Published:Updated:

பி.எஃப் வட்டி தருவதில் மாற்றம்... சம்பளதாரர்களுக்கு பாதிப்பா?

EPFO
EPFO

8.5% வட்டியை மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை. ஆனால், இன்றைய சூழ்நிலையில் இரண்டு தவணைகளில் வழங்கும்படியான நிலையே உள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் தலைமை வாரியம் அதன் சந்தாதாரர்களுக்கு வழங்கும் வட்டியை இரு தவணைகளாக வழங்க முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் நாடு முழுக்க உள்ள 6 கோடி சம்பளதாரர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்கிற கேள்வி பிறந்துள்ளது.

வருங்கால வைப்பு நிதி அலுவலகம் 2019-2020-ம் ஆண்டுக்குச் செலுத்த வேண்டியுள்ள தொகைக்கு 8.5% வட்டி வழங்க நிதித் துறைக்குப் பரிந்துரை செய்துள்ளது. 8.15% வட்டி முதலீடு செய்த வருமானத்திலிருந்தும் 0.35% மூலதனத்திலிருந்தும் வழங்கப்பட உள்ளதாகப் புதன்கிழமை அறிவித்துள்ளது.

8.5% வட்டியை மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை. ஆனால், இன்றைய சூழ்நிலையில் இரண்டு தவணைகளில் வழங்கும்படியான நிலையே உள்ளது!
விரிஜஸ் உபாத்யாயா, பாரதிய மஸ்தூர் சங் செயலாளர்

வாரியத்தின் சில உறுப்பினர்கள் இந்த வட்டி இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என்று கூறினாலும், இத்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தொழிலாளர் நலத்துறையின் அறங்காவலர்கள் 8.5% வட்டி அளிக்கப் பரிந்துரை செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

2019-2020 நிதி ஆண்டுக்குள் 8.15% வட்டி முதலீட்டு வருமானத்திலிருந்தும், மீதமுள்ள 0.35% வட்டி 31-12-2020-க்குள் பரிவர்த்தனை வணிக நிதி முதலீட்டை விற்பதால் கிடைக்கும் லாபத்திலிருந்தும் கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 0.35% வட்டி வணிகநிதி முதலீட்டை விற்பதால் கிடைக்கும் லாபத்திலிருந்து என்று கூறப்பட்டுள்ளதால், இந்த வட்டி நிச்சயம் கிடைக்கும் என்பது உறுதி இல்லை. ஏனெனில், லாபம் இல்லாவிட்டால் இந்த 0.35% வட்டி கிடைக்காது என்று சொல்கிறார்கள் சிலர்.

“8.5% வட்டியை மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை. ஆனால், இன்றைய சூழ்நிலையில் இரண்டு தவணைகளில் வழங்கும்படியான நிலையே உள்ளது. நிதிச் சந்தை சாதகமாக இல்லாததால் சில முதலீடுகளை இப்போது விற்க விரும்பவில்லை. எனவே, இந்த இரண்டு தவணையில் வட்டி வழங்கும் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது” எனப் பாரதிய மஸ்தூர் சங் செயலாளரும் வருங்கால வைப்பு நிதி வாரிய உறுப்பினராகவும் உள்ள விரிஜஸ் உபாத்யாயா கூறியுள்ளார்.

EPFO
EPFO

‘‘வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் வருமானம் எதிர்பார்த்ததைவிட மார்ச் 2020-ல் குறைந்துவிட்டது. ரூ.2,700 கோடி முதல் ரூ.3,500 கோடி முதலீடுகளை விற்பதால் லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பால் நிறுவனத்தின் வருமானம் எதிர்பார்த்த அளவைவிடக் குறைவாகவே உள்ளது’’ என்று ஓர் அதிகாரி கூறியுள்ளார். இந்த நிலை தொடர்ந்தால் சம்பளதாரர்களுக்கு என்ன பாதிப்பு வருமோ என்கிற அச்சம் எல்லோர் மனதிலும் எழுந்திருக்கிறது.

வருங்கால வைப்பு நிதி இயக்குநர் குழு சந்தோஷ் கங்வார் தலைமையில் கூடியுள்ளது. ``2019-20-ம் ஆண்டுக்கான பரிந்துரை விதிவிலக்காக உள்ளது. டிசம்பர் 31-க்குள் விற்கப்படும் முதலீட்டில் இருந்து கிடைக்கும் லாபம், கணக்கு வருடம் 2019-20-ல் சேர்க்கப்படும். இது வழக்கமான நடைமுறையிலிருந்து மாறுபட்டது” என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு