நடப்பு
Published:Updated:

குறையும் சேமிப்பு, அதிகரிக்கும் கடன் சுமை! அபாயத்தில் பொருளாதாரம்! என்னதான் நடக்கிறது இந்தியாவில்..?

கடன் சுமை
பிரீமியம் ஸ்டோரி
News
கடன் சுமை

E C O N O M Y

நம் நாட்டின் பொருளாதாரம் அபாயகரமான திசையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதை, அண்மையில் நமது மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட மாதாந்தரத் தகவல் அறிக்கையைக் கொஞ்சம் ஊன்றிப் படித்தாலே போதும், தெளிவாகத் தெரியும். ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைபடி, நமது பொதுமக்களின் சேமிப்பு விகிதம் குறைந்து வருவதுடன், கடன் சுமை யின் அளவும் ஏகத்துக்கும் அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் அறிக்கை என்ன சொல்கிறது என்று கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

வளர்ச்சி வழிவகுக்கும் சேமிப்பு...

ஒரு நாட்டின் சேமிப்பு விகிதம் (Domestic Savings) மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், அவர்களது சமூகப் பொருளாதார மாற்றங் களையும் பிரதிபலிக்கிறது. தனி மனிதர்களின் வாழ்க்கைப் பாதுகாப்புக்கு மட்டுமன்றி, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அடிப்படையான தொழில்துறை முதலீடுகளுக்கும் உள்நாட்டு சேமிப்பே ஆதாரமாக உள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு வருவாய்க்கும் (Gross Domestic Product) செலவினத்துக்கும் (Consumption Expenditure) இடையே உள்ள கணக்கு ரீதியான வித்தியாசமாகிய மொத்த உள்நாட்டுச் சேமிப்பு குறையும் போது (Gross Domestic Savings), புதிய தொழில்துறை முதலீடுகளுக்காக வெளிநாட்டு முதலீடுகளை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மாறாக, உள்நாட்டுச் சேமிப்பு விகிதம் அதிகரிக்கும்போது, உள்நாட்டு தொழில்துறை முதலீடுகள் அதிகரிப்பதுடன் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகின்றன. பல கோடி மக்கள், பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைகின்றனர். தனிமனித வாழ்வாதாரத்தில் ஏற்றம் பெறுகையில், மக்கள் நுகர்வை அதிகப்படுத்துவதுடன், அதிகமாக சேமிக்கவும் செய்கின்றனர். எனவே, சேமிப்பு விகித வளர்ச்சி, சிறப்பான தொடர் விளைவுகளை (Chain Reaction) ஏற்படுத்துகிறது.

கடன் சுமை
கடன் சுமை

8.8%-லிருந்து 36.8% வரை...

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நமது மொத்த சேமிப்பு விகிதம் 8.8% மட்டுமே. அடுத்த 40 வருடங்களில், 1990-களின் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் ஆரம்பக்கால கட்டத்தில், நமது சேமிப்பு விகிதம் 21.3 சதவிகிதமாக உயர்ந்தது. 2000-களின் அதிவேக பொருளாதார வளர்ச்சி, பொதுமக்களின் சேமிப்பிலும் பிரதி பலிக்கவே, 2008-ம் ஆண்டில், இந்தியா வின் மொத்த சேமிப்பு விகிதம், புதிய உச்ச அளவான 36.8 சதவிகிதத்தை எட்டியது. இதே காலகட்டத்தில், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் சதவிகிதமும் வெகுவாகக் குறைந்திருப்பது, சேமிப்பின் முக்கியத் துவத்தை உணர்த்துவதாக உள்ளது. 1993-94-ம் ஆண்டில் 35.97% ஆக இருந்த ஏழ்மை விகிதம் (Poverty Ratio), 1999-2000-ம் ஆண்டில் 26.10% ஆகவும் 2011-12-ம் ஆண்டில் 21.92% ஆகவும் குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

2010-களின் பிற்பகுதியில் ஏற்பட்ட பொருளாதாரத் தொய்வுநிலை, நம் மக்களின் சேமிப்பு விகிதத்தைப் பாதித்தது. மேலும், நுகர்வுக் கலாசாரம், இணைய வளர்ச்சி மற்றும் பொதுவான சமூக மனநிலை மாற்றங்கள் ஆகியவையும் இந்தியர்களின் சேமிப்பு விகிதத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவே, மொத்த சேமிப்பு விகிதம் படிப்படியாகக் குறைந்து 2019-ம் ஆண்டில் 30.11% அளவைத் தொட்டிருப்பது கவலைக்குரியது.

அதிகரித்த நிதி முதலீடுகள்...

நிகர உள்நாட்டுச் சேமிப்பு (Net Domestic Savings) என்பது கரன்சி நோட்டுக்கள், வங்கி டெபாசிட், காப்பீட்டுத் திட்டங்கள், பிராவிடன்ட் பண்ட், பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்கள் போன்ற நிதி முதலீடுகளில் பொது மக்கள் சேமிக்கும் தொகையாகும். 1953-ல் வெறும் 3.6% அளவில் இருந்த நிகர உள்நாட்டு சேமிப்பு, 1990-ம் ஆண்டு 13.5% ஆகவும், 2008-ம் ஆண்டு 30.0% ஆகவும் வளர்ச்சி கண்டது. பின்னர், இது படிப்படியாகக் குறைந்து மக்களின் நிதிச் சேமிப்பு 2019-ம் ஆண்டில் 19.68 சதவிகித மாக நிலைபெற்றது.

வங்கி டெபாசிட்டுகளுக்கு முதல் மரியாதை...

பொதுவாக, நம் மக்கள் வங்கி டெபாசிட்டுகளுக்கே அதிக முன்னுரிமை வழங்கி வந்துள்ளனர். இரண்டாவது இடத்தை கரன்சி நோட்டுகளும் மூன்றாவது இடத்தை பிராவிடன்ட் / பென்ஷன் திட்டங்களும் பிடிக்கின்றன. நீண்டகால நோக்கில், பங்குச் சந்தை முதலீடுகளின் மீது பொது மக்களின் ஆர்வம் ஏறுமுகமாகவே இருந்தாலும், 2007-08, 2009-10, 2016-17 மற்றும் 2017-18 போன்ற பங்குச் சந்தை உச்சம் பெற்ற சில ஆண்டுகளில் மட்டும் பொது மக்களின் கவனம் பங்குச் சந்தை முதலீடுகளின் மீது மிக அதிகமாக இருந்துள்ளது.

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப் பட்ட பின்னரும் வங்கி டெபாசிட்டு களின் மீதான தற்போதைய ‘அதிகப்படியான நம்பிக்கை’ தொடருமா என்பதைப் பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.

கொரோனா பேரிடரின் தாக்கம்...

கொரோனா பெருந்தொற்றும் அதைத் தொடர்ந்த பொது முடக்கமும் இந்தியர்களின் வாழ்வியலில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பொது முடக்கத்தால் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்படவே, சாதாரண மக்களின் அடிப் படைத் தேவைகளைத் தவிர்த்த இதர விருப்ப செலவினங்கள் (Discretionary Expenditure) வெகுவாகக் குறைந்து போயின. இதனால், 2020-21-ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் சேமிப்பு விகிதம் அதிகமாகியது. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் மெள்ள மெள்ள விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு, மக்கள் இதர விருப்பச் செல வினங்களில் மீண்டும் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். இதனால் இந்தியாவின் உள்நாட்டுச் சேமிப்பு விகிதம் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மீண்டும் குறைந்துவிட்டது.

அதிகரிக்கும் கடன்...

மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் சுமார் 30% அளவுக்கும் மேலான உள்நாட்டுச் சேமிப்பு விகிதத்தைக் கொண்ட நம் நாடு, இதுவரை சேமிப்பு பொருளாதார மாகவே அறியப்பட்டு வந்துள்ளது. ஆனால், சமீபத்திய சமூக பொருளாதார மாற்றங்கள் பலரையும் கடன் சுமையில் தள்ளி வருகின்றன. வேலை யில்லாத் திண்டாட்டம், சமூக மனநிலை மாற்றங்கள், நுகர்வுக் கலாசாரம் ஆகியவை சாதாரண மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு சமீபத்தில் வெளி யிட்டுள்ள 2019-ம் ஆண்டுக்கான மதிப்பாய்வில், 15 - 24 வயதுக்கு இடைப்பட்ட இந்திய இளைஞர் களில் சுமார் 23.8 சதவிகிதத்தினர் வேலை இல்லாமல் தவிப்பதாகச் சொல்லி யிருக்கிறது. சமீபத்திய கொரோனா பெருந்தொற்று வேலையில்லாத் திண்டாட்டத்தை மேலும் தீவிரப் படுத்தியுள்ளதுடன் பணியில் தொடரும் பலரது சம்பளக் குறைப்புக்கும் வழிவகுத்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய மாதாந்தர அறிக்கையின்படி, சாதாரண மக்களின் கடன் அளவு, நம் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 37.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி தரும் புள்ளிவிவரத்தில், வங்கிகள் மற்றும் அமைப்புரீதியான இதர நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து மக்கள் பெற்ற கடன் மட்டுமே உள்ளடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. நம் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் குறிப்பாக, ஊரகப் பகுதியினர் முறைசாராக் கடன் பொருளாதாரத்தையே பெருமளவுக்கு நம்பி வாழ்ந்துகொண் டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், நம் மக்களின் ஒட்டுமொத்தக் கடன் அளவு குறித்த முழுமையான தகவல் ஏதும் இல்லை.

மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கும் சமீபத்திய பட்டியலில் அடங்கியுள்ள 149 நாடுகளில் இந்தியா 139-வது இடத்தைப் பிடித்திருப்பதும், மகிழ்ச்சி நாடுகளின் பட்டியலில் சீனா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளைவிடவும் தர வரிசையில் கீழே இருப்பதும், அடிமட்டத்தில், நிலைமை அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது.

ஒரு பக்கம் சேமிப்பு, வீழ்ச்சி மறுபக்கம் கடன் சுமை அதிகரிப்பு என இரட்டைச் சிக்கலிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி ‘போதுமான வேலைவாய்ப்புக்களுடன் கூடிய வேகமான பொருளாதார வளர்ச்சிதான்.’ ஆனால், அதை சாத்தியப் படுத்துவது ஆள்பவர்கள் கைகளில்தான் உள்ளது. ஆள்பவர்கள் இப்போது என்ன செய்யப்போகிறார்கள் என்பதே முக்கியமான கேள்வி!

பிட்ஸ்

க்ரிப்டோ கரன்சி ஆர்வலரான எலான் மஸ்க், இனி டெஸ்லா நிறுவனத்தின் காரை வாங்க வேண்டும் எனில், பிட்காயினைக் கொடுத்து வாங்கலாம் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்!