Published:Updated:

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காண்பது இந்தியப் பொருளாதாரத்துக்கு நல்லதா, கெட்டதா?

oil refinery in Deer Park, Texas
oil refinery in Deer Park, Texas ( AP / Gregory Bull )

இதுநாள்வரை அமெரிக்கா - ரஷ்யா பனிப்போர், அமெரிக்கா - சீனா வர்த்தகப்போர் போன்றவற்றை கவனித்துவந்த உலகம், தற்போது சவுதி அரேபியா - ரஷ்யா இடையிலான கச்சா எண்ணெய் விலைக்குறைப்பு யுத்தத்தை உற்றுநோக்குகிறது.

மார்ச் 6-ம் தேதி, வியன்னாவில் நடைபெற்ற ஒபேக் கூட்டமைப்பு நாடுகள் மற்றும் கூட்டமைப்பில் இல்லாத கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கிடையே நடைபெற்ற கருத்தரங்கில்தான் இந்த யுத்தம் தொடங்கியது.

சவுதி அரேபியா
சவுதி அரேபியா

தற்போது உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலால், உலக நாடுகளிடையேயான வணிகத் தொடர்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விலைவாசி உயர்ந்துவருகிறது. மக்கள் பெருமளவு கூடுவது தவிர்க்கப்படுவதால், ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்குக்காக வெளியிடங்களுக்குச் செல்வதும் பொருள்களை வாங்குவதும் குறைந்துவருகிறது. பொதுப்போக்குவரத்து, விமானப்போக்குவரத்து போன்றவை பெருமளவு குறைக்கப்பட்டுவருகின்றன. இதன்காரணமாக பெட்ரோல், டீசலுக்கான தேவை குறைந்து, உற்பத்தித் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது குறித்து முடிவெடுக்க, மார்ச் 5 மற்றும் 6-ம் தேதிகளில், ஒபேக் கூட்டமைப்பு நாடுகளும், கூட்டமைப்பில் இல்லாத கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளும் வியன்னாவில் கூடினார்கள். மார்ச் ஆறாம் தேதி, ஒபேக் - ஒபேக் கூட்டமைப்பில் இல்லாத நாடுகளின் கலந்தாய்வில்தான், சவுதி அரேபியாவும் ரஷ்யாவும் முட்டிக்கொண்டன. அந்தக் கருத்தரங்கில், கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கலாமென்ற சவுதி அரேபியாவின் கோரிக்கையை ரஷ்யா ஏற்கவில்லை. இந்த மோதல் காரணமாக எந்த முடிவும் எட்டப்படாமலே வியன்னா கூட்டம் முடிவடைந்தது.

கச்சா எண்ணெய் விலை
கச்சா எண்ணெய் விலை
Vikatan Infographics

ரஷ்யாவின் செயல்பாட்டால் பெரிதும் கடுப்பான சவுதி அரேபியா, ரஷ்யாவுக்கு பதிலடியாக உற்பத்தியை அதிகரிக்க முடிவெடுத்தது. நாள் ஒன்றுக்கு 9.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை உற்பத்திசெய்துவந்த சவுதி அரேபியா, வரும் ஏப்ரல் 1 முதல், தனது உற்பத்தியை 12.3 மில்லியன் பேரல்களாக உயர்த்தப்போவதாக அறிவித்தது. அதோடு நில்லாமல், பிற நாடுகளிடம் கச்சா எண்ணெயை வாங்கிக்கொண்டிருக்கும் நாடுகள், தங்களிடம் வாங்கினால் 20% சலுகை விலையில் விற்பனை செய்ய முன்வந்தது. இந்த அறிவிப்பு வெளியானதுமே சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 50% வரை குறைந்தது. கடந்த பிப்ரவரியில், பேரல் ஒன்றுக்கு 70 டாலர்வரை விற்பனையாகிக்கொண்டிருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது 30+ டாலர்களுக்கு இறங்கியுள்ளது. கடந்த 1991-ம் ஆண்டுக்குப் பிறகு கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்படும்போதெல்லாம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையிலும் மாற்றம் கொண்டுவரப்படும். ஆனால், கச்சா எண்ணெய் விலை ஏறும்போது, உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை ஏற்றுவதும், விலை குறையும்போது மிகக்குறைவான அளவே பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதும் வாடிக்கையாக உள்ளது.

