Published:Updated:

கே.ஒய்.சி புதுப்பிக்காவிட்டால் வங்கிக் கணக்கு முடக்கப்படுமா? வாடிக்கையாளர்கள் என்ன செய்யலாம்?

K Y C N O R M S

பிரீமியம் ஸ்டோரி

கடந்த 20-ம் தேதியிலிருந்து விதவை பென்ஷனுக்காகக் காத்திருக்கும் பெண்கள் மற்றும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் (MGNREGA) உள்ளங்கை ரேகை அழிய உழைத்தவர்கள் மட்டுமல்ல, 78 வயதான ஐ.ஐ.டி பேராசிரியர்கூட வங்கியிலிருந்து பணம் எடுக்க இயலவில்லை. காரணம், கே.ஒய்.சி ஆவணங்களைப் புதுப் பிக்காததால் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்த விவரம் தெரியாமல், அவசியமான இந்த நேரத்தில் ஏன் பணம் எடுக்க முடியவில்லை எனப் பலரும் புலம்பி, கவலைப்படுவது பரிதாபமான நிகழ்வு.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

லோ ரிஸ்க் வாடிக்கையாளர்களான இவர்களிடம் பத்து வருடங்களுக்கு ஒருமுறை கே.ஒய்.சி ஆவணங்கள் தந்தால் போதும் என்று ரிசர்வ் வங்கி தெளிவாகக் குறிப்பிட்டபின்பும், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கே.ஒய்.சி ஆவணங்கள் கேட்பது வங்கிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது. கே.ஒய்.சி என்றால் என்ன, அது புதுப்பிக்கப்படவில்லை எனில், வங்கிகள் ஏன் வங்கிக் கணக்குகளை முடக்குகின்றன?

கே.ஒய்.சி புதுப்பிக்காவிட்டால் 
வங்கிக் கணக்கு முடக்கப்படுமா? வாடிக்கையாளர்கள் என்ன செய்யலாம்?

வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட், கிரெடிட் கார்டு் கம்பெனிகள் போன்ற நிதி நிறுவனங்களில் கணக்கு ஆரம்பிக்க கே.ஒய்.சி (Know Your Customer) ஆவணங்கள் அவசியம் தேவை. இந்த ஆவணங்கள் நம் தனிநபர் அடையாளத்தையும் (Identity Proof), இருப்பிட அடையாளத்தையும் (Address Proof) நிரூபிக்க உதவுபவை. பொதுவாக, கணக்கு ஆரம்பிக்கும்போது பான் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ், மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்ட அட்டை போன்றவற்றில் ஏதாவது இரண்டின் நகலை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர் களை ஹை ரிஸ்க், மீடியம் ரிஸ்க், லோ ரிஸ்க் என்று மூன்று வகைகளாகப் பிரித்துள்ளன. கடத்தல், பதுக்கல் போன்ற தேசத் துரோக செயல்களைக் கண்டறி வதற்காகவே இந்த ஏற்பாடு. வெளிநாடு வாழ் இந்தியர் (NRI), பெரும் பணக்காரர்கள் (HNI) போன்ற அதிக அளவு பணம் நடமாடும் அக்கவுன்டுகள் மற்றும் நிழல் பரிவர்த்தனைகளைக் கொண்ட வங்கிக் கணக்குகள் அதிக ரிஸ்க் உள்ளவை. இந்த வாடிக்கையாளர்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கே.ஒய்.சி ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். சில கம்பெனிகள் அல்லது வாடிக்கையாளர்களின் வீடு மற்றும் ஆபீஸ் அமைந்திருக்கும் இடம் போன்ற விஷயங்களால் சிலரை மீடியம் ரிஸ்க் என்று வகைப்படுத்தி இருப்பார்கள். அவர்கள் எட்டு வருடங்களுக்கு ஒரு முறை கே.ஒய்.சி ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும்.

சம்பளதாரர்கள், பென்ஷன் வாங்குவோர் போன்றவர்களின் வங்கிக் கணக்கில் அளவுக்கு அதிக பண நடமாட்டமோ, மற்ற நடவடிக்கைகளோ இருக்காது; அவர்கள் லோ ரிஸ்க் வாடிக்கையாளர்கள் என்பதால், பத்து வருடங்களுக்கு ஒருமுறை கே.ஒய்.சி ஆவணங்கள் சமர்ப்பித்தால் போதும்.

சரியான டாக்குமென்டுகள் தந்து அக்கவுன்ட் ஆரம்பித்த லோ ரிஸ்க் வாடிக்கையாளர்களுக்குக்கூட “உங்கள் கே.ஒய்.சி டாக்குமென்ட்டுகள் காலாவதி யாகிவிட்டன. மீண்டும் சமர்ப்பிக்கா விட்டால் உங்கள் அக்கவுன்ட் முடக்கப் படும்” என்கிற அதிரடி எஸ்.எம்.எஸ்-கள் வருகின்றன. டெபிட் கார்டுகள் முடக்கப்படுகின்றன.

