Published:Updated:

மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் பதவி விலகலுக்கு என்ன காரணம்?

இந்த பதவி விலகலுக்குப் பின், நிர்வாகக் குழுவின் கெளரவ தலைவராக ஆனந்த் செயல்படுவார்.

ஆனந்த் மகேந்திரா
ஆனந்த் மகேந்திரா

மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ஆனந்த் மஹிந்திரா விலகுவதாக அறிவித்துள்ளார். வருகிற ஏப்ரல் 1, 2020-லிருந்து விலகுவதற்கான கடிதத்தை அந்நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறார்.

மஹிந்திரா
மஹிந்திரா

இந்த பதவி விலகலுக்குப் பின் நிர்வாகக் குழுவின் கெளரவத் தலைவராக ஆனந்த் செயல்படுவார் என்றும், இந்தப் பொறுப்பில் அவர் இருக்கும்போது, நிறுவனத்துக்கு வழிகாட்டுதல், நிர்வாக கமிட்டியை வலுப்படுத்துதல், பிரச்னைகளுக்குத் தீர்வு அளித்தல், நிறுவனத்தின் அடுத்த வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்தல் உள்ளிட்ட பணிகளை அவர் மேற்கொள்வார் என்றும் மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

``பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் அறிவுறுத்தலின்படி, மஹிந்திரா நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் மாற்றம் கொண்டுவருவதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அடுத்த 15 மாதங்களில் நிறுவனத்தின் முக்கியத் தலைவர்கள் ஓய்வு பெறுவார்கள் என்றும், முக்கியப் பொறுப்புகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாற்றங்கள் அனைத்தும், நிறுவனத்தின் செயல்முறை, நிர்வாகம், பாரம்பர்ய நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் இருக்கும்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனது பதவி விலகல் அறிவிப்பு குறித்து இன்று மதியம் ஆனந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அப்பதிவில், `மஹிந்திரா நிறுவனத்தின் தலைமைத்துவ மாற்ற அறிவிப்பை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இன்னும் சிறப்பான நிர்வாகத்தை அளிக்க மஹிந்திரா நிறுவனம் விரும்புகிறது. இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஒத்துழைப்பு அளித்த வாரியம் மற்றும் என்னை பரிந்துரைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.