை. ஒரு படி மேலே சென்று, ``பட்ஜெட்டில் மீதமிருக்கும் தொகை உன் உண்டியலுக்கு” என்று கூறிவிட்டால், அதிகம் செலவு செய்தால் நஷ்டம் என்ற எண்ணம் அவர்களுக்குள் ஆழமாகப் பதிந்துவிடும். இதேபோல், உணவகங்கள், சுற்றுலா, சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் நம் செலவை மேற்பார்த்து குறைக்கும் பொறுப்பை சற்று வளர்ந்த பிள்ளைகளிடம் தரலாம்.

பணம் அவசியம்
ஆனால் அது நேர் வழியில் வருவது இன்னும் அவசியம்!

பணத்தை மதிக்க வேண்டும்; ஆனால், அதற்கு அடிமை ஆகக் கூடாது;

கடன் வாங்கலாம்; ஆனால், அது கழுத்தை நெரிக்கக் கூடாது;

நிச்சயம் பிறர்க்கு உதவ வேண்டும்; ஆனால், அதிலும் நிதானம் தேவை;

தேவையானவற்றை உடனே வாங்கு; ஆசைகளைத் தள்ளிப் போடு

என்பன போன்ற பழக்கங்களைப் பாடத்தின் மூலமாகக் கற்பிப்பதைவிட அன்றாட செய்கைகள் மூலம் நிறுவுவதே சிறப்பு.

நம் இளைய தலைமுறை காலம் முழுவதும் கஷ்டமில்லாமல் சுக வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக அந்நியரிடம் கடன் வாங்கக் கூட தயங்காத நாம், அவர்களின் தினசரி வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான பணவளக் கலையை கற்றுத்தர இனியும் தயங்குவது சரியல்ல.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு