Published:Updated:

வெளியீட்டுக்குத் தயாராகும் எல்.ஐ.சி-ஐ.பி.ஓ! -சிறு முதலீட்டாளர்களுக்கும் வாய்ப்பு

எல்.ஐ.சி
எல்.ஐ.சி

2020-21 பட்ஜெட்டில், இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறையான எல்.ஐ.சி நிறுவனத்தின் சில பங்குகள் விற்கப்படும் என அறிவித்திருந்தார்.

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்பொருட்டு, அவற்றின் பங்குகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தனியாருக்கு விற்பனைசெய்து, தனியாரின் பங்களிப்பை அதிகரிக்கும் செயல்திட்டத்தை தொடர்ச்சியாக மத்திய அரசு முன்னெடுத்துவருகிறது.

அருண் ஜெட்லி நிதியமைச்சராக பொறுப்பேற்றபோதே அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டால், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழப்பைச் சந்திக்கக்கூடும். அதைத் தவிர்ப்பதற்காக, அவற்றைத் தனியார்மயமாக்குவதே சிறந்த முடிவென்று தெரிவித்தார்.

அப்போதிருந்தே பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுவருகிறது. அவரைப்போன்றே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தனியார்மயமாக்குவதில் தீவிரம்காட்டி வருகிறார். 

2019-ம் ஆண்டு வெளியான ஐ.பி.ஓ - க்கள்! - ஒரு கண்ணோட்டம்

அதன்படி 2020-21 பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறையான எல்.ஐ.சி நிறுவனத்தின் சில பங்குகள் விற்கப்படும் என அறிவித்திருந்தார். அதோடு, ஏர் இந்தியாவின் பங்குகள் , பிபிசிஎல் மற்றும் கான்கார் நிறுவனப் பங்குகளும் விற்கப்படும் என அறிவித்திருந்தார். ஆனால், கொரோனா காரணமாக இவை எல்லாம் தள்ளிவைக்கப்பட்டன.

மும்முரம் காட்டும் மத்திய நிதி அமைச்சகம்!

அரசு,  எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியிடுவதில் மும்முரமாக இறங்கியுள்ளது. இதற்காக, பொதுச் சொத்து மேலாண்மைத் துறை (Department of Public Asset Management) பல்வேறு வங்கிகளிடமும், ஆலோசனை நிறுவனங்களிடமும், நிதி நிறுவனங்களிடமும் ஏலம் விடுவதற்கான ஆலோசனைகளைக் கேட்டுள்ளது. இந்தியாவிலேயே எல்.ஐ.சி-யின்  பொதுப் பங்குகளை விற்பதுதான் மிகப்பெரிய பங்கு விற்பனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏலம் விடுவதற்கான ஆலோசனைகளைப் பெறும் கடைசித் தேதியாக ஜூலை 13 இருக்கும். ஜூலை 14-ம் தேதியே அந்த விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 

 நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

மேலும், எல்.ஐ.சி நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு முன்பான ஆலோசனைகளைப் ‘பொதுச் சொத்து மேலாண்மைத் துறை’க்கு வழங்குவதற்காக, இரண்டு ஆலோசகர்களை நியமிக்க, நிதியமைச்சகம் முடிவுசெய்துள்ளது. இதற்காகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆலோசகர்கள், கடந்த மூன்று வருடங்களில் 5,000 கோடி ரூபாய்க்கு மேலான பொதுப் பங்குகளை விற்பனை செய்வதில் ஈடுபட்டிருக்க வேண்டும். இந்த ஆலோசகர்கள்தான் அரசுக்கு பொதுப் பங்குகளை விற்பதற்குத் தேவையான முன் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். மேலும், பொதுப் பங்குகளை விற்பனை செய்வதற்கான நேரம், பரிவர்த்தனைகளின் அமைப்பு ,சரியான விலைக்கு விற்பனை செய்வது ,ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரூ.2.10 லட்சம் கோடி
மத்திய அரசின் இலக்கு!

இவ்வாறு, பொதுப் பங்குகளை விற்பனை செய்வதன்மூலம் அரசு தனது விற்பனை அளவான  2.10 லட்சம் கோடி ரூபாயை இந்த நிதியாண்டிலேயே பெற்றுவிடும். இதன்மூலம் அரசிடம் மட்டுமே இருந்த எல்.ஐ.சி பங்குகள், இனி சில்லறை முதலீட்டாளர்களிடமும் இருக்கும். இவ்வாறு பங்குச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதால், இனி வரும் காலங்களில் நிதிச் சந்தையின் மூலமாகவும் இதன் பங்குகளை வாங்க முடியும்.

சிறு முதலீட்டாளர்களும் களமிறங்கலாம்!

"இன்றும், இந்தியக் கிராமங்களில் மற்ற நிறுவனங்கள் அளிக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசிகளைவிட, எல்.ஐ.சி அளிக்கும் பாலிசிகள்தான் மக்களால் அதிக அளவில் விரும்பப்படுகின்றன. அந்த அளவுக்கு மக்களுக்கு எல்.ஐ.சி மீது நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. இப்படியொரு நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்போது, இதுவரை முதலீடு செய்யாதவர்கள்கூட பங்குச் சந்தைக்குள் வர வாய்ப்பிருக்கிறது.

Vikatan

எல்.ஐ.சி பங்குகளில் முதலீடு செய்பவர்கள், குறுகிய காலத்தில் அல்லாமல், நீண்டகால நோக்கில் முதலீடு செய்வது நல்லது. ஏனெனில், இதுபோன்ற பங்குகள் கிடைப்பது மிகவும் அரிது. அதுமட்டுமல்லாமல், எல்.ஐ.சி போன்ற மிகப்பெரிய மற்றும் வலுவானதொரு நிறுவனத்தில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் துறையின் வருங்கால வளர்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பும் கிடைக்கும்" என பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு