Election bannerElection banner
Published:Updated:

25 வயதைத் தொட்ட தேசிய பங்குச்சந்தை (NSE)... இது கடந்து வந்த பாதை தெரியுமா?

NSE
NSE

பங்குச் சந்தை என்பதே சூதாட்டம் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். இது தவறான எண்ணம் என்பதை என்.எஸ்.இ-யின் 25 ஆண்டுக்கால வரலாற்றைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தாலே தெளிவாகத் தெரியும்.

இந்தியாவில் இரண்டு பெரிய பங்குச் சந்தைகள் உள்ளன. ஒன்று, நூற்றாண்டுப் பழமையான மும்பை பங்குச் சந்தை (BSE). மற்றொன்று, தேசிய பங்குச் சந்தையான NSE. இந்த என்.எஸ்.இ. சந்தைக்கு 25 வயது பூர்த்தி ஆகியிருக்கிறது. 1995-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ம் தேதி 50 பெரும் நிறுவனங்களை உள்ளடக்கிய நிஃப்டி இன்டெக்ஸ் செயல்படத் தொடங்கியது, இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த நாளாகும்.

பங்குச் சந்தை சூதாட்டமல்ல...

பங்குச் சந்தை என்பதே சூதாட்டம் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். இது தவறான எண்ணம் என்பதை என்.எஸ்.இ.யின் 25 ஆண்டுக்கால வரலாற்றைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தாலே தெளிவாகத் தெரியும். 1996 முதலான 25 ஆண்டுகளில் பங்குச் சந்தை எத்தனையோ முறை பெரும் ஏற்றத்தையும் இறக்கத்தையும் கண்டிருக்கிறது. 2008-ல் அமெரிக்காவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, தேசிய பங்குச் சந்தைப் புள்ளிகள் பாதியாகக் குறைந்தன. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் பங்குச் சந்தை மீண்டும் மேலெழுந்துவந்து, முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்தது மறுக்க முடியாத வரலாறு.

NSE
NSE

50 பெரும் நிறுவனங்களுடன்...

1996-ல் தேசியப் பங்குச் சந்தை செயல்படத் தொடங்கியபோதே கணினிமூலம் செயல்படும் நவீன தொழில்நுட்பம் கொண்ட சந்தையாகத்தான் அது தொடங்கியது. அப்போது 50 பெரிய நிறுவனங்களின் பங்குகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நிஃப்டி இன்டெக்ஸ் 1000 புள்ளிகள் என்பதை ஆரம்பப்புள்ளிகளாகக் கொண்டு நிஃப்டி இன்டெக்ஸ் செயல்படத் தொடங்கியது.

அன்று 1,000 புள்ளிகளில் தொடங்கிய இந்த இன்டெக்ஸ், 25 ஆண்டுகள் கழித்து, இன்று 14,453 புள்ளிகள் என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதாவது, இந்தக் குறியீடு சராசரியாக ஆண்டு தோறும் 11 சதவிகிதத்துக்குமேல் வளர்ச்சி கண்டிருக்கிறது.

பல மடங்கு பெருகிய சந்தை மதிப்பு...

இதேபோல, அப்போது அந்த 50 பெரும் நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.7 லட்சம் கோடியாக இருந்தது. இன்று அது ரூ.113 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. 1996-ல் ரூ.753 கோடியாக இருந்த ஹெச்.டி.எஃப்.சி பேங்கின் சந்தை மதிப்பு, இப்போது ரூ.7,84,192 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது ஆண்டு சராசரி வளர்ச்சி 32% ஆகும். ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கின் சந்தை மதிப்பு ரூ.4 லட்சம் கோடிக்குமேல் வளர்ந்திருக்கிறது. இது ஆண்டு சராசரி வளர்ச்சி 21% ஆகும். 25 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10,945 கோடியாக இருந்தது, இப்போது ரூ.12,49,767 கோடியாக இருக்கிறது. இது ஆண்டு சராசரி வளர்ச்சி 20.9% ஆகும்.

ஏற்ற இறக்கம் எல்லாம் சந்தையில் சகஜமப்பா!
ஏற்ற இறக்கம் எல்லாம் சந்தையில் சகஜமப்பா!

கொரோனாவால் ஏறியிறங்கிய பங்குச் சந்தை...

கடந்த சில ஆண்டுகளாக சீரான வளர்ச்சியைக் கண்டு வந்த பங்குச் சந்தைகள், கடந்த ஆண்டு கொரோனா நோய் காரணமாக இறக்கத்தைச் சந்திக்க ஆரம்பித்தது. அப்போது 12,350 புள்ளிகளில் வர்த்தகாகிக்கொண்டிருந்த நிஃப்டி, சரசரவென இறங்கத் தொடங்கி, 7,600 புள்ளிகள் வரை இறங்கியது. ஆனால், இறங்கிய சில நாள்களிலேயே மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கிய நிஃப்டி அடுத்த ஓராண்டுக் காலத்தில் நன்கு உயர்ந்து 15,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமானது. கடந்த ஓராண்டுக் காலத்தில் மட்டும் நிஃப்டி 55% வருமானம் தந்திருக்கிறது.

தற்போது கொரோனா இரண்டாம் அலையால் நிஃப்டி இன்டெக்ஸ் புள்ளிகள் மீண்டும் இறங்கியிருக்கின்றன. இதுவரை சுமார் 1,200 புள்ளிகள் வரை இறக்கம் கண்டு, மீண்டும் சில நூறு புள்ளிகளுக்கு ஏற்றம் கண்டிருக்கிறது. பங்குச் சந்தை இப்போதுள்ள நிலையில் இன்னும்கூட இறங்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அதன்பின், கடந்த காலத்தில் நடந்ததுபோல, மீண்டும் பங்குச் சந்தை உயரும் என்கிறார்கள் அவர்கள்.

எனவே, பங்குச் சந்தை இறக்கம் கண்டுவரும் இந்தக் காலத்தில் நல்ல நிறுவனங்களின் பங்குகளைக் கொஞ்சம் கொஞ்சம் வாங்கி முதலீடு செய்பவர்களுக்கு பிற்காலத்தில் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு என்கிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள். பங்குச் சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்யும் ஞானமும் அனுபவமும் இல்லாதவர்கள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலமும் தொடர்ந்து முதலீடு செய்து, நல்ல வருமானம் பார்க்கலாம்.

வருமானம்!
வருமானம்!

தங்கம், ரியல் எஸ்டேட் போல எல்லா முதலீடுகளிலும் ஏற்படும் ஏற்ற இறக்கம் பங்குச் சந்தையிலும் ஏற்படும். ஆனால், நீண்ட காலத்தில் பங்குச் சந்தை முதலீட்டின்மூலம் நல்ல லாபம் பார்க்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதுதான் இப்போதைக்கு முக்கியமான கேள்வி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு