Published:Updated:

கோவை To நெல்லை... சன்மேக்ஸின் சதுரங்க வேட்டை!

சதுரங்க வேட்டை படத்தில் ஒரு காட்சி...
பிரீமியம் ஸ்டோரி
News
சதுரங்க வேட்டை படத்தில் ஒரு காட்சி...

விசாரணை

''நம்ம நிறுவனத்தில் உறுப்பினராக இணைந்தால், மாதம்தோறும் 700 ரூபாயும், நீங்கள் புதிதாக இணைக்கும் ஒவ்வோர் உறுப்பினருக்கும் ஊக்கத்தொகையும் தருவோம்” என சன்மேக்ஸ் நிறுவனத்தினர் சொன்னதை நம்பி, தலா ரூ.7,000 தந்து இணைந்த பல்லாயிரம் தென் மாவட்ட மக்கள், இப்போது பணம் வராமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

கோவையில் அலுவலகம் வைத்துக்கொண்டு தென் மாவட்டங்களில் அதிகம் செயல்பட்டு வருகிறது சன்மேக்ஸ் நிறுவனம். பொருள்களை நேரடியாக விற்பனை செய்வது (direct marketing) என்று ஆரம்பித்த இந்த நிறுவனத்தின் செயல்பாட்டைப் பார்த்து, பணம் போட்ட வர்கள், இன்று பணம் வராததால் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

சதுரங்க வேட்டை படத்தில் ஒரு காட்சி...
சதுரங்க வேட்டை படத்தில் ஒரு காட்சி...

இந்த நிறுவனத்தில் என்ன செய்கிறார்கள் என்பதை அறிய சன்மேக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் நெல்லைச் சேர்ந்த முத்துகிருஷ்ண ணிடம் பேசினோம். நிறுவனத்தின் திட்டம் பற்றி உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் அவர்.

“பிரதர், உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பிச் சுடுச்சு. காலேஜ் ஸ்டூடண்ட், பிரைவேட், கவர்ன்மென்ட் ஆபீஸர்ஸ், ஹோம் மேக்கர்ஸ், பிசினஸ் பண்றவங்கன்னு யாரு வேணும்னாலும் நம்ம கம்பெனியில மெம்பராச் சேரலாம்.

டெல்லியில் தொடங்கப்பட்டதுதான் நம்ம `சன்மேக்ஸ்’ நிறுவனம். தமிழ்நாட்டுல கோய முத்தூர்ல நம்ம ஆபிஸ் இருக்கு. முதல்ல 7,000 ரூபாம் பணம் கட்டி மெம்பர் ஆகிடணும். உங்களுக்குன்னு ஒரு ஐ.டி கொடுத்துடுவோம். நீங்க மெம்பரான ஒரு வாரத்துல மூணு பட்டுப் புடவை, ஒரு வி.ஐ.பி டிராவல் பேக் உங்க வீட்டுக்கு கூரியர்ல வந்துடும். நீங்க மெம்பர் ஆன தேதியில இருந்து 10 நாள்களுக்குள் ஒவ்வொரு மாசமும் உங்களுக்கு 700 ரூபாய் கிடைக்கும். இதுல 10% டி.டி.எஸ் பிடிச்சுட்டு, மீதி ரூ.630 உங்க அக்கவுன்ட்ல மணி அடிச்சுடும். 30 மாசம் தொடர்ந்து இந்தப் பணம் கிடைச்சுக் கிட்டே இருக்கும்.

நம்ம கம்பெனியில நீங்க மெம்பராச் சேர்ந்தா போதுமா? உங்களை மாதிரி நிறைய மெம்பர்ஸ் சேர்க்கணும். உங்களுக்கு ரைட், லெப்ட்னு புதுப்புது மெம்பர்ஸை சேர்க்கலாம். நீங்க ஒரு ஆளை சேர்த்துவிட்டா, 140 ரூபா இன்சென்டிவா கிடைக்கும். ரெண்டு பேரா சேர்த்துவிட்டா, 700 ரூபா இன்சென்ட்டிவ் கிடைக்கும். இப்படி மெம்பர்ஸ் சேரச் சேர உங்களுக்கு சில்வர், கோல்டு, டைமண்ட், பிளாட்டினம்னு உங்க ரேஞ்ச் பிரிக்கப்படும். கார் ஆஃபர், வெளிநாடு டூர் டிரிப் சான்ஸ் எல்லாம் இருக்கு. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவங்க எல்லாம் இன்னைக்கு மாசாமாசம் லட்சக் கணக்குல வருமானம் பார்த்துக்கிட்டு இருக்காங்க. தயக்கம் இல்லாம தைரியமா ஜாயின்ட் பண்ணுங்க. நமக்குத் தேவை கனவு. கனவுக்குத் தேவை துணிவு” என்று அவர் பேசப் பேச, சதுரங்க வேட்டை படத்தில் வரும் காட்சிதான் ஞாபகத்துக்கு வந்தது.

