நடப்பு
Published:Updated:

“எந்தக் கடனை எல்லாம் தள்ளுபடி செய்யலாம் பாஸ்?’’ வாசகர்களின் கலகல கமென்ட்ஸ்...

கடன் தள்ளுபடி
பிரீமியம் ஸ்டோரி
News
கடன் தள்ளுபடி

I N T E R A C T I O N

கல்விக் கடன், நகைக் கடன், விவசாயக் கடன்... இதுமாதிரி உங்களுக்கு உள்ள வேற என்ன கடன் களை எல்லாம் அரசு தள்ளுபடி செஞ்சா நல்லா இருக்கும்..?” என நாணயம் விகடன் ஃபேஸ்புக்கில் (https://www.facebook.com/NaanayamVikatan) ஜாலியா ஒரு கேள்வி கேட்டோம். இதுதான் சாக்குன்னு வாசகர்கள் தங்களோட மனக் குமுறல்களை எல்லாம் கொட்டித் தீர்த்திருந்தார்கள். அவர்களின் அதிரடி கமென்ட்ஸில் சில இதோ...

சத்யநாராயண சுரேஷ் என்ற வாசகர், “பால்காரர், மளிகைக் கடை, பேப்பர் போடுறவர், வீட்டு வாடகை, ஸ்கூல் பீஸ், ஜவுளிக் கடைன்னு எல்லா இடத்துலேயும் கடன் வச்சிருக்கேன். இதையெல்லாம் தள்ளுபடி பண்ணுங்க சாமி. எங்க வீட்டுல உள்ள நாலு ஓட்டும் உங்களுக்குதான்”ன்னு சொல்லி யிருந்தார். நம்ம அரசாங்கமே ஏகப் பட்ட கடனை வாங்கி வச்சிருக்கே சார்!

“எந்தக் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டாம். அதுக்குப் பதிலா வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தாலே போதும்!”ன்னு சீரியஸாகச் சொல்லியிருக்கிறார் வெங்கட். நியாயமான கோரிக்கைதான் வெங்கிஜி!

கடன் தள்ளுபடி
கடன் தள்ளுபடி

“நான் மட்டும் முதல்வரா வந்தேன்னா வீட்டுக் கடன், எல்.ஐ.சி-யில வாங்கிய கடன், கிரெடிட் கார்டு கடன்னு எல்லாத்தை யும் தள்ளுபடி செஞ்சிருவேன்”னு முதல்வன் படத்துல அர்ஜுன் சொல்ற மாதிரி சொல்லி அசத்திட்டாரு பிரசன்ன நாராயண சாமி. நீங்க எலெக்‌ஷன்ல மட்டும் நில்லுங்க சார். அடுத்த முதல்வர் என்ன, பிரதமரே நீங்கதான்!

“இந்த ‘மொய்’க் கடனை தள்ளுபடி செஞ்சா நல்லா இருக்கும். கட்டாயமா திருப்பி வைக்கச் சொல்றாங்க!”ன்னு தன் சொந்த சோகத்தை ஷேர் செய்திருக்கிறார் தமிழ்மணி! ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ மொமென்ட்!

“என் நண்பன்கிட்ட வாங்குன 2,000 ரூபாய் கடனைத் தள்ளுபடி செஞ்சா நல்லா இருக்கும்”ன்னு சொல்லிருக்காரு மாரி. கடன் அன்பை மட்டுமல்ல, எலும்பையும் முறிக்கும் பாஸ்!

“கல்யாணக் கடன்... முடிஞ்சா கல்யாணத்தையே தள்ளுபடி செய்யுங்க”ன்னு குமுறியிருக்கிற முத்து, ஆண்களின் மைண்ட் வாய்ஸை கரெக்டா கேட்ச் பண்ணி யிருக்காரு. “வீட்டுக் கடனை மட்டும் தள்ளுபடி செஞ்சிடுங்க. இ.எம்.ஐ கட்டி மாளல”ன்னு சொல்லிருக்காங்க மாலதி. இ.எம்.ஐ பரிதாபங்கள்னு ஒரு காமெடி வீடியோ எடுக்கலாமா?

“இந்தக் காலைக் கடனை தள்ளுபடி செய்ய முடியுமா..?” என்று நக்கல், நையாண்டி, குத்தல், குசும்பைக் கலந்து குழைச்சு அடிச்சிருக்கிறார் வேணுகோபாலன். வொய் திஸ் கொல வெறி..? இந்தக் கடனை எல்லாம் தள்ளுபடி செஞ்சா நம்ம பொழப்பு நாறிடும்!

வாசகர்கள் கமென்ட்டுகள் எல்லாத்தையும் கொஞ்சம் அலசி ஆராய்ந்து பார்த்தா, கடன் பிரச்னை யில் பலரும் சிக்கித் தவிப்பது நன்றாகப் புரிகிறது. தனிப்பட்ட மனிதர்கள் மட்டும் இல்ல, நம் நாடும், நாட்டு மக்கள்ல நிறைய பேரும் கடன் பிரச்னையால அவதிப் பட்டுக்கிட்டு இருக்கிறது நல்லா தெரியுது. ஏதாவது ஒரு இடத்துல கடன் வாங்குறதுக்கு முன்னாடி அந்தக் கடன் அவசியமானதா, உங்களால திரும்பக் கட்ட முடியுமான்னு நல்ல யோசிச்சிக் கோங்க. முக்கியமா, எவ்வளவு வட்டி கட்டணும்னு கேளுங்க. கடன் கட்டலைன்னா, அபராதம் ஏதாவது போடுவாங்களான்னும் தெரிஞ்சுக்குங்க. இந்தக் காலத்துல கடன் வாங்குறது சுலபம். திரும்பக் கட்றதுதான் கஷ்டம். கடன் வாங்குறதுக்கு முன்னால நல்லா பிளான் பண்ணணும் மக்களே..!