இந்திய பங்குச் சந்தை இன்று காலை முதலே இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதுதான் என்று கூறப்படுகிறது.
இதனால் இன்று காலையில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் அளவில் இறக்கம் கண்டு வர்த்தகமானது. அதிலிருந்து மெள்ள இறக்கமானது குறைந்து மதிய நேரத்துக்கெல்லாம் சென்செக்ஸ் 850 புள்ளிகள் சரிவிலும் நிஃப்டி 250 புள்ளிகள் சரிவிலும் வர்த்தகமானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பங்குச் சந்தையின் எல்லா துறை குறியீட்டெண்களும் இறக்கத்தில் வர்த்தகமாயின. குறிப்பாக ஐடி, மெட்டல், எண்ணெய் மற்றும் எரிவாயு, மூலதன பொருட்கள், பார்மா, ரியல் எஸ்டேட், பொதுத் துறை வங்கி ஆகிய குறியீட்டெண்கள் 1 சதவிகித அளவுக்கு இறக்கத்தை சந்தித்தன. மேலும் பிஎஸ்இ மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகளும் 1 சதவிகித அளவுக்கு இறக்கம் கண்டன.
பட்டியலான பங்குகளில் 2665 பங்குகள் விலை சரிவை சந்தித்தன. ஆனால் 438 பங்குகள் விலை ஏற்றம் கண்டன. 72 பங்குகள் விலை மாற்றமில்லாமல் வர்த்தகமாயின.
ரஷ்யா-உக்ரைன் விவகாரம் தொடங்கிய பிப்ரவரி 16-ம் தேதியிலிருந்து இதுவரை பங்குச் சந்தையில் ஏற்பட்ட இறக்கத்தினால் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு ரூ.9.1 லட்சம் கோடி குறைந்துள்ளது.
இந்தியப் பங்குச் சந்தைகள் மட்டுமல்ல சர்வதேச சந்தைகளிலும் ரஷ்யா-உக்ரைன் விவகாரம் பாதிப்பை ஏற்படுத்தி இறக்கத்தை உண்டாக்கியது. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்வுக்கும் இந்த பதற்றமான சூழல் காரணமாகியுள்ளது.

அமெரிக்கா ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. ஆனால் அதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. ரஷ்யா, அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில், பைடன் - புதின் சந்திப்பு நடைபெறுமா, அல்லது ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும். அதுவரையிலும் போர் பதற்றம் நீடிக்கும். இது பங்குச் சந்தைகளிலும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் நிபுணர்கள்.