கோவை To நெல்லை... சன்மேக்ஸின் சதுரங்க வேட்டை!

இந்த நிறுவனத்தில் உறுப்பினராக இணைந்து தற்போது எந்த வருமானமும் இல்லாமல் தவித்துவரும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணனைத் தொடர்புகொண்டு பேசினோம். “ஒரு வருஷத்துக்கு முன்னால, இந்த கம்பெனியில மெம்பரா சேர்ந்தேன். பெரிசா சம்பாதிச்சுடலாம்னு அவங்க சொன்னதை நம்பிச் சேர்ந்தேன். 7,000 ரூபாய் கட்டினா, மாசாமாசம் 700 ரூபாய் வரும்னாங்க. பத்து மாசம் வந்தாக்கூட போட்ட பணத்தை எடுத்துடலாம்னு நினைச்சு சேர்ந்தேன். நான் மட்டுமல்லாம மனைவி, அப்பா, அம்மா, தம்பின்னு அஞ்சு பேரு பேர்லயும் 35,000 ரூபா டெபாசிட் செஞ்சேன். அவங்க சொன்ன மாதிரி பட்டுச் சேலையும், பேக்கும் வந்துச்சு. 700 ரூபா நாலஞ்சு மாசம் வந்தது. அதுக்குப் பிறகு வரலை. ஏன்னு கேட்டேன். ‘மெம்பர்ஸை சேர்த்துவிட்டாதான் பணம் வரும்’னாங்க. எனக்குத் தெரிஞ்ச சிலரை சேர்த்துவிட்டேன். அவங்களுக்கும் நாலஞ்சு மாசம்தான் பணம் வந்துச்சாம். இதைப் பார்த்து வெறுப்பாகி, ஒதுங்கிட்டேன். இப்ப பணம் வர்றதில்லைனு பலரும் புலம்புறாங்க. நல்ல வேலையை விட்டுட்டு, இதுல வேலைக்குச் சேர்ந்தவங்க தவியாய்த் தவிக்கிறாங்க. அப்பாவிங்க ஏமாந்து நிக்கிறாங்க, பாவம்’’ என்று நொந்து போய் சொன்னார்.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் அருகில் அப்பார்ட் மென்ட் வீட்டின்கீழ் போர்ஷனில் அந்த அலுவலகம் இருப்ப தாகக் கேள்விப்பட்டு அங்கு போனோம். முன்பு வைத்திருந்த சன்மேக்ஸ் போர்டு இப்போது எடுத்துவிட்டார்களாம். Crown traders என்று சிறிய பேனர் வைத்திருந்தார்கள். இரண்டு பெண் ஊழியர்கள் இருந்தார்கள். அவர்கள், “நாங்க இப்பத்தான் வேலைக்குச் சேர்ந்திருக்கோம்’’ என்று சொல்லி, இந்த நிறுவனத்தின் புரமோட்டர் சிவா என்பவரின் செல்போன் நம்பரைத் தந்தனர். அவருடன் பேசினோம்.

“என் சொந்த ஊர் திருச் செந்தூர். மூணு வருஷமா இந்த பிசினஸ்ல இருக்கேன். டெல்லி யில தலைமை அலுவலகம் உள்ளது. அதுல 80,000 பேர் முதலீடு செஞ்சிருக்காங்க. நிறுவனத்தில் ஆடிட்டிங் வேலை நடக்குது. அதனால பணம் அனுப்புறது தாமதமாயிருக்கு. டிசம்பர் 31-ம் தேதிக்குள் எல்லா பணத்தையும் தந்துவிடுவோம்’’ என்றார். ஆனால், ஜனவரி வந்தும் பணம் வரவில்லை என்கிறார்கள் இதில் பணம் போட்டவர்கள்.

‘‘இ.பி கனெக்‌ஷன் பிரச்னை யானதால கட்டட உரிமையாளர் போர்டை எடுக்கச் சொன்னார். மற்றபடி, Crown traders என்பது சன்மேக்ஸின் கிளை நிறுவனம். எங்க வேர்ஹவுஸுக்கு வாங்க. அங்க எல்லா பொருளும் இருக்கு. எல்லா ஆவணங்களும் இருக்கு’’ என்று பேசி முடித்தார் சிவா.

இந்த நிறுவனம் செய்யும் தொழில் பற்றியும், அள்ளித் தரும் லாபம் பற்றியும் பலரும் பல சந்தேகக் கேள்விகளை எழுப்பவே செய்கின்றனர். இந்த நிறுவனத்தில் புதிதாகப் பணம் போட நினைப்பவர்கள் நன்கு யோசித்துவிட்டு, முடிவெடுப்பது நல்லது!