பிரீமியம் ஸ்டோரி

அடுத்த வாரம் கூடவிருக்கிற தமிழக சட்டமன்றக் கூட்டத்தில், தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக, ஆட்சி மாறியபின் புதிதாக வரும் அரசாங்கம், ‘கஜானா காலி’ என்று சொல்வது வழக்கம். ஆனால், இந்த முறை அது உண்மைதான் என்பதுடன், இனிவரும் ஆண்டுகளில் நிதிநிலையை மேம்படுத்த தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

தற்போது தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை அதன் மொத்தப் பொருள் உற்பத்தியில் (GSDP) 3.94 சதவிகிதமாக இருக்கிறது. இது, 4 சதவிகிதத்துக்குமேல் செல்லக் கூடாது என்பது 15-வது நிதி ஆணையம் விதித்துள்ள நிபந்தனை. ஆனால், தற்போதுள்ள நிலையில் இது 4 சதவிகிதத்துக்குமேல் செல்வதைத் தவிர்க்க முடியாது. அடுத்த ஓராண்டு காலத்துக்குள் இதை மீண்டும் 4 சதவிகிதத் துக்குள் கொண்டுவருவதுடன், இந்தப் பற்றாக்குறையைப் படிப்படியாகக் குறைக்க நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாதாரண காலத்தில் புதிய வரியை விதிப்பதன் மூலம் வருமானத்தை அதிகரிக்கலாம். ஆனால், கொரோனா இரண்டாம் அலையால் ஏற்கெனவே பல்வேறு தரப்பினரும் பாதிப்படைந்துள்ள நிலையில், புதிய வரியை விதித்தால் எதிர்மறை விளைவுகளே ஏற்படும். உதாரணமாக, முத்திரைத் தாள்களுக்கான வரியை உயர்த்தினால், ரியல் எஸ்டேட் பாதிப்படையும்; வாகனங்களுக்கான வரியை உயர்த்தினால், வாகன விற்பனை குறையும்.

இது ஒருபக்கம் எனில், செலவுகளும் நிறையவே இருக்கின்றன. தேர்தல் சமயத்தில் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றாலே தமிழக அரசாங்கம் பல பத்தாயிரம் கோடி ரூபாயை செலவழிக்க வேண்டியிருக்கும். ஜி.எஸ்.டி மூலம் மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய வருமானமும் சிக்கலாகிக்கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில், நிதி அமைச்சர் முன் இருக்கும் ஒரே வாய்ப்பு, மக்களைப் பெரிய அளவில் பாதிக்காதபடி வருமானத்தை உயர்த்தி, செலவைக் குறைப்பதுதான். இலவசங்களையும் சலுகைகளையும் தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் தருவதன் மூலம் மிகப்பெரிய அளவில் செலவைக் குறைக்க முடியும். மதுவின் விலையை உயர்த்துவதைவிட, அதிலிருந்து மக்களை விடுவித்து, அவர்களின் உழைப்பை ஆக்கபூர்வமான வழியில் கொண்டு செல்வதன்மூலம் உற்பத்தியை அதிகரித்து, அரசின் வருமானத்தை உயர்த்த முடியும். தமிழகம் முழுக்க இயற்கை வளங்கள் கொள்ளை போவதைத் தடுத்து நிறுத்துவதன் மூலமும், அரசு நிறுவனங்கள் லாபகரமாகச் செயல்படச் செய்வதன் மூலமும் வருமானத்தைப் பெருக்க முடியும்.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பன்னாட்டு நிதி நிறுவனங்களில் உயர்பதவி வகித்தவர்; பொருளாதாரத்தை சீர்படுத்தி, நிதிநிலையை உயர்த்தும் சூட்சுமம் தெரிந்தவர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் நிதிநிலையை மிகப்பெரிய அளவில் அவர் உயர்த்த வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு