Published:Updated:

`கறுப்பு வெள்ளி; வரலாறு காணாத வீழ்ச்சி’ - பங்குச்சந்தை வர்த்தகத்தை வீழ்த்திய 5 விஷயங்கள்

பங்குச் சந்தை - கொரோனா
பங்குச் சந்தை - கொரோனா

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இதனால் இன்று காலை பங்குச் சந்தை நிறுத்தி வைக்கப்பட்டது.

உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் அச்சுறுத்தல், பங்குச் சந்தையையும் விட்டுவைக்கவில்லை. கடந்த சில நாள்களாக இந்தியா முதல் உலக பங்குச் சந்தைகள் வரை அனைத்தும் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன. இன்று காலை இந்தியப் பங்குச்சந்தைகள் மீண்டும் கடும் சரிவுடன் தொடங்கின. மும்பைப் பங்குச் சந்தை சென்செக்ஸ் 3,177 புள்ளிகள் சரிந்து, 29,600 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 966 புள்ளிகள் சரிந்து 8,624 புள்ளிகளில் வர்த்தகமானது.

கொரோனா
கொரோனா

வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே லோவர் சர்கியூட் காரணமாகப் பங்குச் சந்தை வர்த்தகங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. கடைசியாக 2008-ம் ஆண்டில்தான் தேசிய பங்குச் சந்தை வர்த்தகங்கள் நிறுத்தப்பட்டன. அதன் பிறகு தற்போது ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வீழ்ச்சி காரணமாக, மீண்டும் இன்று நிறுத்தப்பட்டது. பங்குச்சந்தை வீழ்ச்சியின் காரணமாக உலக பணக்காரர்கள் பலரும் பெரிய அளவில் இழப்பைச் சந்தித்துள்ளனர். இந்த வரலாறு காணாத பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு ஐந்து முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது.

வால் ஸ்ட்ரீட் ஸ்டாக் சரிவு!

கொரோனா வைரஸை தடுப்பதற்காக அமெரிக்காவில் பயணக்கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் வால் ஸ்ட்ரீட்டின் பங்குகள் சரியத்தொடங்கின. அமெரிக்காவின் மிகப்பெரிய 500 நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாகும் பங்குச் சந்தையான எஸ்&பி 500 (S&P500) அவற்றின் மதிப்பில் கால்பங்கை இழந்துள்ளது. 1987-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியை `black monday' எனக் குறிப்பிடுகிறார்கள். இதற்குப் பிறகு எஸ்&பி 500 தற்போதுதான் பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. பங்குச் சந்தையில் இன்று ஏற்பட்டுள்ள வீழ்ச்சி `black Friday' என கூறப்படுகிறது.

வால் ஸ்ட்ரீட்
வால் ஸ்ட்ரீட்

சிவப்பு நிறத்தில் தொடரும் ஆசியப் பங்குச் சந்தைகள்!

உலகச் சந்தைகள் சரிவைச் சந்தித்த பிறகு, ஆசியாவின் பங்குச் சந்தைகளும் செயலிழந்தன. ஜப்பானின் பங்குச் சந்தையான நிக்கி 10% வீழ்ச்சியடைந்துள்ளது. இது 2008-ம் ஆண்டுக்குப் பிறகு, தற்போது மிகவும் மோசமான நிதி நெருக்கடிக்குச் சென்றுள்ளது. அதேபோல் தென் கொரியாவின் கோஸ்டாக் பங்குகள் 8 சதவிகிதமும் சீனாவின் ஷாங்காய் பங்குகள் 4 சதவிகிதமும் சரிவடைந்துள்ளன.

கொரோனா விளைவு: எந்தத் துறை பங்குகளுக்கு 'நோ'? - சிறு முதலீட்டாளர்கள் உஷார்..!

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி!

ஸ்விஸ் பன்னாட்டு முதலீட்டு வங்கி, நடப்பு நிதியாண்டுக்கான (2020-21) இந்தியாவின் வளர்ச்சி 5.1 சதவிகிதமாகக் குறைய வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது. கொரோனா மற்றும் உள்நாட்டு உற்பத்திக் குறைவு ஆகியவையே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது, இந்த இரண்டும் இன்றைய இந்தியப் பங்குச்சந்தையில் எதிரொலித்துள்ளன.

இந்திய பங்குச் சந்தை
இந்திய பங்குச் சந்தை

கச்சா எண்ணெய் விலை!

கொரோனா வைரஸால் பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. பல நாடுகளிலும் இதே நிலைதான் நீடித்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசலுக்கான தேவை குறைந்து, உற்பத்தித் தேக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், உலக அளவில் கச்சா எண்ணெய்யின் விலையும் குறைந்துள்ளது. நேற்று ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 2% குறைந்து 32.55 டாலராக விற்பனையானது. வரும் வாரம் இது மேலும் சரிவைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 1991-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது கச்சா எண்ணெய் கடும் சரிவைச் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் முதல் உயிரிழப்பு!

கர்நாடகாவில் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்த 76 வயது முதியவரின் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சவுதி அரேபியாவிலிருந்து கடந்த பிப்ரவரி 29-ம் தேதி ஹைதராபாத்துக்கு வந்த அவருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டபோது, கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அதன்பின்னர் கடந்த 5-ம் தேதி கொரோனா அறிகுறிகளுடன் கர்நாடகாவின் கல்புர்கி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு சிகிச்சை முடித்து வீடு திரும்பிய அவர் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். கொரோனா அறிகுறி தென்பட்ட நிலையில் அவர் என்ன காரணத்துக்காக மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார் என்பது தெரியவில்லை என்கிறார்கள். கொரோனாவால் முதியவர் உயிரிழந்ததை கர்நாடகா சுகாதாரத் துறை அமைச்சர் பி.ஸ்ரீமுலு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார். இது கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள முதல் உயிரிழப்பு எனக் கூறப்படுகிறது. இதனாலும் இன்றைய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு