Published:Updated:

`குஜராத் மாடல் எனச் சொல்ல அங்கு ஒன்றுமில்லை!' -ஸ்டாலினின் பொருளாதார ஆலோசகரின் புத்தகம் சொல்வது என்ன?

ஜான் ட்ரெஸ்
ஜான் ட்ரெஸ்

ஆதார் அடையாள அட்டை, புல்லட் ட்ரெயின் முன்மொழிவு ஆகியவை குறித்து தனது கடுமையான விமர்சனத்தைப் பதிவு செய்திருக்கிறார் ஜான்.

தமிழக அரசால் சில நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்ட ஐவரில் ஒருவர், ஜான் ட்ரெஸ். இவர் பெல்ஜியம் நாட்டில் பிறந்திருந்தாலும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து, நமது நாட்டு பொருளாதார நிலையையும், விளிம்புநிலை மக்களின் பிரச்னைகளையும் கூர்ந்து அவதானித்து களஆய்வுகள் செய்து, அதன் துணையோடு காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆலோசனைகள் வழங்கிவந்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டம், நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவற்றின் சூத்ரதாரி இவர்தான்.

நீண்ட நாள்களாக வளர்ந்த தாடி, குர்தா, பைஜாமா, தோளில் தொங்கும் ஜோல்னாபை என எப்போதும் காட்சி தருபவர் ஜான். இவர் 2000-மாவது ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டு வரை எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் `சென்ஸ் அண்ட் சாலிடாரிட்டி: ஜோலாவாலா எகானமிக்ஸ் ஃபார் எவ்ரிஒன் (Sense and Solidarity – Jholawala Economics for Everyone)’ என்கிற புத்தகம் ஆகும். இந்தப் புத்தகத்தில் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல்களாக இருக்கும் வறட்சி, பட்டினி, ஏழ்மை, கல்விக்கூடங்களில் வழங்கப்படும் மதிய உணவு, சுகாதாரம், குழந்தை வளர்ச்சி மற்றும் ஆரம்பக் கல்வி, வேலை உத்தரவாதம், உணவுப் பாதுகாப்பு, பொது விநியோக முறை ஆகியவை குறித்தும் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம், தொழில்நுட்பம் (ஆதார் போன்ற பொதுநலக் கொள்கைகளை உந்துவதில் அதற்கிருக்கும் பிடிப்பும்), போரும் சமாதானமும் (அணுஆயுதத் தடுப்பும் காஷ்மீரும்) போன்ற விஷயங்கள் குறித்த கட்டுரைகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

ஜான் ட்ரெஸ் புத்தகம்
ஜான் ட்ரெஸ் புத்தகம்

வளர்ச்சி பொருளாதாரம் என்கிற துறையில் இந்திய அளவிலும் உலக அளவிலும் நன்கு அறியப்பட்ட பொருளாதார நிபுணர் ஜான். பசி, ஏழ்மை, பாலின ஏற்றத்தாழ்வு ஆகிய பொருண்மைகளின் மீது தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஆய்வுகளைச் செய்தவர், செய்துவருபவர். பொருளாதாரத்துக்கென்று நோபல் பரிசு வாங்கிய அமர்த்யா சென், ஆங்கஸ் டீடென் ஆகியோரோடு சேர்ந்து பல ஆண்டுகளாக ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.

அதே சமயம் `ஜோல்னாபைகாரர்’ என கார்ப்பரேட்டுகளால் கேலி செய்யப்பட்டுவரும் தகவல் உரிமைக்காகப் போராடும் ஆர்வலர்கள், கிராமப்புற வேலையாள்கள், தொழிற்சங்கவாதிகள், அரசியல் கட்சிகள், மாற்று ஊடகங்கள், மாணவ தன்னார்வலர்கள், கள ஆய்வாளர்கள் ஆகியோரோடும் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

ஜானின் அலுவலகத்திலிருந்து இந்நூல் ஆரம்பிக்கிறது. அங்கிருந்து பார்க்கையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பலர் மயக்கமடைந்து, கலங்கிய நிலையில்... சுமார் 20 - 30 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் ராஞ்சியில் விற்பதற்காகக் கடத்தப்பட்ட நிலக்கரியின் சுமையோடு சென்றுகொண்டிருக்கிறார்கள். இதில் கிடைக்கும் வருமானம் மூலம்தான் அவர்கள் தங்கள் பசியைப் போக்கிக்கொள்கிறார்கள்.

காஷிப்பூரில் பட்டினி இறப்புகளின் பின்னணியில் உயிர் வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச வருமானத்தைவிட குறைவாக சம்பாதிக்க வயதான ஒருவர் நீண்ட தூரம் சுமையைச் சுமந்து செல்கிறார்.

லேத்ஹர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவரும் விபத்தில் துரதிர்ஷ்டவசமாக முடங்கிப் போனவருவமான இளைஞர் டப்லுவுக்கு, அபத்தமான அதிகாரத்துவ இடையூறுகளால் பல மாதங்களாக பி.பி.எல் (BPL) கார்டைப் பெற முடியவில்லை. அதே சமயத்தில், எஃப்.சி.ஐ.யின் (FCI) கிடங்குகளில் மில்லியன் கணக்கான டன் உணவு தானியங்கள் அழுகிக் கிடக்கின்றன.

இவை இந்தியாவின் வறிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் இருக்கும் தொடர்ச்சியான பிரச்னைகளின் தெளிவான நினைவூட்டல்களாக செயல்படுவதுடன், நமது கூட்டு மனசாட்சிக்கு குறைந்தபட்ச மனிதநேயத்தை மீட்டெடுப்பதில் சமூகக் கொள்கைகள் மிகவும் அவசியம் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றன.

நெல்
நெல்

உணவு தானியங்களை விநியோகிப்பதில் பொது விநியோக முறையில் இருக்கும் பிரச்னை, மோசமான உள்கட்டமைப்பையும் சுகாதார நிலைமையையும் கொண்ட பொதுக் கல்விக்கூடங்கள், மதிய உணவுத் திட்டத்தில் அவ்வப்போது தலைதூக்கும் சாதி வேறுபாடு, சாப்பாட்டோடு முட்டை சேர்த்துக் கொடுப்பதை அரசியல்ரீதியாக எதிர்க்கும் சூழ்நிலை, தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் நேரத்துக்கு வேலையும், சம்பளமும் கொடுப்பதில் இருக்கும் அத்துமீறல் ஆகியவை குறித்த விஷயங்களில் எது வேலை செய்யும், எது வேலை செய்யாது போன்றவற்றைத் தனது விமர்சனப் பார்வையால் விளக்கியிருக்கிறார்.

மதிய உணவுத் திட்டம், பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் சேர்க்கை, கல்விக் கூடங்களின் உட்கட்டமைப்பு போன்ற திட்டங்களில் காலப்போக்கில் ஏற்பட்டு வரும் மேம்பாடுகள் குறித்தும் இதில் குறிப்பிட்டிருக்கிறார். சமூக முன்னேற்ற குறியீட்டில் மாநிலங்களுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளை சுட்டிக்காட்டும்போது கேரளாவும் தமிழ்நாடும் தொடர்ந்து முன்னணியில் இருப்பதையும் குஜராத் சராசரிக்கும் சற்றுகீழ் இருப்பதையும் `பீமாரு’ மாநிலங்கள் என அழைக்கப்படும் பீகார், மத்தியபிரதேஷ், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டாலும் இன்னும் ஒரு தேக்கநிலையிலேயே இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

எந்த அளவுக்கு கார்ப்பரேட்டுகள் தங்கள் வணிகத்தைப் பெருக்க அரசிடம் `லாபி’ செய்கின்றன என்பதற்கு ஓர் உதாரணம் கொடுத்திருக்கிறார். மதிய உணவுத் திட்டத்தில் சமைக்கப்பட்ட சத்தான உணவுக்குப் பதிலாக ரூ.3.75 மதிப்புள்ள பிஸ்கெட் பொட்டலம் ஒன்றைக் கொடுக்க வேண்டுமென்றும் அதில் இருக்கும் ஊட்டச்சத்து சமைக்கப்பட்ட உணவில் இருக்கும் சத்தை விட அதிகமென்றும் குறிப்பிட்டு பிஸ்கெட் உற்பத்தியாளர் சங்கம் கடிதமொன்றை அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பலருக்கும் அனுப்பியிருக்கிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து சுமார் 29 உறுப்பினர்கள் (இதில் கட்சி வித்தியாசமில்லை!) அப்போது மனித வளத்துறை மந்திரியாக இருந்த அர்ஜுன் சிங்குக்கு அனுப்ப அவர் பிஸ்கெட்டில் நீங்கள் குறிப்பிடும் அளவுக்கு ஊட்டச்சத்து எதுவும் இல்லை என்று கூறி அதை நிரகாரித்துவிடுகிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், பிஸ்கெட் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் பார்லே நிறுவனத்தில் உயர்பதவியில் இருந்தவர். இந்தச் சம்பவத்தை `லோக்சபாவுக்கு க்ளூக்கோஸ்” என்கிற தலைப்பில் ரீத்திகா கேரா என்கிற இன்னொரு ஆய்வாளருடன் சேர்ந்து எழுதியிருக்கிறார்.

Parliament of India
Parliament of India
AP Photo
கொரோனா 2.0... சந்திக்க வேண்டிய பொருளாதார பாதிப்புகள்..! ஓர் அலசல் பார்வை

ஆதார் அடையாள அட்டை, புல்லட் ட்ரெயின் முன்மொழிவு ஆகியவை குறித்து தனது கடுமையான விமர்சனத்தைப் பதிவு செய்திருக்கிறார் ஜான். ஆரம்பத்தில் `ஆதார்’ அட்டை பெறுவது கட்டாயமில்லை, தானாக முன்வருபவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் எனக் கூறிவிட்டு அதன்பின் அனைத்து சமூக நல உதவிகளையும் பெறுவதற்கு ஆதார் அட்டை முக்கியம் எனக் கூறி நாடாளுமன்ற விவாதம் எதுவும் இல்லாமல் `Money Bill’ என்கிற பெயரில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி வெற்றியும் பெற்றது. இது உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலுக்கு புறம்பானது என்கிறார் நூலாசிரியர்.

2014 தேர்தலின்போது `குஜராத் முன்மாதிரி (மாடல்)’ பற்றி பரவலாகப் பேசப்பட்டது. குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளில் நல்ல சாலைகள், காளான்கள் போல முளைத்திருக்கும் தொழிற்கூடங்கள், சீரான மின் விநியோகம் போன்றவை இருந்தாலும் வறுமை, ஊட்டச்சத்து, கல்வி, சுகாதாரம் ஆகிய குறியீடுகளில் தேசிய அளவிலான சராசரியைவிட சற்றுக் கூடுதலாக இருக்கிறதே ஒழிய அதை ஒரு `முன்மாதிரி’ என சொல்லும் அளவுக்கு இல்லை எனக் குறிப்பிடும் இவர், இதில் சந்தேகம் இருந்தால் அப்போது வெளியான `நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே ரிப்போர்ட்’டைத் தரவிறக்கி சரிபார்த்துக் கொள்ளுங்கள், இதற்கு பிஹெச்.டி பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை என சற்று `நக்கலாக’ குறிப்பிட்டிருக்கிறார்.

பசி, வறுமை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிப்பதற்கான பொதுக் கொள்கையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுக்கால படிப்பினைகளைக் கற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் அதன் முக்கியத்துவத்தை `புல்லட் ரயில் நோய்க்குறி’ முந்திக்கொள்ளும் அபாயத்தில் உள்ளது என்பது ஜானின் கருத்து.

Economy
Economy
ரகுராம் ராஜன் டு ஜீன் ட்ரெஸ் - ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக் குழு... யார் இவர்கள்? பின்னணி என்ன?

வளர்ச்சி இலக்குகள் முன்பை விட அதிக முக்கியத்துவத்தைப் பெற்றிருப்பது போல ஒரு நல்ல சமுதாயத்துக்கு நெறிமுறை முன்னேற்றம் (ethical progress) முக்கியமானது என்பதை ழான் இந்நூல் மூலம் வலியுறுத்துகிறார்.

அடுத்த கட்டுரைக்கு