Published:Updated:

LIC IPO திருவிழா: பாலிசிதாரர்களுக்கு தள்ளுபடி விலையில் கிடைக்குமா பங்குகள்?

தற்போது வெளிவந்துள்ள தகவல்கள் பாலிசிதாரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை பங்குகளில் முதலீடு செய்யாதவர்கள்கூட எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வில் பங்குகளை வாங்குவதன் மூலம் முதன்முறையாகப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவர்களாக மாறுவார்கள் என்று சொல்லலாம்.

LIC IPO திருவிழா: பாலிசிதாரர்களுக்கு தள்ளுபடி விலையில் கிடைக்குமா பங்குகள்?

தற்போது வெளிவந்துள்ள தகவல்கள் பாலிசிதாரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை பங்குகளில் முதலீடு செய்யாதவர்கள்கூட எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வில் பங்குகளை வாங்குவதன் மூலம் முதன்முறையாகப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவர்களாக மாறுவார்கள் என்று சொல்லலாம்.

Published:Updated:

பங்குச் சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும், நாட்டின் மிகப்பெரிய ஐ.பி.ஓ-வான எல்.ஐ.சி ஐ.பி.ஓ, வரும் மார்ச் 10-ம் தேதி வெளியிடப்பட்ட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சுமார் 31.62 கோடி பங்குகள் இந்த ஐ.பி.ஓ-வில் வெளியிடப்பட உள்ளன. ஒரு பங்கின் விலை ரூ.2,000 - 2,100 என்ற மதிப்பீட்டில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது. இதன்மூலம் ரூ.65,400 கோடி நிதி திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Stock Market (Representational Image)
Stock Market (Representational Image)
Photo by M. B. M. on Unsplash

ஐ.பி.ஓ வெளியீட்டுக்கான விண்ணப்பத்தை, எல்.ஐ.சி பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் சமர்ப்பித்துள்ளது. காப்பீட்டுத் துறையில் நமது நாட்டிலுள்ள மொத்த காப்பீட்டு அளவில் 63% அளவை எல்.ஐ.சி நிறுவனம் கொண்டுள்ளது. பிற அனைத்து காப்பீட்டு நிறுவனங்களின் காப்பீட்டு அளவானது எல்.ஐ.சி நிறுவனத்தோடு ஒப்பிட்டால் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அந்த அளவுக்கு காப்பீட்டுத் துறையில் தன்னிகரற்ற நிறுவனமாக எல்.ஐ.சி விளங்குகிறது.

100 கோடி ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட எல்.ஐ.சி நிறுவனத்தின் தற்போதைய எம்பெட்டட் மதிப்பு ரூ. 5.39 லட்சம் கோடி ஆகும். எம்பெட்டட் மதிப்பு என்பது காப்பீட்டு சேவைகள் வழங்கும் நிறுவனங்களின் நிகர சொத்து மதிப்பு மற்றும் எதிர்கால வருமானத்தைக் கணக்கீடு செய்து பெறப்படும் மதிப்பு ஆகும். எல்ஐசியில் தற்போது 13.5 லட்சம் ஏஜென்டுகள் பணிபுரிகிறார்கள். சுமார் 28.3 கோடி பேர் எல்ஐசியின் பாலிசிதாரர்களாக இருக்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போது ஆயுள் காப்பீட்டுத் துறையில் ஹெச்.டி.எஃப்.சி லைஃப், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் மற்றும் எஸ்.பி.ஐ லைஃப் ஆகிய மூன்று நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பானது அதன் எம்பெட்டட் மதிப்புடன் ஒப்பிட்டால் மூன்று முதல் நான்கு மடங்கு வரை அதிகமாக இருக்கிறது. அதை வைத்துப் பார்க்கும்போது எல்.ஐ.சி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பு 10.7 லட்சம் கோடி முதல் 18.7 லட்சம் கோடியாக இருக்கலாம். தற்போது முதற்கட்டமாக 5% அளவுக்கு பங்குகளை எல்ஐசி வெளியிடவிருக்கிறது.

IPO
IPO

இதன் கணக்கீட்டின் மூலம் இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியானது 65,000 கோடி ரூபாயாக இருக்கலாம். ஒரு பங்கின் விலை ரூ. 2,000 முதல் ரூ. 2,100 ஆக இருக்கலாம். தற்போது வரை நமது நாட்டில் வெளியிடப்பட்ட மிகப்பெரிய ஐ.பி.ஓ மதிப்பாக சென்ற ஆண்டு பட்டியலிடப்பட்ட பேடிஎம் நிறுவனத்தின் வெளியீடு உள்ளது. இந்த நிறுவனம் 18,500 கோடி ரூபாய் அளவுக்கு பங்குச் சந்தையில் நிதி திரட்டியிருந்தது. அதைவிட எல்.ஐ.சி நிறுவனத்தின் ஐ.பி.ஓ மதிப்பு 3 மடங்கு அளவுக்கு அதிகமாக இருக்கலாம். தற்போது நமது நாட்டின் அதிக சந்தை மதிப்புள்ள நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளது. இதை வரும் காலத்தில் எல்.ஐ.சி முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய சிறப்பு பெற்ற எல்.ஐ.சி பங்கு வெளியீட்டில் அதன் பாலிசிதாரர்களுக்கும் சிறப்பு சலுகை வழங்க உள்ளதாக ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. ஊழியர்களுக்கு அதன் பங்கு விலையில் 10 சதவிகித தள்ளுபடி வழங்குவதாகவும், அதேபோல் பாலிசிதாரர்களுக்கும் 10 சதவிகித தள்ளுபடி வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஊழியர்களுக்கு 1.58 கோடி பங்குகளும், பாலிசிதாரர்களுக்கு 3.16 கோடி பங்குகளும் ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் உண்மை நிலவரம் என்னவென்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும்போதே தெரியும்.

LIC Building in Chennai
LIC Building in Chennai
Photo: Vikatan / Kalimuthu.P

தற்போது வெளிவந்துள்ள தகவல்கள் பாலிசிதாரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை பங்குகளில் முதலீடு செய்யாதவர்கள்கூட எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வில் பங்குகளை வாங்குவதன் மூலம் முதன்முறையாகப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவர்களாக மாறுவார்கள் என்று சொல்லலாம். தற்போது வெளிவந்துள்ள தகவல்கள்படி பாலிசிதாரர்களுக்கும் தள்ளுபடி விலையில் பங்குகள் விற்பனை செய்யப்படுமானால் அது பாலிசிதாரர்களுக்கு மகிழ்ச்சியான சம்பவமாக இருக்கும்.