Union Budget 2021: இறக்குமதி வரியை அதிகரிக்கத் திட்டம்... ஸ்மார்ட்போன்களின் விலை உயருமா?

கொரோனா காலத்தில் வெளியாகும் பட்ஜெட் என்பதால், மக்களின் கவனம் முழுவதும் மத்திய பட்ஜெட்டின் மீதுதான் இருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் வந்துவிட்டாலே, பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டால் என்னென்ன பொருள்கள் விலை உயரும் என்கிற கேள்வி எழுந்து மக்களிடையே பரபரப்பு உருவாகிவிடும். அந்த வகையில், மத்திய பட்ஜெட் 2020-2021 மீது அனைவருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதற்குக் காரணம், கொரோனா நோய் தொற்று காரணமாக, இதுவரை இந்தியா சந்தித்திராத மிகப்பெரிய ஊரடங்கை 2020-ம் வருடம்தான் சந்தித்திருப்பதுதான். கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதிக்குப் பிறகு, பிறப்பிக்கப்பட்ட தொடர் ஊரடங்கு காரணமாக மக்களும், தொழில் துறையினர்களும் ஸ்தம்பித்துப் போனார்கள்.

நாட்டின் பொருளாதாரமே அதலபாதாளத்துக்குச் சென்றது. வரி வருமான இழப்பு, நிதிப் பற்றாக்குறை, மருத்துவச் செலவினங்கள் அதிகரிப்பு என மத்திய அரசாங்கள் பொருளாதார ரீதியாகப் பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்திருக்கிறது. இந்த நிலையில், வெளியாகும் பட்ஜெட் என்பதால், மக்களின் கவனம் முழுவதும் மத்திய பட்ஜெட்டின் மீதுதான் இருக்கிறது.
இந்த நிலையில், வரவிருக்கும் பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன், எலெக்ட்ரானிக் காம்போனன்ட்ஸ், எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஃபர்னிச்சர்கள் உட்பட 50 பொருள்கள் மீதான இறக்குமதி வரி 5-10% வரை அதிகரிக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அரசுத் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவில் அதிக பொருள்களை உற்பத்தி செய்து, இந்தியாவின் தேவைகளை இங்கேயே பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைக் குறைக்க வேண்டும் என்கிற நோக்கில் 'Prime Minister Narendra Modi's self-reliant India campaign' என்கிற பிரசாரத் திட்டத்தின்படி, இறக்குமதி பொருள்கள் மீதான இறக்குமதி வரியை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
மேலும், கொரோனா காலத்தில் ஏற்பட்ட வருமான இழப்புகளை சரிசெய்வதற்காக, ரூ.20,000 - ரூ.21,000 கோடி வரை அதிக வருமானத்துக்கு வழிவகை செய்ய மத்திய அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும், இறக்குமதி வரியை அதிகப் படுத்துவதன் மூலம் வரி வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், உள்ளூர் உற்பத்தியும் பெருகும் என அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது.
தற்போதைய தகவலின்படி, மேலே சொல்லப்பட்டிருக்கும் பொருள்களுக்கு இறக்குமதி வரி 5-10% அதிகரிக்கப்பட்டால், பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு ஸ்மார்ட் போன், ஃபர்னிச்சர்கள் போன்ற பொருள்களின் விலை உயர அதிக வாய்ப்புகள் இருக்கிறது. கடந்த பட்ஜெட்டில் இந்தப் பொருள்களுக்கு 20% வரை இறக்குமதி வரியை மத்திய அரசாங்கம் அதிகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.