பெட்ரோல் விலை
பெட்ரோல் விலை
டீசல் விலை
டீசல் விலை

2016 மார்ச் மாதத்தில், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 3,225.78 ரூபாயாக இருந்தபோது, பெட்ரோல் விலை லிட்டருக்கு 59.13 ரூபாயாக இருந்தது. அடுத்த ஆண்டு, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 3,993.51 ரூபாயாக அதிகரிக்கவும், பெட்ரோல் விலையை 74.28 ரூபாயாக அதிக அளவு உயர்த்திவிட்டார்கள். கடந்த 10 நாள்களில், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 3,431 ரூபாயிலிருந்து 2,549 ரூபாயாகக் குறைந்தபின்னும் பெட்ரோல் விலை 74.28 ரூபாயிலிருந்து 73.02 ரூபாயாக மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை வீழ்ச்சியால் கிடைக்கும் பலன் குறைவாகவே இருக்கும் என்கிறார், பொருளாதார நிபுணர் வ.நாகப்பன். இதுகுறித்து தெரிவிக்கையில், ``நம்முடைய முக்கியமான இறக்குமதியாக கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் உள்ளன. இவையே நம்முடைய இறக்குமதியில் 50% இடம்பிடிக்கின்றன. தற்போது, கச்சா எண்ணெய் விலை பாதிக்குப்பாதி குறைந்துள்ளது. இது, நமக்கு சாதகமான செய்திதான். கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு நாம் ஏற்கெனவே செய்திருந்த ஒப்பந்தம் அதிக விலையில் இருந்தாலும், இனி செய்யக்கூடிய ஒப்பந்தம் குறைந்த விலையில் இருக்கும். இதனால் நடப்புக்கணக்கு பற்றாக்குறை மிகப்பெரிய அளவில் குறையக்கூடும்.

பொருளாதார நிபுணர் வ.நாகப்பன்
பொருளாதார நிபுணர் வ.நாகப்பன்
vikatan

கச்சா எண்ணெய் விலைகுறைவு காரணமாக, பெட்ரோல், டீசல் விலையை 10% குறைத்தோமானால், போக்குவரத்துக்கான செலவும் குறையக்கூடும். அது, விலைவாசியைக் குறைக்க உதவும். அதன் தொடர்ச்சியாக பணவீக்கம் குறையும். பணவீக்கம் குறையும்போது, பணத்துக்கான தேவை குறைந்து, வட்டி விகிதம் குறையும். இது, தொழில்துறையினருக்கு சாதகமானதாக இருக்கும். இந்த சங்கிலித்தொடர் நிகழ்வு முறையாக நடந்தால், நமக்கு பலனும் நல்லவிதமாக இருக்கும். ஆனால், இதெல்லாம் நடக்குமா என்பது நம் கையில் கிடையாது. அரசாங்கம் எடுக்கும் முடிவுகளைச் சார்ந்தது. விலைவாசி கட்டுக்குள் இருப்பது, நடப்புக்கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் இருப்பது, பொருள்களின் உற்பத்தி விலை குறைவது, வட்டி விகிதம் குறைவது போன்றவை அனைத்துமே நம்முடைய பொருளாதாரம் வலுவாக வளர்ந்துகொண்டிருக்கும் நிலையில் இருந்தால், பலனும் மிகப்பெரிய அளவில் இருக்கும். ஆனால், தற்போது நம்முடைய பொருளாதாரம் நலிவடைந்த நிலையில் இருப்பதால், இந்த கச்சா எண்ணெய் விலைக்குறைப்பின் பலனும் குறைவாகவே இருக்கும்" என்றார்.

2020-ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலான காரணிகளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு முக்கியமானதாக இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்கா- இரான் இடையிலான வர்த்தகப் போர் காரணமாக, கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரல் 90 டாலர் என்ற அளவுக்கு உயருமென்று கணிக்கப்பட்டது. இந்த நிலையில், சவுதி அரேபியா - ரஷ்யா வர்த்தகச் சண்டையால் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பது இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

பொருளாதார நிபுணர் ஷ்யாம் சேகர்
பொருளாதார நிபுணர் ஷ்யாம் சேகர்

இதன் காரணமாக, பெட்ரோல் விலை குறைய வாய்ப்புள்ளதா எனக்கேட்டபோது, அதற்கான வாய்ப்பு மிகக்குறைவு எனக்கூறுகிறார், பொருளாதார நிபுணர் ஷ்யாம் சேகர். அவர், ``நம் அரசு ஆண்டுக்கு 8 லட்சம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. தற்போது கச்சா எண்ணெய் விலை 30%-40% வரை குறைந்திருப்பதால், சுமார் 2-3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குச் சேமிக்க முடியும். எனவே, இது நமக்கு நல்லதொரு விஷயம்தான்.

ஆனால், நம்முடைய ஓ.என்.ஜி.எஸ்.சி போன்ற கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும். அமெரிக்காவிலேயே கச்சா எண்ணெய் பேரல் விலை 40 டாலருக்குமேல் குறைந்தால், அங்குள்ள நிறுவனங்கள் திவாலாகிவிடும். இதுபோல, ஓ.என்.ஜி.சி நிறுவனமும்கூட பிரச்னையைச் சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதைப்போலவே மிகவும் குறைவதும்கூட பிரச்னைதான். கச்சா எண்ணெய் விலை ஓரளவு சீராக இருப்பதே நல்லது.

Oil
Oil

தற்போது, நாம் பயன்படுத்தும் பெட்ரோலுக்கான விலையில், 17 ரூபாய் மத்திய அரசுக்கான வரி, 15 ரூபாய் மாநில அரசுக்கான வரி, 8 ரூபாய் சாலை & உள்கட்டமைப்புக்கான வரி, 7 ரூபாய் சிறப்பு கலால் வரி எனக் கழிந்ததுபோக, பெட்ரோல் விலையான 72 ரூபாயில் 47 ரூபாய் வரியாகவே கழிந்துவிடுகிறது. இதைத்தாண்டி, சுத்திக்கரிப்பு நிறுவனங்கள் லிட்டருக்கு 1 ரூபாய் முதல் 2 ரூபாய் வரைதான் லாபம் பார்க்கக்கூடும். எனவே, கச்சா எண்ணெய் விலை குறைவதால் அவர்கள் குறைக்கக்கூடிய விலை 5 ரூபாய் முதல் 10 ரூபாய்க்குள்தான் இருக்கும்.

பெட்ரோல் நுகர்வு அதிகமாக இருக்கும்போது உள்கட்டமைப்பு அதற்கேற்ப இருக்க வேண்டும். இல்லையென்றால், அதன் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும். எனவே, உள்கட்டமைப்புக்கான ஒதுக்கீடு அவசியமானது. விலைக்குறைப்பு என்பது அதிக அளவில் இருக்காது. அடுத்ததாக, பயன்பாட்டுக்கு வரக்கூடிய எலெக்ட்ரிக் வாகனங்களின் விலைதான் பெருமளவு குறைக்கப்படும். அப்படி குறைக்கப்பட்டால், பெட்ரோல் வாகனங்களிலிருந்து எலெட்க்ரிக் வாகனப்பயன்பாட்டுக்கு மாறுவது அதிகரிக்கும். இன்னும் ஏழெட்டு ஆண்டுகளுக்குள் இந்த மாற்றம் பெருமளவு நடந்துவிடும். அப்படி மாறும்போது, பெட்ரோல் மூலமாகக்கிடைக்கும் வரி வருமானம் குறையக்கூடும். எனவே, தற்போது பெட்ரோலுக்கான தேவை இருக்கும்போதே உள்கட்டமைப்பை மேம்படுத்துவது நல்லது" என்றார்.

ஏற்கெனவே, எதிர்பார்த்த அளவில் ஜிஎஸ்டி வசூல் இல்லாதது நமக்கு ஒரு வருமான இழப்பாக உள்ளது. தொடர்ந்து இறக்கத்தில் பயணிக்கும் நமது பங்குச் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் விலக்கப்படுவதும் நமக்கு பெரிய இழப்பாக உள்ளது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலைக்குறைப்பின் பலன் முழுவதையும் பொதுமக்களுக்கு அளிப்பதற்கு மத்திய அரசு தயக்கம் காட்டுமென்று தெரிகிறது. எனவே, விலையைச் சிறிது குறைப்பதுபோல் குறைத்து, கலால் வரியை அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு