Published:Updated:

ஏழை நாடுகளுக்கு நிதியுதவி, வீழ்ச்சியிலும் நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

நிதியுதவி
நிதியுதவி ( vikatan )

ஏழ்மை நிலையிலுள்ள 76 நாடுகளின் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பணிகளுக்கு நிதியுதவி அளித்து, அந்த நாடுகளைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஐ.பி.ஆர்.டி வங்கியில், நமது இந்தியா உட்பட, மொத்தம் 189 நாடுகள் இணைந்து நிதிப்பங்களிப்பு செய்கின்றன.

கொரோனா தொற்றுப் பரவலால் உலகமே பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. மிகவும் ஏழ்மையான 76 நாடுகள் பெற்றுள்ள கடனுக்கான தவணையை ஓராண்டு காலத்துக்கு தள்ளிவைப்பதாக ஜி-7 நாடுகளின் சார்பில் பிரான்ஸ் அறிவித்துள்ளது. இந்தக் கூட்டமைப்பைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்களிடையே வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் ஆலோசனை நடைபெற்றது. அதன் முடிவில், 'கடந்த 1930-ம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை உலக நாடுகள் சந்தித்துவரும் சூழலில், உலக வங்கி மூலமாகக் கடன்பெற்றுள்ள 76 ஏழ்மை நாடுகள், இன்னும் ஓராண்டு காலத்துக்கு கடன் தொகையைத் திருப்பிச்செலுத்த வேண்டாம்' என்று முடிவெடுக்கப்பட்டது.

உலக வங்கி
உலக வங்கி
vikatan

இந்த 76 நாடுகள் பட்டியலில், காங்கோ, கானா, மாலி, எத்தியோப்பியா, சூடான், உகாண்டா, நைஜீரியா, கென்யா, ஜிம்பாப்வே உள்ளிட்ட 40 நாடுகள் ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்தவை. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான், பூடான், மியான்மர், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் 76 நாடுகளின் பட்டியலில் வருகின்றன. இந்த நாடுகளுக்கு, உலக வங்கி அதன் அங்கமான ஐ.பி.ஆர்.டி எனப்படும் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி மூலமாக நிதியுதவி அளிக்கிறது. உதவிபெறும் நாடுகளில், பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் ஏழ்மை நிலையிலிருந்து சற்று மேம்பட்டிருந்தாலும், இன்னமும் ஐ.பி.ஆர்.டி வழங்கும் கடனைப் பெறக்கூடிய நிலையில்தான் உள்ளன.

ஏழ்மை நிலையிலுள்ள நாடுகளின் சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு நிதி உதவி அளித்து, அந்த நாடுகளைச்சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஐ.பி.ஆர்.டி மற்றும் ஐ.டி.ஏ எனப்படும் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் அசோசியேஷன் ஆகியவை இணைந்து முயற்சி மேற்கொள்கின்றன. இந்த ஐ.பி.ஆர்.டி வங்கியில், நமது இந்தியா உட்பட மொத்தம் 189 நாடுகள் இணைந்து நிதிப்பங்களிப்பு செய்கின்றன.

கொரோனாவால், அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், சீனா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உலகின் முன்னணி நாடுகளே கொரோனாவை எதிர்த்துப் போராட முடியாமல் தவிக்கும் சூழலில், ஏழ்மை நாடுகளின் நிலை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே, ஜி-7 நாடுகள் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளன.

ஜி-7 நாடுகளின் ஒப்புதலையடுத்து, இந்தியா அங்கம் வகிக்கும் ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பும் இந்த முடிவுக்கு ஒப்புதல் தந்து. இந்தக் கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. தற்போது இதன் தலைமைப் பொறுப்பிலிருக்கும் சவுதி அரேபியாவின் நிதி அமைச்சர் முகமது அல் ஜடான், 20 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் தொகையைத் திருப்பியளிப்பதை ஓராண்டுக்குத் தள்ளிவைக்கும் முடிவை ஆதரிப்பதாகத் தெரிவித்தார். கொரோனா வைரஸ் வெகுதீவிரமாகப் பரவிவரும் சூழலில், ஏழ்மை நாடுகள் தைரியமாக எதிர்கொள்வதற்கு இந்த முடிவு வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்
vikatan

300 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியில் இங்கிலாந்து

கண்களுக்கே புலப்படாத கொரோனா வைரஸ் தாக்குதல், உலக நாடுகளை அச்சுறுத்தியதோடு, பொருளாதாரத்தையும் புரட்டிப் போட்டுள்ளது. உலக நாடுகளையெல்லாம் அடக்கியாண்ட இங்கிலாந்து, கடந்த 300 ஆண்டுகளில் காணாத மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கவுள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வருகிறார். கொரோனாவின் தீவிரத்தால், அங்குள்ள தொழில் நிறுவனங்கள் மார்ச் 23 முதல் முழுமையாக மூடப்பட்டுள்ளன. அடுத்த மூன்று வாரங்களுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக, அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி -6.5% (மைனஸ் 6.5%) அளவுக்கு சுருங்குமென்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பால், இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில், இங்கிலாந்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்து 10 சதவிகிதத்தை எட்டுமெனக் கணிக்கப்பட்டுள்ளது.

வீழ்ச்சியிலும் நிமிர்ந்து நிற்கும் இந்தியா

தாங்கள்தான் உலகின் வல்லரசு என்று மார்தட்டிக்கொண்ட அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு 2020-ம் ஆண்டில் படுபாதாளத்திற்கு செல்லக்கூடும் என்று தெரிகிறது. கடந்த ஆண்டில் 2.3% பொருளாதார வளர்ச்சியை எட்டிய அமெரிக்கா, நடப்பு ஆண்டில் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் எதிர்மறையாக, -5.9% பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐ.எம்.எஃப்) கணித்துள்ளது. அதேபோல இத்தாலி, 0.3% பொருளாதார வளர்ச்சியிலிருந்து -9.1% பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தொழில்துறையில் சிறந்து விளங்கும் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி, 0.7 சதவிகிதத்திலிருந்து -5.2 சதவிகிதமாக குறையக்கூடும். அமெரிக்காவுக்கு சவால்விடும் ரஷ்யாவின் வளர்ச்சி 1.3 சதவிகிதத்திலிருந்து -5.5 சதவிகிதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாகச் செல்லாவிட்டாலும் 6.1 சதவிகிதத்திலிருந்து 1.2 சதவிகிதமாகக் குறையக்கூடும்.

ஜி.டி.பி கணிப்பு
ஜி.டி.பி கணிப்பு
vikatan

இந்த நிலையில், இந்தியா பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்தாலும் பெரிய வீழ்ச்சியிலிருந்து தப்பிக்குமென்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 4.2 சதவிகிதத்திலிருந்து 1.9 சதவிகிதமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகள் எதிர்மறை வளர்ச்சியைக் காட்டும் சூழலில், அத்தகைய வீழ்ச்சியிலிருந்து இந்தியப் பொருளாதாரம் தப்பிக்கும் என கணித்திருப்பது நமக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தியாகும். இதே நம்பிக்கையுடன் நம் தொழில்துறையை மீட்டெடுக்கும் முயற்சியில் திட்டமிட்டு செயல்பட்டால், உலகின் முதன்மையான இடத்தை இந்தியா எட்டுவது கடினமல்ல.

வெள்ளிக்கிழமை மாலை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், வங்கிகளுக்கும், மாநில அரசுகளுக்கும் நிதி உதவி செய்வதற்கான சில அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 1.9 சதவிகிதமாகக் குறையக்கூடும் என்று தெரிவித்தவர், அடுத்த 2021-22 நிதியாண்டில் 7.4 சதவிகிதமாக உயருமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

பொருளாதார நிபுணர் ஷியாம் சேகர்
பொருளாதார நிபுணர் ஷியாம் சேகர்

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் குறிப்பிட்டதுபோன்ற வளர்ச்சி சாத்தியம்தானா என்று பொருளாதார நிபுணர் ஷியாம் சேகரிடம் கேட்டோம். "இந்தியாவின் ஜி.டி.பி-யில் 55% சேவைத்துறையும், 15% விவசாயத்துறையும், 30% உற்பத்தித்துறையும் அங்கம் வகிக்கின்றன. நம் நாட்டில் சேவைத்துறையைப் பொறுத்தவரை புதிதுபுதிதாக நிறைய தொடங்கப்பட்டுவருகின்றன. எனவே, இந்தத் துறை நன்முறையில் வளர்ந்துவருகின்றது. விவசாயத்துறையும் நல்ல நிலையில்தான் உள்ளது. உற்பத்தித்துறை மட்டுமே சற்று சவாலான சூழலில் உள்ளது. இதைமட்டுமே மேம்படுத்த வேண்டியுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு பணச்சுழற்சி மிகவும் முக்கியம். ஓர் ஆண்டுக்கு 3 - 4 மடங்கு பணம் சுழற்சியடைந்தால் அது நல்ல பொருளாதாரச்சூழல் என்று கருதலாம். அதை 5-6 மடங்காக மாற்றும்பட்சத்தில், பொருளாதார வளர்ச்சி மிகத்துரிதமாக இருக்கும். அதற்கேற்ப நிறைய பாடுபடவேண்டும். தெளிவான கொள்கை முடிவுகள் எடுத்தால் அது சாத்தியமே. ரிசர்வ் வங்கியின் செயல்பாடு நன்றாகவே இருக்கிறது. அதேபோல நம் அரசாங்கமும் தொடர்ச்சியாகப் பல்வேறு மாறுதல்களைச் செய்துவருகிறது. இத்தகைய முன்னெடுப்புகள் தொடரும்பட்சத்தில், பொருளாதார வளர்ச்சி சாத்தியமே" என்றார்.

"ஏற்கெனவே நம்முடைய பொருளாதாரம் மந்த நிலையில்தான் இருந்துவந்தது. இப்போது கொரோனா தாக்குதல் காரணமாக மேலும் பலவீனமான நிலையை அடைந்துள்ளது" என்கிறார், அகில இந்திய பொதுத்துறை வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் ஃப்ராங்கோ. அவர் மேலும் கூறுகையில்,

தாமஸ் ப்ராங்கோ
தாமஸ் ப்ராங்கோ

"இன்னமும் கொரோனா பாதிப்பின் விவரங்கள் முழுமையாகத் தெரியவில்லை. பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தவண்ணம் இருக்கிறது. எனவே, லாக்டௌன் நீக்கப்படுமா அல்லது தொடரக்கூடுமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. எனவே இப்போதுள்ள சூழலில், நாம் பொருளாதார வளர்ச்சி குறித்து உடனடியாகக் கணிக்கமுடியாது. அரசாங்கம் என்ன மாதிரியான முயற்சி எடுக்கிறது? வங்கிகளில் பொதுமக்களுக்கும், தொழில்முனைவோர்களுக்கும் எவ்வளவு கடன்கள் கொடுப்பார்கள் என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும். ரிசர்வ் வங்கி கவர்னரின் அறிவிப்புகளில், சிட்பி, நபார்டு மற்றும் நேஷனல் ஹவுஸிங் வங்கிகளில் கடன்கள் வழங்குவதற்காக மொத்தம் 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாகக் கூறியிருப்பதை நம்பிக்கையூட்டும் அறிவிப்பாகப் பார்க்கிறேன். மாநிலங்கள், தங்களது மொத்த வருமானத்தில் 30% வரை கடன் வாங்கலாம் என்று இருந்த வரம்பை தற்போது மேலும் அதிகரித்துள்ளார்கள். இது மாநிலங்களுக்கு பயனளிக்கக்கூடும். லாக்டௌன் முடிந்தபின்பு தொழில்துறையின் செயல்பாடு, உற்பத்தி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்துதான் நம்முடைய பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி செல்லுமா என்று கூற இயலும்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு