பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்வு தொடர்ந்து மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்திவரும் சூழலில் பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் ரூ.40 ஆயிரம் கோடிக்கும் மேல் மிச்சமாகியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து வாகன பயன்பாடு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கச்சா எண்ணெய் விஷயத்தில் நாம் பெரும்பான்மையாக இறக்குமதியை மட்டுமே நம்பியிருப்பதால் பெருமளவிலான அந்நிய செலாவணி செலவாகும் நிலை உள்ளது. மேலும், வாகனப் பயன்பாடுகளின் அதிகரிப்பால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இத்தகைய நிலையில் பல்வேறு காரணங்களை முன்வைத்து பெட்ரோலில் எத்தனாலை கலப்பது என்று திட்டமிடப்பட்டது.
பெட்ரோலில் 22.5% அளவு வரை எத்தனாலைக் கலக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சில ஆண்டுகளுக்கு முன் தெரிவித்தார். பெட்ரோலில் எத்தனாலை கலப்பது பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் நடைமுறைப்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன.

இந்நிலையில் 2025-க்குள் 20 சதவிகிதம் எத்தனால் கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல் 2022-க்குள் 10 சதவிகிதம் எத்தனால் கலக்க இலக்கு வைக்கப்பட்டது. இந்த இலக்கை பெட்ரோலிய நிறுவனங்களின் ஒத்துழைப்பினால் 5 மாதங்களுக்கு முன்பே எட்டிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பெட்ரோலில் எத்தனால் கலந்ததன் மூலமாக ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான அந்நிய செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சுற்றுச்சூழல் அடிப்படையில் பார்க்கும்போது எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டினால் 27 லட்சம் டன்னாக கார்பன் உமிழ்வு குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
2025-க்குள் 20 சதவிகித எத்தனால் கலப்பு இலக்கை எளிதில் எட்டிவிடுவோம். அதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் மீச்சமாகும். அந்தப் பணத்தை விவசாயிகளின் நலனுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தலாம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். 2025-ல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை முழுமையாக எட்டிய பிறகுதான் இதன் பலன் என்ன என்பதும் முழுமையாகத் தெரியவரும்.