நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வீட்டுக் கடனை சீக்கிரம் கட்டிமுடிக்க நினைப்பது சரியா? நிபுணரின் ஆலோசனை

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

Q & A - கேள்வி - பதில்

சரவணன் பழனி, இ-மெயில் மூலம்

என்னுடைய மாதச் சம்பளம் அதிகமானதால், என் வீட்டுக் கடன் தவணை 20 வருடம் என்பதை 15 வருடங்களாகக் குறைக்கலாமா என்பதற்குரிய ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அபுபக்கர் சித்திக், அனிதா மோகன்,  வி.எஸ்.சரண்சுந்தர்
அபுபக்கர் சித்திக், அனிதா மோகன், வி.எஸ்.சரண்சுந்தர்

அபுபக்கர் சித்திக், செபியில் பதிவு பெற்ற நிதி ஆலோசகர், Wealthtraits.com

‘‘சில வருடங்களுக்கு முன் மாறுபடும் வட்டி விகிதத்தில் (ஃப்ளோட்டிங் ரேட்) நீங்கள் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், இப்போது வட்டி விகிதம் குறைந்திருக்கும். நீங்கள் ஏற்கெனவே கட்டிவரும் இ.எம்.ஐ தொகையைத் தொடர்ந்து கட்டி வாருங்கள். அதுவே போதும்.

வீட்டுக் கடனை சீக்கிரம் கட்டிமுடிக்கும் எண்ணம் உங்களுக்கு வேண்டாம். வீட்டுக் கடனை சீக்கிரமாகக் கட்டிமுடித்துவிட வேண்டும் எனப் பலரும் நினைக்கிறார்கள். அது தவறான அணுகுமுறை. காரணம், வீட்டுக் கடன் உங்களுக்கு இருக்கும்போது அதன்மூலம் வரிச் சலுகை பெற முடியும். வீட்டுக் கடனை முன்கூட்டியே கட்டி முடிப்பதைவிட, அந்தப் பணத்தை பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்குங்கள். வீட்டுக் கடனுக்கு நீங்கள் செலுத்தும் வட்டியைவிட நீண்ட காலத்தில் அதிகமான லாபம் ‘பவர் ஆஃப் காம்பவுண்டிங்’ மூலம் உங்களுக்குக் கிடைக்கும். இதைக் கொண்டு உங்களுடைய எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். எனவே, கடன் காலத்தைக் குறைத்து விரைவாகக் கடனை முடிக்க வேண்டாம்.’’

முருகானந்தம், கல்லிடைக்குறிச்சி

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் க்ளெய்ம் செய்ய என் ஏஜென்ட் எனக்கு உதவவில்லை. அவர்மீது சட்டப்படி ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா?

அனிதா மோகன், நிதி ஆலோசகர், www.investmentsolution.co.in

‘‘இழப்பீடு கோருவதில் உதவி செய்யவில்லை என்பதற்காக மட்டும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. அவர் உங்களிடம் க்ளெய்ம் பற்றி ஏதாவது தவறான தகவல் அல்லது பாலிசி பிரீமியத்தில் மோசடி செய்து, அதற்கு ஆதாரம் இருந்தால் அவருடைய லைசென்ஸைக் காப்பீட்டு நிறுவனம் மூலமாக ரத்து செய்ய வாய்ப்பிருக்கிறது. இன்ஷூரன்ஸ் என்பதே காப்பீட்டு நிறுவனத்துக்கும் பாலிசி எடுத்தவருக்கும் இடையிலான ஒப்பந்தமாகும். இழப்பீட்டுக் கோரிக்கையின்போது உதவி செய்ய வில்லை என ஏஜென்ட் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. ஒரு முகவரை நீங்கள் தொடர விரும்ப வில்லை எனில், அவரை உங்கள் பாலிசியிலிருந்து விடுவித்து, நிறுவனத்தின் நேரடிக் கண்காணிப்புக்கு நீங்கள் செல்லவும். இதற்கு உங்கள் கிளை மேலாளரை அணுகலாம்.’’

ராஜன்.எஸ், இ-மெயில் மூலம்

சமீபத்தில் நான் எனது வீட்டை விற்றேன். இப்போது என் பெயரிலோ, மனைவியின் பெயரிலோ எனக்கு வீடு இல்லை. நான் ஒரு மூத்த குடிமகன் மற்றும் ஓய்வூதியதாரர். நான் செலுத்தும் வாடகைக்கு வருமான வரிச் சட்டத்தின்கீழ் எனக்கு ஏதாவது நிவாரணம் கிடைக்குமா?

