மக்களை ஏமாற்றி கோடி கோடியாகச் சம்பாதிக்க நினைத்த மோசடி மன்னன்கள், கடைசியில் நிம்மதியான மரணத்தைக்கூட அடைய மாட்டார்கள் என்பதற்கு ஓர் உதாரணமாக ஆகியிருக்கிறது பெர்னார்ட் மெட்டாஃப்பின் மரணம். 13 ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் பேரை ஏமாற்றி, 65 பில்லியன் டாலர் அளவுக்கு (அப்போதிருந்த டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின்படி, ரூ.2,82,750 கோடி) பெரும் மோசடி செய்தவர் பெர்னார்ட் மெட்டாஃப். இவர் செய்த குற்றத்துக்காக அமெரிக்க நீதிமன்றத்தால் 150 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், 10 ஆண்டுக் காலம் சிறைத்தண்டனை அனுபவித்து முடிந்த நிலையில், கடந்த 14-ம் தேதி அன்று தனது 82-வது வயதில் இறந்தார்.

யார் இந்த பெர்னார்ட் மெட்டாஃப், இவ்வளவு பெரிய தொகைக்கு எப்படி மோசடி செய்தார் என்பது நமக்குப் பாடம் புகட்டும் கதை.
கிழக்கு ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த யூதக் குடும்பத்தைச் சேர்ந்தவர் பெர்னார்ட். அவரின் குடும்பப் பின்னணி ஏழ்மை நிலையில் இருந்ததால், பள்ளியில் படிக்கும்போதே சின்னச் சின்ன வேலைகளைச் செய்து, கொஞ்சம் பணம் சம்பாதித்தார். கல்லூரியில் படித்து முடித்தவுடனே சட்டம் படிக்க நினைத்தார்; ஆனால், அவரால் அதில் கவனம் செலுத்த முடியாததால், அதைப் பாதியிலேயே விட்டுவிட்டார். தன்னுடைய பெயரில் முதலீட்டு புரோக்கிங் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார்.
60-களில் அவரது பிசினஸ் நல்ல வளர்ச்சி கண்டாலும், 70-களில் தொய்வு ஏற்பட ஆரம்பித்தது. அந்த நேரத்தில் அவரின் சகோதரர் பீட்டர், பெர்னார்ட் டுடன் இணைந்துகொண்டார். அப்போது கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துகொண்டிருக்க பங்குகளைப் பரிமாற்றம் செய்வதில் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்த ஆரம்பித்த மிகச் சிலரில் மெட்டாஃப்பும் ஒருவர். இதனால் அமெரிக்க வால் ஸ்ட்ரீட்டில் அவருக்கு மிகப்பெரிய பெயர் கிடைத்தது.
இது ஒரு பக்கமிருக்க, மெட்டாஃப்பின் மாமனார் சால் ஆல்பென் மக்களிட மிருந்து பெரும் பணத்தைத் திரட்டி, ஒரு திட்டத்தை நடத்திவந்தார். இந்தத் திட்டம் அரசிடம் முறைப்படி பதிவு செய்யப்படாததால், அதை மூட உத்தரவு போட்டது அமெரிக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம். இதில் சிக்கி யிருந்த 500 மில்லியன் டாலர் பணத்தை எடுத்து, உரியவர்களிடம் கொண்டு போய்க் கொடுத்து ‘ரொம்ப நல்லவர்’ என்கிற பெயரை வாங்கினார் மெட்டாஃப். அந்தப் பணத்தைத் தன்னிடம் தந்தால், அதற்கு நல்ல வருமானம் தருவேன் என்றும் நம்பிக்கையூட்டினார். அவர் ‘ஸ்கெட்ச்’ போட்ட மாதிரியே பலரும் பணத்தை அவரிடம் தந்தனர்.
அந்தப் பணத்தை எல்லாம் மெட்டாஃப் எந்தப் பங்கிலும் முதலீடு செய்யவில்லை. அதை அப்படியே வங்கியில் போட்டு வைத்திருந்தார். யார் பணம் கேட்டுவந்தாலும், அவர் சொன்ன லாபத்துடன் பணத்தைத் திரும்பத் தந்தார். போட்ட பணமும், குறைந்தபட்ச லாபத்துடன் திரும்ப வருவதைப் பார்த்த மக்கள், இன்னும் அதிகமான பணத்தை எடுத்துக் கொண்டு வந்து கொட்ட ஆரம்பித்தனர். இவர்களில் பிரபலங்களும் அடங்குவார்கள். உதாரணமாக, ஜுராஸிக் பார்க் எடுத்த ஸ்டீவன் ஸ்பீல்பர்க் போன்ற பல சினிமா பிரபலங் களும் மெட்டாஃப்பிடம் பெரும் பணம் கொடுத்திருந்தனர். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எல்லி வீசல் போன்றவர் களும் மெட்டாஃப்பிடம் பணம் கொடுத்திருந்தனர். தனி மனிதர்கள் மட்டுமல்ல, ஹெட்ஜ் ஃபண்டுகள், பல்கலைக்கழக அறக்கட்டளை ஃபண்டுகள் எனப் பல நிறுவனங்களும் பெரும் பணம் தந்தன.
