2020-ம் ஆண்டைக் காட்டிலும் 2021-ல் இந்தியா செய்துள்ள தங்கத்தின் இறக்குமதி இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 2020-ல் இந்தியாவின் தங்க இறக்குமதி 22 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், 2021-ல் இந்த மதிப்பு 55.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
கிட்டத்தட்ட 1,050 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2020-ல் இது 430 டன்னாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு.
இதற்கு முன் 2011-ல் 53.9 பில்லியன் டாலர் மதிப்புக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இன்னமும் கொரோனா பாதிப்புகளிலிருந்து மீளாமல் இருக்கும் சூழலில், மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள், நேர கட்டுப்பாடுகள் போன்றவை அமல்படுத்தப்படும் சூழலிலும், இந்த அளவுக்கு தங்கத்தின் இறக்குமதி உயர்ந்திருப்பது எதை உணர்த்துகிறது இதன் பின்னணி காரணம் என்ன போன்றவற்றை கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தரிடம் கேட்டோம்.
அவர் கூறியதாவது, ``கடந்த சில ஆண்டுகளாகவே தங்கத்தின் மதிப்பு பக்கவாட்டில்தான் நகர்ந்துகொண்டிருக்கிறது. பெரிய அளவில் ஏற்றமும் இல்லை, இறக்கமும் இல்லை. ஆனால், 2020-ல் கொரோனா தாக்கத்தால் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் முடங்கின.
அதனால், வேலையிழப்பு, வருமானம் குறைவு போன்ற சூழலும் காணப்பட்டது. இதனால் மக்கள் எப்போதும்போல் தங்களுடைய செலவுகளைச் செய்ய முடியாத நிலையில் இருந்தனர். மேலும், கொரோனா காலத்தில் பெரும்பாலான திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
இத்தகைய நெருக்கடிகளிலிருந்து மீண்டுவந்த நிலையில், இதுவரையிலும் அடைந்து கிடந்த மக்கள் இயல்பாகவே மீண்டும் உற்சாகத்துடன் செலவுகளை மேற்கொள்ளத் தொடங்கியிருப்பது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். மேலும், தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்திருப்பதும் அதன் மீதான ஆர்வம் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எப்போதுமே இந்தியா தங்கத்தின் நுகர்வில் முன்னணி சந்தையாக இருந்துகொண்டிருக்கிறது. எனவே, தங்கத்தின் இறக்குமதி உயர்ந்ததில் பெரிய ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

அதேசமயம் சர்வதேச நிலவரங்களும் தங்கத்தின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. அமெரிக்காவின் பணவீக்கம் கொரொனா காலத்தில் அதிகமாகி இருக்கிறது. பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பதால் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு ஃபெடரல் வங்கி உள்ளாகியுள்ளது. இதுவரை நடந்த ஃபெடரல் கூட்டங்களில் 2022-ல் மூன்று முறை வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. இது தங்கத்தின் விலையிலும் எதிரொலிக்கிறது. தற்போது சந்தை ஃபெடரல் வங்கியின் நகர்வுகள் என்னவாக இருக்கப்போகிறது என்பதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறது.
தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகியுள்ள நிலையில் ஃபெடரல் வங்கி அறிவித்தபடி வட்டி விகித உயர்வு நடவடிக்கைகளை எடுக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. கொரோனாவால் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டால் வட்டி விகித உயர்வு நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உண்டாகும். ஏனெனில், வட்டி விகிதத்தை உயர்த்தினால் அது சந்தையில் பணப்புழக்கத்தைக் குறைத்துவிடும் அபாயம் உள்ளது.
எனவே, கொரோனா தாக்கத்தால் எப்போது என்ன முடிவெடுக்கப்படும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாத நிலையே தற்போது நிலவுகிறது. தங்கம் லாபம் தருமா இல்லையா என்பதைவிடவும், அது எந்த நெருக்கடி காலத்திலும் பாதுகாப்பான சொத்து என்பதால் அதன் தேவை குறையப் போவதில்லை. நீண்டகால அடிப்படையில் தங்கம் எப்போதுமே உறுதியான போக்கைக் கொண்டிருக்கும் என்பதுதான் அதன் மீதான ஆர்வத்தைக் குறையாமல் வைத்திருக்கிறது'' என்றார்.