நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஐந்தாவது பட்ஜெட் இது. இதற்கு முன்பு மொரார்ஜி தேசாய், மன்மோகன் சிங், யஷ்வந்த் சின்ஹா, சிதம்பரம், அருண் ஜெட்லி ஆகியோர் தொடர்ந்து ஐந்து முறை பட்ஜெட் செய்த நிதியமைச்சர்கள் ஆவர்.
2024-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால், 2024-ல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் ஆகவே அமையும்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பகல் 11 மணி முதல் 12.20 வரை பட்ஜெட் வாசித்தார். அவர் பட்ஜெட் வாசிக்கும்போது அடிக்கடி தண்ணீர் குடித்தார். தன் உடலில் நீரின் அளவு குறையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி அடிக்கடி தண்ணீரைக் குடித்துக்கொண்டிருந்தார்.
டேபிளட்டில் பட்ஜெட்...
பொதுவாக, அச்சடிக்கப்பட்ட காகிதத்தில் உள்ள பட்ஜெட்டைத் தான் முந்தைய நிதியமைச்சர்கள் வாசிப்பது வழக்கம். ஆனால், 2020-ல் கோவிட் தொற்று வந்த பிறகு அச்சடிக்கப்பட்ட காகிதத்தை விட்டுவிட்டு, டேபிளட் மூலம் பட்ஜெட் உரையை படிக்கத் தொடங்கினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2021, 2022, 2023 என்று மூன்று ஆண்டுகளாக டேபிளட்டில் பட்ஜெட் உரையை நிதியமைச்சர் படித்து வருகிறார்.
அச்சடிக்கப்பட்ட காகிதத்தின் பக்கங்களைத் திருப்பும்போது ஒரே சமயத்தில் இரு பக்கங்களைத் திருப்பிவிட வாய்ப்புண்டு. அது மாதிரியான தவறுகள் எதுவும் டேபிளட்டைப் பயன்படுத்திப் படிக்கும்போது ஏற்படுவதில்லை என்பதால், இனி இந்த முறையையே நிதி அமைச்சர் பின்பற்றுவார் என எதிர்பார்க்கலாம்!

வார்த்தையைத் தவறாக வாசித்த அமைச்சர்...
சுற்றுச்சூழலை மாசு ஏற்படுத்தும் அரசு வாகனங்கள் பயன்பாட்டிலிருது நீக்கப்படும் என நிதியமைச்சர் வாசித்தபோது, `Old Pollute’ என்கிற வார்த்தையை `Old Political’ என்று படித்துவிட்டார். இதைக் கேட்ட எதிர்க்கட்சியினர் உடனே குரலெழுப்ப, தன் தவற்றை உணர்ந்த நிதியமைச்சர் சிரித்தபடியே உடனே தன் தவற்றை சரிசெய்துகொண்டு, தவறாக சொன்ன வார்த்தையை மீண்டும் சரியாகத் திருத்திப் படித்தார்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு பெரிய அளவில் இல்லை...
பொதுவாக, பட்ஜெட் தாக்கலின்போது எதிர்க்கட்சிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, கூச்சல் போடுவது உண்டு. ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் வாசித்தபோது, எதிர்க்கட்சித் தரப்பில் இருந்து பெரிய ஆட்சேபம் எதுவும் வரவில்லை. நிதியமைச்சரை ஆட்சேபித்து ஆங்காங்கே சிலர் குரல்கள் எழுப்பினாலும், இந்த பட்ஜெட் தாக்கல் அமைதியாக நடந்து முடிந்தது. சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானியின் பெயரைச் சொல்லி கோஷம் போட்டாலும், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.