கோவிட் பெருந்தொற்று உலகை ஆட்டிவைக்கும் இந்த நேரத்தில் பல வாடிக்கையாளர் களுக்கும் நிதி நிறுவனங்களுக்குச் சென்று கே.ஒய்.சி ஆவணங்களைச் சமர்ப்பிக்க இயலவில்லை. இதனால் வங்கிகள் வாடிக்கை யாளர்களின் கணக்குகளை முடக்குவது மட்டுமன்றி, அந்தக் கணக்குகளை குளோஸ் செய்யவும் ஆரம்பித்துள்ளன. இந்த செயல்பாடு வங்கிகளின் ‘பேக் எண்ட்’ எனப்படும் கம்ப்யூட்டர் சென்டர்களில் நடைபெறுவதால், கிளைகளில் இருக்கும் வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர் களுக்கு உதவ முடிவதில்லை.

நகர்ப்புற மக்கள் பாடு இது எனில், கிராமப்புற மக்கள் பாடு இன்னும் மோசம். விதவை பென்ஷன், முதியோர் பென்ஷன், ஊனமுற்றோர் பென்ஷன், கேஸ் மானியம், மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் ஊதியம் என்று பலவித உதவிப் பணங்களும் இடைத்தரகர் இன்றி ஏழை மக்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாகச் சென்று சேரத்தான் ஜன்தன் திட்டம் கொண்டுவரப் பட்டது. தினமும் ஆயிரக்கணக் கான ஜன்தன் கணக்குகள் ஆரம் பித்தாக வேண்டிய அழுத்தத்தால், வங்கிகள் முறைப்படி கே.ஒய்.சி ஆவணங்கள் பெறாமல், வங்கிக் கணக்குகளைத் தொடங்கி விட்டன. வட மாநில கிராமப் புறங்களில் இது மிக அதிகமாக நடைபெற்றுள்ளது.

அவர்களில் பலரும் இன்று ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். வங்கிக் கணக்குகள் திடீரென மூடப்பட்டதால், அவர்களுக்கு வர வேண்டிய உதவித் தொகை களும் வரவில்லை; இருக்கும் சொற்பப் பணத்தையும் எடுக்க வழியில்லை.

முதலில் பான் கார்டு எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என்றார் கள். பிறகு, ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என்றார் கள். இப்போது கே.ஒய்.சி-யையும் அடிக்கடி அப்டேட் செய்ய வேண்டும் என நிர்ப்பந்திப்பதால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் கிராமங்களில் இருக்கும் ஏழைகள்தாம்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் குரலற்ற ஏழை மக்களின் குரலாக விளங்கும் ஜான் ட்ரேஸ் என்னும் பொருளாதார வல்லுநர், 2018-லேயே இதுபற்றி ரிசர்வ் வங்கியிடம் புகார் செய்தார். புகழ் பெற்ற எழுத்தாளர் சுசேதா தலால், இது தொடர்பாக வெளியிட்ட மனுவுக்கு ஆதரவு பெருகியது. மக்களின் குறைகள் மணி மாடங்களை எட்டின.

கே.ஒய்.சி ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு 2021 டிசம்பர் 31 வரை காலவரையறை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் அறிவித்து உள்ளார். அதுவரை கே.ஒய்.சி காரணமாக வங்கிக் கணக்கு முடக்கப்படாது என்னும் செய்தி பலருக்கும் மனநிம்மதியைத் தந்துள்ளது. எஸ்.பி.ஐ வங்கியும் இ-மெயில், தபால் மூலம் கே.ஒய்.சி ஆவணங்கள் அனுப்பலாம் எனக் கூறியுள்ளது.

ஆனால், வெறும் கால அவகாசம் மட்டும் இந்தப் பிரச்னையைத் தீர்த்து விடாது. யாரெல்லாம் அதிக ரிஸ்க் உள்ள வாடிக்கையாளர், யார் லோ ரிஸ்க் வாடிக்கையாளர் என்பதைத் துல்லிய மாகக் கணித்து அவர்களுக்கு மட்டுமே கே.ஒய்.சி விதிமுறைகளுக்கு உட்படுத்த வேண்டும். அப்படிச் செய்வதை விட்டுவிட்டு, விதிமுறைகளை எல்லோர் மீதும் ஒரே மாதிரியாக விதித்தால், ஏழை மக்கள் கஷ்டத்துக்கு உள்ளாவார்கள். இப்படிக் கஷ்டப்படும் ஏழை மக்கள்தாம் நம் நாட்டில் அதிகம் என்பதை ஆர்.பி.ஐ உணரட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு