Published:Updated:

இ-காமர்ஸ் சந்தையிலும் ரிலையன்ஸ்...! -200 நகரங்களில் செயல்பாட்டுக்கு வருகிறது `ஜியோ மார்ட்'

Jio Mart | ஜியோ மார்ட்
Jio Mart | ஜியோ மார்ட்

ஏற்கெனவே இருக்கும் பிக்பாஸ்கேட், க்ரோஃபர்ஸ் (Grofers), அமேசான் ஃப்ரஷ் அண்ட் பான்ட்ரி மற்றும் ஃப்ளிப்கார்ட் சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றுக்குப் போட்டியாக இதுகளமிறங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தக தளமான `ஜியோ மார்ட்', தற்போது இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதம் இதன் சேவையானது சோதனை ஓட்டமாக நவி மும்பை, தானே, கல்யாண் ஆகிய நகரங்களில் தொடங்கப்பட்டிருந்தது. தற்போது ஜியோ மார்ட் சேவையானது அனைத்து மெட்ரோ நகரங்களிலும் கிடைக்கும். மேலும் மைசூர், விசாகப்பட்டினம், கோயம்புத்தூர், டெஹ்ராடூன் போன்ற மற்றும் சில நகரங்களிலும் கிடைக்கும்.

ஃபேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் $5.7 பில்லியன் முதலீடு செய்தது. அதன்பின் வாட்ஸ்அப் இந்த சேவையுடன் இணைக்கப்பட்டது. இதில் உணவு வகைகள், பருப்பு வகை, வீட்டை சுத்தம் செய்யும் பொருள்கள், பாக்கெட் உணவுகள் மற்றும் விலங்குகளுக்கான உணவுகள் ஆகியவை கிடைக்கும். இதனால் ஆன்லைன் உணவுப் பொருள்கள் சந்தையில் ஏற்கெனவே இருக்கும் பிக்பாஸ்கேட், க்ரோஃபர்ஸ் (Grofers), அமேசான் ஃப்ரஷ் அண்ட் பான்ட்ரி மற்றும் ஃப்ளிப்கார்ட் சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றுக்குப் போட்டியாக இதுகளமிறங்குகிறது.

ஃபேஸ்புக் - ஜியோ கூட்டணி... இந்தியாவில் 'சூப்பர் ஆப்' ஆகுமா வாட்ஸ்அப்?! #LongRead

இப்போது ஜியோ மார்ட் மொபைலிலும், கணினியிலும் இணையதள வடிவிலேயே பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இன்னும் இதற்கென பிரேத்யக செயலி ஒன்று உருவாக்கப்படவில்லை. ஆனால், கூடிய விரைவில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயலியான வாட்ஸ்அப் மூலமே முழுவதுமாக பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. இதில் விற்பனையாளர்களின் தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்நிறுவனம் ரிலையன்ஸ் ஃப்ரஷ் மற்றும் ஸ்மார்ட் ஸ்டோருடன், உள்ளூர் மளிகை விற்பனையாளர்கள் மூலமும் பொருள்களை விற்பனை செய்யவுள்ளது ஜியோ மார்ட்.

ஜியோமார்டில் அதிக மளிகை விற்பனையாளர்கள் இணைய அதன் விற்பனையும் அதிகரிக்கும் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஜியோ மார்டில் விற்கப்படும் பொருள்களின் விலையானது குறைந்தபட்சம் MRP-யிலிருந்து 5 சதவிகிதமாவது குறைவாகக் கிடைக்கும் என அதன் இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளது ஜியோ. மேலும், உணவுப் பொருள்கள் விவசாயிகளிடமிருந்தே நேரடியாகக் கொள்முதல் செய்யப்படுகிறதாம்.

Jio Mart
Jio Mart

கடந்த சில வாரங்களில் மட்டும் ஜியோவுக்கு சுமார் 78,562 கோடி முதலீடுகள் வந்துள்ளன. ஃபேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா இக்வ்யூட்டி பார்ட்னர்ஸ், கேகேஆர் மற்றும் ஜெனரல் அட்லாண்டிக் ஆகிய நிறுவனங்களின் முதலீடு இது. இதனால் ஜியோ மார்ட் ஜியோவின் அடுத்த அத்தியாயத்தின் தொடக்கம் எனக் கருதப்படுகிறது.

இந்தியாவில் ஜியோ தொலைத்தொடர்பு சேவையில் மட்டும் 38.8 கோடி பயனாளர்கள் இருக்கின்றனர். இதனால் ஆரம்பிக்கும்போதே மற்ற நிறுவனங்களிடம் இல்லாத முக்கிய அனுகூலம் இதில் ஜியோவுக்கு இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு