Published:Updated:

குடும்ப பட்ஜெட்டை சமாளிக்க வருங்கால வைப்பு நிதியிலிருந்து இப்போது பணம் எடுக்கலாமா? #Corona

பணம்
பணம் ( Representational Image )

கொரோனா பாதிப்புக்காகப் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகைத் தொகையைப்பெற பி.எஃப் அலுவலகத்துக்குச் செல்லத் தேவையில்லை. முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம், பணியாளர் மற்றும் மத்திய அரசு ஆகிய மூவரின் பங்களிப்பில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1951, நவம்பர் 15-ம் தேதி, தொழிலாளர் வைப்பு நிதி ஆணையின்கீழ் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச்சட்டம் 1952 இயற்றப்பட்டு, விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டன. 2016-17 கணக்கீட்டின்படி இதில் மொத்தம் 19.34 கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த வருங்கால வைப்புநிதிச் சேமிப்பு, அரசுக்கும் பணியாளருக்கும் பயனுள்ளதாக உள்ளது. குறிப்பாக, திடீர் வேலையிழப்பு போன்ற தருணங்களில் இந்தச் சேமிப்பு, பணியாளர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

தற்போது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பெரும்பாலான நிறுவனங்கள் லாக்டெளனில் மூடப்பட்டுள்ளன. ஏற்கெனவே 21 நாள் லாக் டௌன், தற்போது மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 'இந்தச் சூழலில் வருமானமின்றி தவிக்கும் பணியாளர்களின் துயர் துடைப்பதற்காகத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கணக்கிலிருந்து 75 சதவிகிதம்வரை பெற்றுக்கொள்ளலாம்' என்று கடந்த மார்ச் 26-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.

இந்தத் திட்டத்தின் விதிமுறைகளில் தற்போது கொரோனா லாக் டௌனால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் நலனுக்காகத் திருத்தம் செய்துள்ளார்கள். இதன்படி, பணியாளரின் 3 மாத அடிப்படைச்சம்பளம் + அகவிலைப்படி அல்லது அவரது கணக்கில் உள்ள தொகையில் 75 சதவிகிதம் தொகை, இதில் எது குறைவோ அதை விண்ணப்பித்துப் பெறலாம். கொரோனா லாக்டெளன் நிதிச் சிக்கலுக்காக பி.எஃப் கணக்கிலிருந்து பணத்தைப் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு 3 முதல் 7 நாள்களுக்குள் உரிய தொகை அளிக்கப்படும் என்று பி.எஃப் அலுவலகத்தில் தெரிவித்தனர்.

குடும்ப பட்ஜெட்டை சமாளிக்க வருங்கால வைப்பு நிதியிலிருந்து இப்போது பணம் எடுக்கலாமா? #Corona

ஆனால், மத்திய அரசின் அறிவிப்பின்படி 75% வைப்பு நிதித்தொகை என்பது கணக்கு தொடங்கி சில காலமே ஆனவர்களுக்கு மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. இதை ஓர் உதாரணத்துடன் பார்க்கலாம். ஒருவருடைய சம்பளம் + அகவிலைப்படி 40,000 ரூபாய் எனக்கொள்வோம். அதேபோல், அவரது தொழிலாளர் வைப்பு நிதியில் 4 லட்சம் ரூபாய் இருப்பதாகக் கொள்வோம். அவருடைய மூன்று மாதச்சம்பளம் + அகவிலைப்படி தொகை 1,20,000 ரூபாய் வரும். அவரது பி.எஃப் தொகையிலிருந்து 75% எனும்போது 3 லட்சம் வரும். அந்த சூழலில், அரசு அறிவித்துள்ளபடி, குறைந்தபட்சத்தொகையான 1,20,000 ரூபாய்தான் அவருக்குக் கிடைக்கும்.

இந்த வருங்கால வைப்பு நிதியிலிருந்து, தொழிலாளர்கள் அவர்களுடைய தனிப்பட்ட தேவைகளான, திருமணம், குழந்தைகளின் கல்வி, புதிய வீடு கட்டுவது, ஓய்வுக்காலம் உள்ளிட்ட தேவைகளுக்காக ஒரு குறிப்பிட்ட சதவிகித அளவுக்குப் பணம் கிளெய்ம் செய்யலாம். அதுமட்டுமல்லாது, பணியாற்றும் நிறுவனம் ஏதேனும் காரணத்துக்காக 15 நாள்களுக்கும் மேலாக மூடப்பட்டு, அதற்கு இழப்பீடும் கிடைக்காமல் இருக்கும்பட்சத்தில், வருங்கால வைப்பு நிதியில், பணியாளரின் பங்களிப்புத்தொகை முழுவதையும், அதற்கான வட்டியுடன் பெற இயலும்.

2 மாதங்களுக்குமேல் சம்பளம் தர இயலாத சூழலில், நொடித்த நிலையில் ஒரு நிறுவனம் இயங்கும்பட்சத்தில், அதன் பணியாளர், வருங்கால வைப்பு நிதியில் அவரது பங்களிப்புத்தொகை முழுவதையும், அதற்கான வட்டியுடன் பெற இயலும். அதே நிறுவனத்தில் 6 மாத காலத்துக்கும் மேலாக, சம்பளமே இல்லாமலும், உரிய இழப்பீடும் இல்லாமலும் பணியாற்ற நேர்ந்தால், வருங்கால வைப்பு நிதியில், நிறுவனத்தின் பங்களிப்புத்தொகையையும் 100% பெற்றுக்கொள்ளலாம்.

இதுபோன்ற சலுகைகளில்தான் தற்போது கொரோனா பாதிப்புக்காகப் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகைத் தொகையைப்பெற பி.எஃப் அலுவலகத்துக்குச் செல்லத் தேவையில்லை. முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு முன்னதாக, உங்களுடைய பான் கார்டு, வங்கி எண் மற்றும் ஆதார் கார்டு மூன்றுக்கும் தற்போது பணியாற்றும் நிறுவனத்திடம் கே.ஒய்.சி ஒப்புதல் பெறவேண்டும். பின்னர், இ.பி.எஃப்.ஓ நிறுவனத்தின் இணையதளமான www.epfindia.gov.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இ.பி.எஃப்.ஓ இணையதளம்
இ.பி.எஃப்.ஓ இணையதளம்
vikatan

இணையதளத்தின் முன்பக்கத்தில், 'Services' என்பதில் ‘For Employees’ மெனுவை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து, இடதுபக்கம், கீழாக உள்ள 'Services' என்ற மெனுவில் ‘Know Your Claim Status’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்ததாக, 'Click here to get redirected to passbook application.' என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து, உங்களுடைய 'UAN number' பதிய வேண்டும். அடுத்து அதற்குரிய பாஸ்வேர்ட் பதிய வேண்டும். அடுத்து, 'PF number', 'establishment code', PF office மற்றும் state உள்ளிட்ட விவரங்களைக் கொடுக்க வேண்டும். பின்னர் ‘Submit’ கொடுத்தால் உங்களுக்கான பி.எஃப் கிளெய்ம் தொகையைக் காட்டும். பின்னர் உங்களுடைய வங்கிக்கணக்குக்கு உரிய தொகை வந்துசேரும்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்துக்கு அரசாங்கம் அளிக்கும் வட்டி விகிதம், ஒவ்வோர் ஆண்டும் அந்த ஆண்டின் பொருளாதாரச்சூழலை அனுசரித்து மாற்றியமைக்கப்படுகிறது. இந்தச் சேமிப்பு 1952-ம் ஆண்டு தொடங்கப்பட்டபோது இதற்கான ஆண்டு வட்டி விகிதம் 3 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், சிறிது சிறிதாக உயர்த்தப்பட்டு 1975-1976 ஆண்டில் 7 சதவிகிதமாக உயர்ந்தது. 1989-2000 ஆண்டில் அதிகபட்சமாக 12% வட்டி விகிதமாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் சிறிதுசிறிதாகக் குறைக்கப்பட்டு 2018-2019 ஆண்டில் 8.65 சதவிகிதமாக உள்ளது.

பி.எஃப் வட்டி விகிதம்
பி.எஃப் வட்டி விகிதம்
vikatan

பி.எஃப் பணத்தை எடுப்பது நல்ல விஷயமா என்று ஆடிட்டர் கே.ஆர்.சத்யநாராயணனிடம் கேட்டபோது, "கொரோனாவால் வருமானம் பாதிக்கப்பட்டு பெரிதும் சிரமப்படும் பணியாளர்களின் நலனுக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித்திட்டதிலிருந்து லாக்டௌன் காலகட்டத்துக்காகப் பணத்தை எடுக்குமுன் இது மிகவும் அவசியம்தானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அரசாங்கம் சலுகை கொடுத்துள்ளது என்பதற்காகவே எடுக்க வேண்டியதில்லை.

அடுத்தடுத்து, குழந்தைகளின் மேற்படிப்பு, திருமணம், வீடு வாங்குவது போன்ற தவிர்க்க முடியாத பெரிய இலக்குகள் இருக்கும்பட்சத்தில் அதற்கான பணத்தேவையையும் கணக்கில்கொள்ளுங்கள். இப்போது பணத்தை எடுக்கும்போது, வைப்பு நிதியில் சேமிப்பு குறைந்துவிடும். இறுதியில் கிடைக்கும் தொகையும் குறைவாக இருக்கும். ஓய்வுக்காலத்துக்கு பாதிப்பாக அமையக்கூடும். தற்போது மூன்று மாதத்தவணை தள்ளிவைப்பு சலுகை அளித்துள்ளார்கள். வேறு ஏதேனும் கடன்கள் இருந்தாலும் வருங்கால வைப்பு நிதியில் பணத்தை எடுக்காமலேயே சமாளிக்க முடியுமா என்பதைப் பாருங்கள். கட்டாயம் எடுக்க வேண்டியிருந்தால் எடுக்கலாம்" என்றார்.

ஆடிட்டர் கே.ஆர்.சத்யநாராயணன்
ஆடிட்டர் கே.ஆர்.சத்யநாராயணன்
vikatan

நாம் சம்பளம் பெறும்போதே அதில் ஒரு பகுதி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்படுவதால் அந்தச் சேமிப்பு ஓர் இழப்பாக நமக்குத் தெரியாது. அதற்கு 8 சதவிகிதத்துக்கும்மேல் வட்டி கிடைப்பதும் பெரிய விஷயமே. வங்கி வைப்பு நிதிக்குக்கூட அவ்வளவு வட்டி தற்போது கிடையாது. எனவே, வருங்கால வைப்பு நிதித்தொகையை எடுத்துக் கையாளும்போது அது மிகவும் அவசியமான தேவையா என்று கருத்தில்கொள்வது மிகவும் முக்கியம்.

அடுத்த கட்டுரைக்கு