Published:Updated:

75 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சி கண்ட இந்தியா... எப்படிச் சாத்தியமானது? #IndependenceDay2022

Indian Economy (Representational Image) ( AP Photo/Rajanish kakade )

1977-ம் ஆண்டு சுமார் 63% இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்து வந்தார்கள். ஆனால், 2011-ம் ஆண்டு அது 20% என்கிற அளவுக்குக் குறைந்திருக்கிறது. 1990-ம் ஆண்டிலிருந்து 2013-ம் ஆண்டு வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 17 கோடி பேர் வறுமைக் கோட்டிலிருந்து மீட்கப்பட்டார்கள்.

75 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சி கண்ட இந்தியா... எப்படிச் சாத்தியமானது? #IndependenceDay2022

1977-ம் ஆண்டு சுமார் 63% இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்து வந்தார்கள். ஆனால், 2011-ம் ஆண்டு அது 20% என்கிற அளவுக்குக் குறைந்திருக்கிறது. 1990-ம் ஆண்டிலிருந்து 2013-ம் ஆண்டு வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 17 கோடி பேர் வறுமைக் கோட்டிலிருந்து மீட்கப்பட்டார்கள்.

Published:Updated:
Indian Economy (Representational Image) ( AP Photo/Rajanish kakade )

மனித வரலாற்றில் மிகப் பெரிய செல்வமிக்கப் பொருளாதாரமாக இருந்த நம் நாடு 1947-ம் ஆண்டு காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டபோது ஆங்கிலேயர்களால் சுரண்டப்பட்டு மிகவும் ஏழ்மையான நாடாக மாறியிருந்தது. அப்படிப்பட்ட நிலையிலிருந்து இன்று வரையிலான 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் நாம் அடைந்திருக்கும் வளர்ச்சி மகத்தானதாகும். `ஆஸாதி கா அம்ரித் மஹாத்சோவ்’ கொண்டாடும் நம் நாடு அடைந்த பொருளாதார வளர்ச்சியை சற்றே பின்னோக்கிப் பார்ப்போம்.

Indian Economy (Representational Image)
Indian Economy (Representational Image)
AP Photo/Rafiq Maqbool

இந்தியா என்னும் `தங்கப்பறவை...’

கடந்த 75 ஆண்டுகளில் நாம் அடைந்திருக்கும் பொருளாதார, சமூக வளர்ச்சி மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். ஆங்கஸ் மாடிஸன் (Angus Maddison) என்கிற பொருளாதார வரலாற்றாசிரியர் `தி வோர்ல்ட் எகானமி, எ மில்லெனியல் பெர்ஸ்பெக்டிவ் (The World Economy, a Millennial Perspective)’ என்கிற தனது நூலில் இந்தியா பற்றி குறிப்பிடும்போது, ``பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குள் அடியெடுத்து வைத்தபோது உலக அளவிலான ஜி.டி.பி-யில் இந்தியாவின் பங்கு 27 சதவிகிதமாக இருந்ததால், இந்தியாவைத் `தங்கப் பறவை’ என்றே அழைத்தனர். அந்த செல்வச் செழிப்பே காலனி ஆதிக்கத்துக்கும், அந்நிய நாட்டுப் படையெடுப்புகளுக்கும் வழிவகுத்தது. பிரிட்டிஷாரின் மகுடத்தில் விலையுயர்ந்த மாணிக்கமாக இந்தியா ஜொலித்துக்கொண்டிருந்தது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், அவர்கள் நாட்டை விட்டுவிட்டு வெளியேறும்போது உலக உற்பத்தியில் இந்தியாவின் பங்கு வெறும் மூன்று சதவிகிதமாகக் குறைந்திருந்தது. அந்த அளவுக்கு அவர்களாலும் மற்றவர்களாலும் நமது நாடு சுரண்டப்பட்டிருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3 சதவிகிதத்தில் இருந்து 7.4 சதவிகிதத்துக்கு...

காலனியாதிக்கம் இந்தியாவுக்கு ஒரு பேரழிவாக இருந்தது என்றால் அது மிகையில்லை. ஏனெனில், காலனியாதிக்கத்துக்கு முன்பு நன்கு வளர்ச்சியுற்றிருந்த நம் நாட்டு தொழில்களான ஆடை உற்பத்தி, கப்பல் கட்டுதல், இரும்பு உற்பத்தி போன்ற பல தொழில்கள் ஆங்கிலேயர்களின் வருகையால் சீரழிந்தன. `டாக்கா மல்மல்’ அல்லது `குதுப் இரும்புத் தூண்’ எல்லாம் அந்தக் காலகட்டத்தில் பிரசித்திப்பெற்றிருந்தன.

 #IndependenceDay2022
#IndependenceDay2022

ஆனால், ஆங்கிலேயர்கள் இந்தியாவில் அடியெடுத்து வைத்தவுடன் அவர்களுடைய பொருள்களுக்கான சந்தையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் நமது நாட்டில் பிரபலமாக இருந்த தொழில்களுக்கு எல்லாம் பாதிப்பு ஏற்படும் வண்ணம் அனைத்து கச்சாப் பொருள்களையும் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய நாடாக இந்தியா தள்ளப்பட்டதுடன், இந்தக் கச்சாப் பொருள்களைக் கொண்டு அங்கு உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை அதிக விலைக்கு இறக்குமதி செய்யும் நிலைக்கு நம் நாடு மாறியது.

அதற்குப் பிறகு கடந்த 75 ஆண்டுகளில் பொருளாதார ரீதியில் இந்தியா பல மடங்கு வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே, கோவிட் என்கிற பெருந்தொற்றுக்கு முன்பே வளர்ச்சி விகிதமானது குறைய ஆரம்பித்தது.

 #IndependenceDay2022
#IndependenceDay2022

கோவிட் பெருந்தொற்றால் கடந்த நாற்பதாண்டுகளில் முதல்முறையாக 2020-21-ம் நிதியாண்டில் பொருளாதாரம் 7.4% அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. இருப்பினும் 2021-22-ம் ஆண்டு அந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுந்தது. இனிவரும் ஆண்டு களிலும் இந்தியாவின் வளர்ச்சிப் போக்கு தொடரும் என நம்பப்படுகிறது.

9-ம் இடத்தில் இருந்து 5-ம் இடத்துக்கு...

உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் தரவரிசை 2010-ம் ஆண்டுக்கும் 2019-ம் ஆண்டுக்குமிடையே நன்றாக வளர்ச்சி அடைந்து உலக அளவில் 9-ம் இடத்திலிருந்து 2019-ம் ஆண்டு 5-ம் இடத்துக்கு வந்திருக்கிறது.

பொருளாதார வளர்ச்சி | #IndependenceDay2022
பொருளாதார வளர்ச்சி | #IndependenceDay2022

இன்னொரு பெரிய சாதனை என்னவெனில், வறுமைக் கோட்டுக்குக்கீழ் இருந்த மக்களை அந்த நிலையிலிருந்து மீட்டெடுத்ததாகும். 1977-ஆம் ஆண்டு சுமார் 63% இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்குக்கீழே வாழ்ந்து வந்தார்கள். ஆனால் 2011-ஆம் ஆண்டு அது 20% என்கிற அளவுக்குக் குறைந்திருக்கிறது. 1990-ஆம் ஆண்டிலிருந்து 2013-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 17 கோடி பேர் வறுமைக் கோட்டிலிருந்து மீட்கப்பட்டார்கள். கடந்த 75 ஆண்டுகளில் சுமார் 50 கோடி பேர் வறுமைக் கோட்டிலிருந்து மீட்கப்பட்டு இருப்பதாக உலக வங்கி அறிக்கை கூறுகிறது. இருப்பினும், கடந்த 18 மாத பெருந்தொற்றுக் காலத்தில் பல லட்சக்கணக்கான பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டதால், வறுமைக் கோட்டின் விளிம்பில் இருந்தவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளப்பட்டிருக்கின்றனர். இது ஒரு தற்காலிகப் பின்னடைவாக இருக்கும்!

75% மக்களுக்குப் படிப்பறிவு...

மனிதவள மேம்பாட்டைப் பொறுத்தவரையில், ஆரோக்கியத் திலும் கல்வியிலும் இந்தியா தொடர்ந்து மேம்பாடு அடைந்து வருகிறது. 1981-ம் ஆண்டு வயது வந்தவர்களின் படிப்பறிவு சதவிகிதம் 40- ஆக இருந்தது; ஆனால், 2011-ம் ஆண்டு இது சுமார் 75 சதவிகிதத்தைத் தொட்டிருக்கிறது. இது போல, இந்தியர்களின் ஆயுட்காலமும் 40 ஆண்டுகளிலிருந்து 70 ஆண்டுகள் என்கிற அளவுக்கு கடந்த 59 ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது. இது போல, குழந்தை இறப்பு, தாய்மார்கள் இறப்பு சதவிகிதமும் வெகுவாகக் குறைந்திருக்கிறது.

Indian Students (Representational Image)
Indian Students (Representational Image)
AP Photo/Ajit Solanki

உள்கட்டமைப்பிலும், நிதி சார்ந்த துறையிலும் இந்தியா நன்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. மின்சாரம் உபயோகிப் பவர்களின் எண்ணிக்கையும் சமீப காலத்தில் அதிகரித் திருக்கிறது. 1995-ம் ஆண்டு இந்தியாவில் 50% மக்கள் மட்டுமே மின்சாரத்தை உபயோகிப்பவர்களாக இருந்துவந்தார்கள். இது 2010-ம் ஆண்டு 76 சதவிகிதமாகவும், இப்போது 97 சதவிகித மாகவும் அதிகரித்திருக்கிறது. அது போல, கழிப்பறைகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதுடன், மத்திய அரசின் `ஜன் தன்’ திட்டத்தின்கீழ் சுமார் 40 கோடி பேர் புதிதாக வங்கிக் கணக்கை ஆரம்பித்திருக்கிறார்கள்.

மருத்துவத் துறையில் கலக்கும் இந்தியா...

உலக அளவில் பல துறைகளில் இந்தியா தலைமைத்துவ நிலையை அடைந்திருக்கிறது. குறிப்பாக, மென்பொருள் மற்றும் வணிகச் செயல்முறை அயலாக்கம் (Business Process Outsourcing) ஆகிய தொழில் துறைகளில் இந்தியா நன்கு அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. AT Kearney என்கிற ஆலோசனை நிறுவனத்தில் `Global Location Index’-ன்படி, இந்தியா 2004-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டு வரை முதலிடத்தில் இருந்து வந்திருக்கிறது. இது தவிர, இன்றைக்கு உலக அளவில் பெரும் நிறுவனங்களாக இருக்கும் மைக்ரோ சாஃப்ட், ட்விட்டர் போன்றவற்றின் தலைமைப் பொறுப்பில் நம்மவர்கள் இருந்து வருகிறார்கள்.

Govt Staff stitching Indian Flag
Govt Staff stitching Indian Flag
AP Photo/Anupam Nath

அனைவராலும் வாங்கக்கூடிய அளவுக்கு பிராண்டு எதுவும் இல்லாத பொது மருந்துகள் (generic pharmaceuticals) தயாரிப்பில் இந்தியா உலக அளவில் முன்னணியில் இருந்து வருகிறது. கோவிட் பெருந்தொற்றின்போது தடுப்பூசித் தயாரிப்பிலும் இந்திய தனது தலைமைத்துவத்தை நிரூபித்ததோடு உலகெங்கிலும் தேவைப்பட்ட தடுப்பூசிகளில் சுமார் 50 சதவிகிதத்தை விநியோகித்து லட்சக்கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்றியிக்கிறது.

இது மட்டுமல்லாமல் அடக்கமான கார்கள் (compact cars), இருசக்கர வாகனங்கள் தயாரிப்பிலும் உலக அளவில் முன்னணியில் இருந்து வருகிறது. பால் உற்பத்தியில் இந்தியா முதலிடமும், அரிசி, கோதுமை, கரும்பு, நிலக்கடலை, காய்கறிகள். பழங்கள், பருத்தி உற்பத்தியில் இரண்டாவது மிகப் பெரிய உற்பத்தியாளராகவும் இந்தியா இருக்கிறது.

சாதி, மதம், இனம், மொழி கடந்து செயல்பட்டால்...

ஆக, கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது. குறிப்பாக, 1991-ம் ஆண்டு தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்கிற பொருளாதாரக் கொள்கைக்குப் பிறகு வளர்ச்சியானது வேகமெடுத்தது. அதற்கு முன்பாக, பொருளாதார வளர்ச்சியானது 3 - 4% என்கிற அளவிலேயே இருந்துவந்தது.

India (Representational Image)
India (Representational Image)
AP Photo/Altaf Qadri

கடந்த 75 ஆண்டுகளில் பல அறிவியல், பொருளாதார அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகின்றன.

75-ம் ஆண்டிலிருந்து 100-வது ஆண்டை நோக்கி இந்தியா பயணிக்கும்போது வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுடன் தொழில்துறையிலான வளர்ச்சி, பருவநிலை மாற்றம் என்கிற சவாலும் சேர்ந்துகொண்டிருக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் சாதி, மதம், இனம், மொழிக்கு அப்பால் சமத்துவம், சமநீதி என்கிற தளத்தில் பயணித்தால் `அனைவருக்கும் அனைத்தும்' என்கிற இலக்கை அடைவதில் சிரமம் இருக்காது என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.