வி.எஸ்.சரண்சுந்தர், சார்ட்டர்டு அக்வுன்டன்ட்

‘‘நீங்கள் வரிச் சலுகை பெற முடியும். வருமான வரியைச் செலுத்துபவர் நிறுவனம் எதிலுமிருந்து எந்தவொரு வீட்டு வாடகைபடியும் (ஹெச்.ஆர்.ஏ) பெறவில்லை. மேலும், அவரது பெயரில் அல்லது அவரின் மனைவி / மைனர் குழந்தைக்கு எந்த வீடும் இல்லை என்ற நிலை யில், வரிதாரர், வருமான வரிப் பிரிவு 80ஜிஜி பிரிவின் கீழ், செலுத்தும் வாடகைக்கு உச்சவரம்புகளுக்கு உட்பட்டு வரிச் சலுகை பெற முடியும். அதாவது, மாதத்துக்கு அதிகபட்சம் ரூ.5,000-க்கு வரிச் சலுகை கிடைக்கும்.’’

சி.மகேஷ், சென்னை -11

புதிய பங்கு வெளியீட்டுக்கு எப்போது விண்ணப்பம் செய்வது நல்லது?

எஸ்.வெங்கட்ராமன்,  சி.பாரதிதாசன்,  ஶ்ரீகாந்த் மீனாட்சி
எஸ்.வெங்கட்ராமன், சி.பாரதிதாசன், ஶ்ரீகாந்த் மீனாட்சி

எஸ்.வெங்கட்ராமன், நிறுவனர், 6sigmawealth.com

‘‘புதிய பங்கு வெளியீட்டுக்கு (ஐ.பி.ஓ) நல்ல வரவேற்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு, கடைசி நாள் பிற்பகலில் விண்ணப் பிப்பது நல்லது. நல்ல வரவேற்பு என்பது வெளியிடப்படும் பங்குகளை விட பலமடங்கு பங்குகள் கேட்டு விண்ணப்பம் செய்யப் படுவதாகும். அப்படிப் பல மடங்கு விண்ணப்பங்கள் வந்திருக்கும்பட்சத்தில், அந்தப் பங்கின் விலை அதிக விலைக்கு பட்டியலிடப் படுவதுடன், விலை அதிகமாக உயரவும் வாய்ப்புள்ளது.”

மல்லிகா கணேஷ், திருச்செந்தூர்

கோல்டு சேவிங்க்ஸ் ஃபண்டில் எங்கே, எப்படி முதலீடு செய்வது?

சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர்

“கிட்டத்தட்ட அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் கோல்டு சேவிங்க்ஸ் ஃபண்டை வழங்கி வருகின்றன. இந்த ஃபண்டில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கிளைகள், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு உதவும் இணையதளங்கள் மூலம் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டுகளில் திரட்டப்படும் தொகை அதே நிறுவனத்தின் கோல்டு இ.டி.எஃப் அல்லது சர்வதேச கோல்டு இ.டி. எஃப்பில் முதலீடு செய்யப் படும். இந்த ஃபண்டுகள் மூலம் கிடைக்கும் வருமான மானது தங்கத்தின் விலை ஏற்றத்தைப் பொறுத் திருக்கும். கோல்டு சேவிங்க்ஸ் ஃபண்டுகளில் குறிப்பிட்ட இடைவெளியில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய லாம். எஸ்.ஐ.பி முறையில் மாதம் குறைந்தபட்சம் 100 ரூபாய்கூட முதலீடு செய்ய முடியும். ஆனால், குறைந்தது 60 மாதங்களுக்குத் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். பணத் தேவையிருந்தால் 100 ரூபாயைக்கூட நீங்கள் எடுக்க முடியும். முதலீடு செய்த 15 நாள்களில் பணத்தை வெளியே எடுத்தால் 1% வெளியேறும் கட்டணம் செலுத்த வேண்டிவரும். இவை நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்.”

குமரப்பன், நங்கநல்லூர், சென்னை

சில ஆண்டுகளுக்கு முன் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தேன். குடும்பச் சிக்கல் காரணமாகத் தொடர முடியவில்லை. வரும் மார்ச் முதல் மீண்டும் முதலீடு செய்யப்போகிறேன். நான் பழைய ஃபண்டில் அதே ஃபோலியோ எண்ணில் முதலீடு செய்யலாமா?

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

“கண்டிப்பாகச் செய்ய லாம். அதற்கு முன்பாக, நீங்கள் அந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு அந்த ஃபோலியோ எண் சரியானதா என்று உறுதிசெய்து கொள்ளுங்கள். அதற்கான ஸ்டேட்மென்ட் ஒன்றையும் வாங்கிக் கொள்ளுங்கள். பின்னர், எஸ்.ஐ.பி பதிவு விண்ணப்பத்தில் உங்களது ஃபோலியோ எண்ணைக் குறிப்பிட்டு அதே ஃபோலியோவில் முதலீடுகளைத் தொடரக் கோரினால், நீங்கள் விரும்பியபடி முதலீடு செய்ய முடியும்.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com