இறக்குமதி தங்கத்தின் மீதான வரி ரத்து... இலங்கையின் அதிரடி முடிவு இந்தியாவை பாதிக்குமா?

அண்டை நாடான இலங்கையில் வரியைக் குறைக்கும்போது இந்தியாவில் குறைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளனவா, இந்தியாவுக்கு இதுபோன்ற தளர்வுகள் அவசியமா?
கோவிட்-19 பெருந்தொற்று உலகத்தையே ஆட்டுவிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். நோய் பரவலால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. இதன் காரணமாகத் தங்கத்தின் விலை விண்ணைத் தொட்டு நிற்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை அதிகரிக்கக் கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

இந்த நிலையில் இலங்கையில் ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபட்சே. இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு விதிக்கப்படும் 15 சதவிகித வரியையும் ரத்தினக் கற்கள் மற்றும் தங்க நகை உற்பத்தியாளர்கள் லாபத்தின் மீதான 14 சதவிகித வரியையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
இலங்கையில் தங்க நகை உற்பத்தியாளர்களுக்கு 1971-ம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டிருந்த வரிச்சலுகை, 2017-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட வருமான வரிக்கொள்கையில் ரத்துசெய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வரிச்சலுகையின் காரணமாகத் தங்க நகையின் விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு வர்த்தகர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு விலை குறையும்பட்சத்தில் ஒரு லட்சத்துக்கு ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை தங்கத்தின் விலை சரிவதற்கான வாய்ப்பு உள்ளது என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்டை நாடான இலங்கையில் வரியைக் குறைக்கும்போது இந்தியாவில் குறைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளனவா, இந்தியாவுக்கு இதுபோன்ற தளர்வுகள் அவசியமா என்றும் கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தரிடம் கேட்டோம்.
``இலங்கையில் தங்கம் சட்டத்துக்கு விரோதமாக அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. அதைத் தடுக்கும் வகையில்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரிகளில் தளர்வு அறிவித்தால் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுவது குறைந்து, சட்டரீதியான இறக்குமதி அதிகரிக்கும். இந்தியாவில் அதுபோன்ற நிலை மிகவும் குறைவுதான். தங்கம் என்பது நமது அரசாங்கத்தின் கையிருப்புக்கான நல்ல முதலீடாக இருக்கிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் வரும்போதுதான் நமக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தியாவில் வாய்ப்பில்லை!
இறக்குமதி வரியை 10 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என்று தங்க வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்தபோது, மத்திய அரசு அதை 12.5 சதவிகிதமாக அதிகரிக்கவே செய்தது. இந்திய அரசின் நோக்கமே தங்க இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்பதுதான். அதனால் அதற்கு சலுகைகள் அளிக்க வாய்ப்பில்லை. அதற்குப் பதிலாகத்தான் தங்க முதலீட்டுப் பத்திரங்களை வெளியிடுகிறது அரசு. விலையின் ஏற்ற இறக்கங்கள் அனைத்தும் அந்த முதலீட்டில் பிரதிபலிக்கிறது. அதனால் இறக்குமதி தங்கம் அவசியமற்றது என்பதுதான் அரசின் நிலைப்பாடு.

நடப்பாண்டின் முதல் இரண்டு மாதங்களில் கடந்த 25 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இறக்குமதி குறைந்துள்ளது. அதனால்தான் அந்நியச் செலவாணி கையிருப்பு அதிகமாக உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து தங்க நகைகள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இறக்குமதியை எந்தளவுக்கு குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்கிறோம் என்பதில்தான் ஒரு நாட்டின் பொருளாதார பலம் அடங்கியிருக்கிறது" என்றார்.
தங்கத்தின் விலை குறையுமா?
``இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டதால், அது தங்கத்தின் விற்பனை விலையில் எதிரொலிக்க வேண்டும். ஆனால், அதை நகை உற்பத்தியாளர்கள் செய்வார்களா என்பது தெரியாது. 2008-ம் ஆண்டு சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது இந்தியாவில் இருச்சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்களுக்கான கலால் வரி குறைக்கப்பட்டது. வரியைக் குறைக்கும்போது அது வாடிக்கையாளர்களுக்கு உதவியாக இருக்கும். குறைவான விலையில் வாகனங்களை வாங்க முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சில நிறுவனங்கள் மட்டுமே எதிர்பார்த்தபடி விலையைக் குறைத்தன. ஆனால், பல நிறுவனங்கள் விலையைக் குறைக்கவேயில்லை. ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்குவதால்தான் வரியைக் குறைக்க வலியுறுத்தினோம். வரி குறைப்பை லாபத்தில் ஈடுகட்டிக்கொள்கிறோம். பல ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளதால் இந்தத் தளர்வைப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்று தெரிவித்துவிட்டனர்.
இந்தியாவை பாதிக்குமா?
இந்தியாவைப் பொறுத்தவரை தங்க இறக்குமதியை ஆதரிப்பதில்லை. உள்நாட்டு உற்பத்திக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சூரத்தில் நவரத்தினக் கற்கள் மற்றும் தங்க நகைகள் உற்பத்தி அதிகம் நடைபெறுகிறது. இலங்கையில் வரிச்சலுகை, தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் நகைகளின் விலை குறையுமானால், சர்வதேச சந்தையில் இந்திய நகைகளைவிட இலங்கை நகைகள் விலை குறைவாகக் கிடைக்கும். இதனால் இந்திய நகைகளுக்கான தேவை குறையும். இலங்கை நகைகளுக்கான தேவை அதிகரிக்கும். இது நமது உற்பத்தியாளர்களைப் பாதிக்கவே செய்யும்" என்றார்.

இன்றைய தங்கம் விலையைத் தெரிந்துகொள்ள: Gold Rate Today
இன்றைய வெள்ளி விலையைத் தெரிந்துகொள்ள: Silver Rate Today
இலங்கையின் இந்த முடிவு இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்துமா என்று விவரிக்கிறார் முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன்.
``முதலில் இலங்கை அரசின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் பயன்பெறும் நோக்கில் வெளியிடப்பட்டது அல்ல. தங்கம், நவரத்தினக் கற்களைப் பொறுத்தவரை இலங்கை வாடிக்கையாளர்கள் துறையைச் சார்ந்தது அல்ல. உற்பத்தியாளர்கள் துறையைச் சேர்ந்தது. இலங்கையில் கண்டி நகரத்தில் நவரத்தினக் கற்கள் மற்றும் நகை உற்பத்தி அதிகளவில் நடைபெறுகிறது. அதிகமாக உற்பத்தி செய்து உலக நாடுகளில் அதிகம் விற்பனை செய்வதற்காக இதைச் செய்கின்றனர்.

பெருந்தொற்று காலத்தில் ஒடிந்து போயிருக்கும் இந்தத் துறையை மீட்டெடுப்பதற்காக இதுபோன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இறக்குமதி வரியைக் குறைக்கும்போது நகைகள் உருவாக்குவதற்கான செலவு குறையும். இதனால் சர்வேதச சந்தையில் அதிகமான விற்பனையில் ஈடுபட்டு பிற போட்டியாளர்களுடன் இலங்கையும் களத்தில் நிற்க முடியும்.
இலங்கையில் தங்க வர்த்தகர்களுக்கான வருமான வரியையும் குறைத்துள்ளது மோசமான நடவடிக்கை என்கிறார் நாகப்பன். இதுபற்றி அவர் மேலும் பேசும்போது, ``எந்த அரசாவது தொழில் நிறுவனங்களுக்கு வருமான வரியைக் குறைக்குமானால் அது ஏழைகளுக்கு எதிரான நடவடிக்கையாகும். வருமான வரி விலக்கு அளிப்பது என்பது ஒரு நாட்டின் பிற்போக்குத்தனமான நடவடிக்கையாகும்.
இந்த அறிவிப்பால் அந்நாடு பயனடைந்தால்கூட இந்தியாவில் இதைப் பின்பற்றக் கூடாது. வருமான வரி செலுத்துவதில் ஏய்ப்பு நடக்கிறது. அந்தப் பிரச்னையைச் சரிசெய்ய முடியவில்லை என்பதால் வரியைக் குறைத்து அதிகமானவர்கள் வருமான வரியை செலுத்துவதை ஊக்குவிப்பதற்காக இப்படிப்பட்ட அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

இது மிகவும் தவறான அணுகுமுறை. ஒரு அரசால் வருமான வரியை முறையாக வசூலிக்க இயவில்லை என்பதற்காக வரி விகிதத்தைக் குறைப்பது தவறான நடவடிக்கை. ஒரு குறிப்பிட்ட நபர் சம்பாதித்த வருமானத்துக்கு வரி போடப்படுகிறது. இது விற்பனை வரியோ, ஜி.எஸ்.டி போன்ற வரிகளோ அல்ல. ஓர் அரசு ஏழ்மையிலிருக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தால் மறைமுக வரிகளை நீக்க வேண்டும். வருமான வரி என்பது எந்த வகையிலும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களையும் ஏழைகளையும் பாதிப்பதில்லை" என்றார்.