Published:Updated:

இறக்குமதி சரிவு, விலை கடும் உயர்வு... தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா? #VikatanSpecial

தங்கம்
தங்கம்

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகப் பொருளாதாரத்தில் சரிவு ஏற்படும் என உலக வங்கியும், பொருளாதார நிபுணர்களும் திட்டவட்டமாகச் சொல்கிறார்கள். இதனால் முதலீட்டாளர்கள் பணத்தைப் பாதுகாக்க கோல்ட் ஈ.டி.எஃப், கமாடிட்டி எனத் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

எப்போதும் முதலீட்டாளர்களின் சாய்ஸாக இருக்கும் பங்குச்சந்தை, ஈக்விட்டி, மியூச்சுவல் ஃபண்டு போன்றவை நெகட்டிவ் வருமானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, தங்கம் மட்டும் நடப்பு ஆண்டில் 26% வருமானத்தைக் கொடுத்திருக்கிறது.

கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவு, ஒரு சவரன் (8 கிராம் - 22 கேரட்) தங்கத்தின் விலை 35,384 ரூபாயைத் (13.04.2020-ம் தேதி நிலவரப்படி) தொட்டுள்ளது. மற்றவற்றில் முதலீடு செய்தவர்களை விட, தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் அதிக லாபம் பெற்றுள்ளனர் என்றும், விண்ணை முட்டும் தங்கத்தின் விலையேற்றத்திற்குக் கொரோனா வைரஸ்தான் முக்கியக் காரணம் என்றும் நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

திடீர் விலை உயர்வுக்கு என்ன காரணம்?

அமெரிக்காவில் ஏற்றுமதி குறைந்து, முதலீட்டில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டின் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. முதலீடுகளை அதிகரிக்க, அமெரிக்காவின் மைய வங்கி, கடந்த ஒரு நிதி ஆண்டிற்குள் மூன்று முறை வட்டிவிகிதத்தைக் குறைத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் டாலரின் மதிப்பிலும் ஏற்றம் உள்ளது. 

Gold Price
Gold Price
#VikatanInfographics

டாலரும் தங்கமும்!

டாலர் மதிப்பும், தங்கத்தின் விலையும் தொடர்புடையவை. டாலர் மதிப்பு ஏறும்போது, தங்கத்தின் மதிப்பு குறையும். அதேபோல, டாலர் மதிப்பு குறையும்போது, தங்கத்தின் விலை அதிகரிக்கும். ஆனால் கொரோனா பதற்றத்தினால் இந்த முறை டாலர் மற்றும் தங்கம் என இரண்டின் மதிப்பும் ஒருசேர ஏறியுள்ளது.

அமெரிக்க அரசாங்கம் பெரிய தங்க உற்பத்தியாளராக இல்லாத போதிலும், உலகத்தில் உள்ள தங்கத்தின் ஒரு பெரிய பகுதியை இருப்பில் வைத்திருக்கிறது. அதனால் தங்கம் விலையைத் தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்காவே இருக்கிறது. மற்ற நாடுகளைப் போல அமெரிக்க டாலரில்தான், இந்தியாவும் தங்கத்தை இறக்குமதி செய்கிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இப்படி தொடர்ந்து குறைந்தால், அதிக ரூபாய் கொடுத்து டாலர் வாங்க வேண்டி இருக்கும். எனவே, நிறுவனங்கள் சரக்குகள் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்ய அதிக டாலர்களைச் செலுத்த வேண்டியிருக்கும். அரசாங்கமும் தங்கத்தை வாங்குவதற்காக அதிக டாலர்களைச் செலுத்த வேண்டியிருக்கும். இதன் விளைவாக தங்கத்தின் விலை உயர்கிறது. மாறாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும் போது. தங்கத்தை இறக்குமதி செய்ய, அதிக டாலர்களை செலவு செய்யத் தேவையில்லை. இதனால் தங்கத்தின் விலை குறைகிறது.

Gold investments
Gold investments
633.1 மெட்ரிக் டன்
இந்தியாவில் தங்க கையிருப்பு

அதுமட்டுமல்லாமல் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கும் தங்கத்திற்கும் இடையிலான தொடர்பு முக்கியத்துவம் வாய்ந்தது. 2008–ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகள் டாலரின் மதிப்பை அதிகரிக்கச் செய்தன. இதனால் தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்டது. ஆனால் இப்போது அடுத்தடுத்து, அமெரிக்க அதிபர் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள், அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதிக்கலாம் என்ற கருத்துகள் மேலோங்கி வருகின்றன. இதனால் டாலரின் மதிப்பு குறையும், தங்கத்தின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

தற்போது உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகப் பொருளாதாரத்தில் சரிவு ஏற்படும் என உலக வங்கியும், பொருளாதார நிபுணர்களும் திட்டவட்டமாகச் சொல்கிறார்கள். இதனால் முதலீட்டாளர்கள் பணத்தைப் பாதுகாக்க கோல்ட் ஈ.டி.எஃப், கமாடிட்டி எனத் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இதனாலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

தங்கத்தின் தேவையும், இறக்குமதி சரிவும்!

கொரோனா பீதியால் கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.  அவர்களின் வருமானம் குறைந்துள்ளது. எனவே அத்தியாவசியப் பொருள்கள் தவிர்த்து மற்ற ஆடம்பரப் பொருள்களின் மேல் மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

இறக்குமதி வரி அதிகரிப்பு... தங்கம் விலை உயருமா?

குறிப்பாக,  ஆபரணத் தங்கம் மீதான மக்களின் மோகம்  குறைந்துள்ளது. சாதாரண மக்கள், கையில் இருக்கும் ரொக்கத்தை, அப்படியே வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் தங்கம் இறக்குமதி பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. 

2018-ல் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு : 31.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

உலகின் 2-வது மிகப் பெரிய தங்கம் இறக்குமதியாளராக உள்ள இந்தியா, கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 25 டன் தங்கத்தை மட்டுமே இறக்குமதி செய்திருக்கிறது. 2019 மார்ச் மாதத்தில் 93.24 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்திருந்தது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மார்ச் மாதத்தில் தங்க இறக்குமதி மிகப் பெரிய சரிவைச் சந்தித்திருக்கிறது.

இந்தியா
உலகின் 2-வது மிகப்பெரிய தங்க இறக்குமதியாளர்.

மதிப்பு அடிப்படையில், மார்ச் மாதத்தில் 63 சதவிகித வீழ்ச்சியுடன் 1.22 பில்லியன் டாலர் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இந்த ஏப்ரல் மாதத்திலும் தங்கம் விற்பனை முடங்கியுள்ளதால் இந்தியாவின் தங்கம் இறக்குமதி இன்னும் அதிகமான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு முடிந்து, தேவை அதிகரிக்கும் போது மக்கள் தங்கத்தை வாங்க ஆரம்பிக்கும்போது, இறக்குமதியில் இதே நிலை தொடர்ந்தால், நிச்சயமாகத் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயரும்.

தங்கம் இறக்குமதி
தங்கம் இறக்குமதி

லாபம் தரும் தங்க முதலீடு!

"ஒவ்வோர் ஆண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. தங்கத்தின் இருப்பு குறைவாக இருப்பதால், அந்தப் பொருள், மற்ற எல்லா முதலீடுகளைக் காட்டிலும் அதிக லாபத்தைத் தரும் முதலீடாக இருக்கிறது. சர்வதேசச் சந்தையில், தங்கத்தில் முதலீடு செய்வதுதான் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுவதால், தங்கத்திற்கான சந்தை பெரும்பாலும் சரிவைச் சந்திப்பதில்லை.

ஒவ்வொரு குடும்பமும் சுமார் 400 கிராம் தங்கம், அதாவது 50 பவுன் தங்கத்தைச் சேமித்து வைக்கவேண்டும் என்பது ஆலோசகர்களின் பொதுவான கருத்து. அனைவராலும் 50 பவுன் சேர்க்க முடியாமல் போனாலும், 25 பவுன் தங்கத்தையாவது சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் நகையாக வாங்கி வைத்துக்கொள்வது சிறந்தது.

சுமார் 400 கிராம்
ஒவ்வொரு குடும்பமும் சேர்க்க வேண்டிய தங்கம்.

வங்கி, அடகு கடை மற்றும் கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்களில், நகைகளுக்குத்தான் உடனடியாக கடன் கிடைக்கும். உங்களின் உடனடி தேவைக்குக் கடன் வேண்டும் என்ற நேரத்தில் தங்க நகை மட்டும்தான் கைகொடுக்கும்'என்பது நிபுணர்களின் கருத்து

பேரிடர்களின் போது தங்கம் தரும் தைரியம்!

தங்கம் என்பதைப் பணமாகப் பார்த்தால், அதில் முதலீடு செய்வது எவ்வளவு நன்மை என்பது புலப்படும். உங்கள் குடும்பத்தில், உங்கள் தாத்தா, பாட்டி தங்கம் வாங்கியபோது இருந்த விலையை விட தற்போது, தங்கத்தின் விலை, பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதைக் கவனியுங்கள். அவர்கள் வாங்கிய தங்கத்தை இன்றும் நீங்கள் வங்கியில் வைத்துக் கடன் பெற முடியும்.

அதனால், மஞ்சள் உலோகமான தங்கத்திற்கு எப்போதும் மதிப்பு உயர்ந்துகொண்டேதான் இருக்கும். அதிலும், நீங்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும், நகையை அணிந்து கொண்டு செல்லலாம். நீங்கள் அங்கு சென்று, தங்கத்தை நல்ல விலையில் பணமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

தங்கத்துக்கு இணையான தங்க முதலீடுகள்!

தங்கத்தைக் கட்டித்தங்கமாகவோ, ஆபரணத்தங்மாகவோ அல்லது நாணயமாகவோ வாங்கி வைக்க வேண்டும் என்கிற எந்தவோர் அவசியமும் இல்லை. நிஃப்டி கோல்ட் என்ற பாண்டு பத்திரங்கள் (NIFTY GOLD BOND), கோல்டு ஈ.டி.எஃப் போன்ற தங்கத்துக்கு இணையான தங்க முதலீடுகள் பல இருக்கின்றன. இதில் முதலீடு செய்வதாலும் தங்கத்தின் விலை ஏறும்போது, இந்த வகை முதலீடுகள் லாபம் பெற்றுத்தரும்.

தங்கத்தை `பேப்பர் கோல்டு' ஆக வாங்குவதால் கூடுதல் நன்மை... எப்படி?

முதலாவதாக நமது பட்டியலில் இருப்பது கோல்டு ஈ.டி.எஃப் (Gold ETFs). கடந்த ஆண்டு இந்த கோல்டு ஈ.டி.எஃப் 18.4% லாபத்தினைக் கொடுத்துள்ளது. அதிலும் 2010 முதல் இது சிறப்பான லாபத்தினைக் கொடுத்து வருகிறது. இது தங்கத்துடன் நேரடி தொடர்புடன் உள்ளதால், இது முதலீட்டாளர்களுக்குச் சிறந்த முதலீட்டு வாய்ப்பாகும். 

பிசிகல் தங்கத்தினை விட கோல்டு ஈ.டி.எஃப் சிறந்தது. ஏனெனில் இது என்.எஸ்.இ (National Stock exchange) சந்தையில் புழங்குவதால், சந்தையில் வாங்கலாம், விற்கலாம். பிசிகல் கோல்டுடன் ஒப்பிடும்போது செலவுகள் குறைவும். ஏனெனில் கோல்டு ஈ.டி.எஃப் மின்னணு வடிவில் நம்மிடம் இருக்கும். ஆக எல்லாவிதத்திலும் பிசிகல் தங்கத்தினை விடச் சிறந்தது. 

Top 10 gold reserved countries
Top 10 gold reserved countries

இதை நீங்கள் பணமாக்கும் போது, தங்கமாகவோ அல்லது தொகையாகவோ பெறுவீர்கள்.  விருப்பம் உங்களுடையதாகத்தான் இருக்கும். தங்கத்தின் விலையுடன் நேரடியாகத்தொடர்பு கொண்டுள்ளதால், கோல்டு ஈ.டி.எஃப் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்.

79% அதிகரித்திருக்கும் கோல்டு ஈ.டி.எஃப் முதலீடு!

̀`கடந்த சில வருடங்களாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில், டெப்ட் மற்றும் பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் மக்கள் அதிகமாக முதலீடு செய்து வந்தார்கள். ஆனால் இப்போது தங்கம் அதிக லாபத்தைத் தந்திருப்பதால், முதலீட்டாளர்களின் கவனம் கோல்டு ஈ.டி.எஃப் திட்டங்களின் மீது திரும்பியிருக்கிறது. இதனால் இந்தத் திட்டங்களில் 79% வரை முதலீடு அதிகரித்திருக்கிறது. 

ரூ.7,949 கோடி
கோல்டு ஈ.டி.எஃப் நிறுவனங்கள் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு.

இந்தத் திட்டங்களில் தற்போது முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளதால், கடந்த மார்ச் மாத முடிவில், இந்த ஃபண்டு நிறுவனங்கள் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு 7,949 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 4,447 கோடி ரூபாயாக இருந்தது" என மியூச்சுவல் ஃபண்டு கட்டுப்பாட்டு அமைப்பான ஆம்ஃபி (Association of Mutual Funds in India (AMFI)) தெரிவித்துள்ளது.

Sovereign Gold Bond
Sovereign Gold Bond

கவனம்... கவனம்... கவனம்!

இந்தியாவில் தங்கம் கிடையாது; அதை இறக்குமதி செய்யவேண்டும். அதுவும் டாலரில் பணத்தைச் செலுத்தித்தான் தங்கத்தை இறக்குமதி செய்யமுடியும். தங்கநகை வாங்குவது என்பது பெரிய முதலீடு. இதற்கு அரசாங்கம் பல விதமான வரிகளை விதிக்கிறது. அதோடு, செய்கூலி செலவு அதிகம் எனப் பல விதமான இடர்பாடுகள் இருப்பதால், உங்கள் பணத்திற்கான தங்கத்தை வாங்கும்போது கவனமாக இருக்கவேண்டும். 

Gold
Gold

வங்கிகளில் தங்கக் காசுக்கு நகைக்கடன் தருவதில்லை என்பதால் தங்கத்தை நகையாக வாங்கலாம். குறிப்பாக, ஹால்மார்க் உள்ள தங்கத்தை வாங்கவேண்டும். நகைகளை வாங்கும்போது, முடிந்தவரை, கல் வைத்த நகைகளை வாங்குவதைத் தவிர்க்கலாம். வங்கிகளில் அடகு வைத்தால், கல் நகையில், கல்லின் எடைக்கு மதிப்பு இல்லை. நகைக் கடன் என வரும்போது வைரக் கற்களுக்குக் கூட மதிப்பில்லை என்பது நினைவில் இருக்கட்டும்.

தங்க நகை வாங்கும்போது சேதாரமாகும் தங்கத் துகள்களை நம்மிடம் தருவார்களா?  #DoubtOfCommonMan

தங்கத்தை வாங்கலாமா?

``தங்கத்தின் விலை உயர்கின்ற போது, பொது மக்களிடம் பதற்றம் அதிகரிக்கத் தொடங்குகிறது. குழந்தைகளின் திருமணம் மற்றும் பிற நல்ல காரியங்களுக்காக தங்கம் வாங்குவதற்கு விரும்புகிறவர்கள் மிக விரைவாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

Representational Image
Representational Image

இப்படித்தான் 2013-ம் ஆண்டு தங்கத்தின் விலை ரூ.35 ஆயிரத்தைத் தாண்டியபோது, பலரும் தங்கம் வாங்கினர். ஆனால், அதற்குப் பிறகு சர்வதேச சந்தையில் நிகழ்ந்த பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. கொரோனா பதற்றத்தினால், தற்போதும் அதே தவறை மக்கள் செய்துவிடக் கூடாது. விரைவாகச் சென்று தங்கத்தை வாங்குவதைவிடத் தேவையின் அடிப்படையில் வாங்க முடிவெடுப்பது நல்லது. தங்கத்தை வாங்கத் தொடங்கினால், அதன் விலை மேலும் அதிகரிக்கத் தொடங்கும்.

ரூ.35,384
13.04.2020-ம் தேதியில் ஒரு பவுன் தங்கத்தின் விலை.

விலையைக் காண மாதங்களை கிளிக் செய்யுங்கள்!

அதனால், தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் சர்வதேச நிலைமையை ஆழமாகக் கண்காணித்த பின்னர், இது பற்றி முடிவு செய்வது நல்லது. சிறிய அளவில் தங்கம் வாங்க முடிவு செய்வோர், அவர்களுக்கு இருக்கிற தேவையின் அடிப்படையில் வாங்கிக் கொள்ளுங்கள் " என்பது தங்க நிபுணர்களின் தங்கமான அட்வைஸ்.

அடுத்த கட்டுரைக்கு