Published:Updated:

அனைத்து இளைஞர்களுக்கும் முதலீட்டுக் கல்வி!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

கடந்த அக்டோபர் மாத இறுதி நிலவரப்படி, நம் நாட்டில் பங்குகளை வாங்கி வைத்திருக்க உதவும் டீமேட் கணக்கை 1.87 கோடி பேர் தொடங்கியிருக் கிறார்கள். 2019-ல் நம் நாட்டில் வெறும் 50 லட்சம் பேர் மட்டுமே டீமேட் கணக்கை வைத்திருந்தார்கள். அது மட்டுமல்ல, இந்த 2021-ம் ஆண்டின் நவம்பர் வரையிலான முதல் 11 மாதங்களில் என்.எஃப்.ஓ என்று அழைக்கப்படும் புதிய ஃபண்ட் வெளியீட்டுத் திட்டங்களில் சுமார் ரூ.80,000 கோடிக்குமேல் முதலீடு செய்துள்ளனர். இந்த இரு தகவல்களையும் படிக்கும்போது, நம் மக்கள் பாரம்பர்யமான முதலீட்டு முறைகளிலிருந்து மெல்ல மெல்ல விலகி, மூலதனச் சந்தை முதலீட்டை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளனர் என்பது தெளிவாகிறது.

மக்களிடம் ஏற்பட்டிருக்கும் இந்த மனமாற்றம் ஓர் ஆரம்பம்தான். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 1.87 கோடி டீமேட் கணக்குகள் என்பது மிகக் குறைவு. தவிர, வங்கி டெபாசிட்டில் சுமார் ரூ.150 லட்சம் கோடிக்குமேல் இருக்க, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடு ரூ.37.33 லட்சம் கோடி என்கிற அளவிலேயே இருக்கிறது. வட்டி விகிதங்கள் கணிசமாகக் குறைந்துவரும் இந்தக் காலத்தில், வங்கி டெபாசிட்டில் இருந்து கணிசமான பணம் மியூச்சுவல் ஃபண்டை நோக்கி செல்லவே செய்யும்.

இந்தச் சமயத்தில், அரசுத் தரப்பிலிருந்து செய்தாக வேண்டிய விஷயங்கள் இரண்டு. ஒன்று, மூலதனச் சந்தையில் துளிகூட தவறு நடக்காவண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்னும் பலப்படுத்த வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன், ஹர்ஷத் மேத்தா ரூ.5,000 கோடிக்கு செய்த தில்லுமுல்லுகளால் பங்குச் சந்தையே ஆட்டம் கண்டது. அந்த அளவுக்கான மோசடி இப்போது நடக்க வாய்ப்பில்லை என்றாலும், இதில் நடக்கும் சிறு தவறுகூட மக்கள் பணத்தைப் பெருமளவில் காணாமல் அடித்துவிடும் என்பதை உணர்ந்து, அப்படி நடக் காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

இரண்டாவதாக, மூலதனச் சந்தைக்குப் புதிதாக வருபவர்கள் அனைவரும் அதில் உள்ள ரிஸ்க்குகளை சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுகிற மாதிரி, அனைவருக்கும் முதலீட்டுக் கல்வியைத் தர வேண்டும். இந்த முதலீட்டுக் கல்வியைக் கல்லூரிகளில் படிக்கும்போதே கற்றுத் தந்துவிட்டால், எதிர்காலத்தில் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை இன்னும் சிறப்பாக நிர்வாகம் செய்யும் தகுதியைப் பெறுவார்கள்.

ரியல் எஸ்டேட்டையும் தங்கத்தையும் மட்டுமே நம்பிக்கொண்டிருந்தால், பணவீக்கத்தைத் தாண்டி வருமானத்தை நம்மால் நிச்சயமாகப் பெற முடியாது. உலகின் மிகச் சிறந்த பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகளில் முதல் மூன்று இடங்களில் நம் நாடு இருக்க வேண்டுமெனில், தவறு நடக்காவண்ணம் பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் அனைவருக்கும் முதலீட்டுக் கல்வி ஆகிய இரு நடவடிக்கைகளையும் நமது மத்திய, மாநில அரசாங்கங்கள் எடுப்பது அவசியத்திலும் அவசியம்!

- ஆசிரியர்