உலகளவில் பல முக்கியமான இடங்களில் சொத்துகளை வாங்கினார். தானதர்மங்களையும் செய்ய ஆரம்பித்தார். அமெரிக்க பங்குச் சந்தை புரோக்கர்களின் சங்கத்தில் முக்கியப் பொறுப்பும் வந்து சேர்ந்தது. இப்படி மெட்டாஃப்க்கு எல்லாமே நல்லபடியாக சென்று கொண்டி ருக்க, 2008-ல் அமெரிக்காவில் லேமன் பிரதர்ஸ் வங்கி திவால் ஆனதைத் தொடர்ந்து, பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டு, தொழில் முடக்கம் கண்டது. பங்குச் சந்தை பெரும் சரிவு கண்டது. பலரும் வேலை இழந்தனர். இதனால் மெட்டாஃப்பிடம் பணம் போட்டவர்கள் அனைவரும் பணத்தைத் திரும்பக் கேட்க, அவரும் தர ஆரம்பித்தார். ஆனால், புதிதாகப் பணம் வருவது சுத்தமாக நின்று போனதால், எல்லோருக்கும் பணம் தர முடியாத நிலை ஏற்பட்டது.
அப்போதுதான் வாழ்க்கையில் முதல்முதலாகத் திணற ஆரம்பித்தார் மெட்டாஃப். இனிமேலும் சமாளிக்க முடியாது என்கிற நிலையில் தனது இரு மகன்களையும் அழைத்து, இத்தனை நாளும் பொய் சொல்லித்தான் இந்த ஏமாற்றுத் திட்டத்தை நடத்தி வந்தாகச் சொல்ல, அவரின் குடும்ப உறுப்பினர்களே அதிர்ந்து போனார்கள். மெட்டாஃப்பின் அலுவலகத்தை அமெரிக்க எஃப்.பி.ஐ ரெய்டு செய்தது. அடுத்த நாளே அவர் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டார். 2009 மார்ச் 12-ம் தேதி அன்று மெட்டாஃப் மொத்த 65 பில்லியன் டாலர் அளவுக்கு மோசடி செய்த குற்றத்துக்காக 150 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.
மெட்டாஃப் சிறைக்குச் சென்ற அடுத்த ஆண்டே அவரின் மூத்த மகன் தற்கொலை செய்துகொண்டார். தந்தை செய்த குற்றம் அவரை வருத்தி எடுத்ததே தற்கொலைக்குக் காரணமாக அமைந்தது. மெட்டாஃப்பின் இரண்டாவது மகனும் சில ஆண்டுகளில் கேன்சர் நோய் வந்து இறந்துபோனார்.
மெட்டாஃப் சிறையில் இருந்தபோது அவரின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. ‘மிகப் பெரிய குற்றத்தைச் செய்துவிட்டேன் என்பதை ஒப்புக்கொள் கிறேன். என் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு என்னை சிறையிலிருந்து விடுவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என மெட்டாஃப் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், பலரது இறப்புக்குக் காரணமான மெட்டாஃப்பை விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. வேறு வழியில்லாமல் 82 வயதில் சிறையிலேயே இறந்திருக்கிறார் மெட்டாஃப்.
சதுரங்க வேட்டையின் ஆட்ட நாயகனாக விளங்கிய மெட்டாஃப்பின் இறப்பு, மோசடி செய்ய நினைக்கிறவர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல பாடம்!
பேராசைப்படாதீர்கள் மக்களே!
மோசடித் திட்டங்களை நடத்தி அப்பாவி மக்களிட மிருந்து பணத்தைக் கொள்ளையடிக்க பலர் முயற்சி செய்தாலும், மக்களிடம் இருக்கும் பேராசைதான் அவர்களை இதுமாதிரியான மோசடித் திட்டங்களில் சிக்க வைக்கிறது. குறுகியகாலத்தில் பெரும் லாபம் சம்பாதித்து விட வேண்டும் என்று நினைப்பவர்களே இதுமாதிரியான திட்டங்களில் சிக்கி, பணத்தை இழக்கிறார்கள்! எனவே, பேராசை வேண்டவே வேண்டாம் மக்களே!