Published:Updated:

`புதிய வெளிச்சத்தைத் தருமா மத்திய பட்ஜெட்?' -அறிவிப்புக்காகக் காத்திருக்கும் தீப்பெட்டி தொழிலாளர்கள்

தீப்பெட்டி தயாரிப்புப் பணி
தீப்பெட்டி தயாரிப்புப் பணி

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பு மூலம் விடிவு பிறக்குமா எனக் காத்திருக்கிறார்கள் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளில் 90 சதவிகிதம் தமிழகத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி சுற்றுப் பகுதிகளிலும், விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி சுற்றுப் பகுதிகளிலும், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம் சுற்றுப் பகுதிகளிலும், வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆகிய பகுதிகளிலும் தீப்பெட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

எந்திரம் மூலம் தீப்பெட்டி உற்பத்தி
எந்திரம் மூலம் தீப்பெட்டி உற்பத்தி

இங்கு உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல வடமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அத்துடன், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. இத்தொழிலில் நேரடியாக 5 லட்சம் தொழிலாளர்கள், மறைமுகமாக 2 லட்சம் தொழிலாளர்கள் என மொத்தம் 7 லட்சம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில், 90 சதவிகித தொழிலாளர்கள் பெண்கள்தான்.

தீப்பெட்டி ஏற்றுமதி மூலம் மத்திய அரசுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கிறது. இதை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு தீப்பெட்டி ஏற்றுமதிக்கு 7 சதவிகித தொகையை வழங்கி வந்தது. இதற்கிடையில், முந்தைய மத்திய காங்கிரஸ் ஆட்சியில் 4 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. மேலும், பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும், சிறுதொழில்களின் பட்டியலிலிருந்து தீப்பெட்டி நீக்கப்பட்டதுடன், தீப்பெட்டிக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி வரியும் விதிக்கப்பட்டது. இந்த வரியைக் குறைக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் போராடி வருகின்றனர்.

எந்திரம் மூலம் தீக்குச்சி தயாரிப்பு
எந்திரம் மூலம் தீக்குச்சி தயாரிப்பு

இந்நிலையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தீப்பெட்டிக்கு, 4 சதவிகிதம் வழங்கப்பட்டு வந்த ஊக்கத் தொகையையும், சமீபத்தில் 2.5 சதவிகிதமாக மத்திய அரசு குறைத்துவிட்டது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, சிறுதொழில் பட்டியிலிலிருந்து நீக்கம், ஊக்கத்தொகை குறைப்பு என மத்திய அரசின் அடுத்தடுத்த நடவடிக்கையால் தீப்பெட்டித் தொழில் அழிவை நோக்கிச் செல்வதாக வேதனையுடன் கூறுகின்றனர் உற்பத்தியாளர்கள்.

இதுகுறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சேதுரத்தினத்திடம் பேசினோம், ``இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அத்தியாவசியப் பொருள்களின் விலை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டுதான் உள்ளது. ஆனால், சுமார் 16 ஆண்டுகளாக தீப்பெட்டி மட்டும் ஒரு ரூபாய்க்குதான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காய வைக்கப்படும் தீப்பெட்டி
காய வைக்கப்படும் தீப்பெட்டி

அட்டைக்குச்சி, புளூமேச் பேப்பர், மெழுகு, குளோரேட், பாஸ்பரஸ், சல்பர் உட்பட 14 மூலப்பொருள்களைக் கொண்டு தீக்குச்சி, தீப்பெட்டி தயார் செய்யப்படுகிறது. இந்த மூலப்பொருள்களுக்கான ஜி.எஸ்.டி 12 சதவிகிதமாக உள்ளது. ஆனால், முழுத் தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி 18 சதவிகிதமாக உள்ளது. இதைக் குறைக்க வலியுறுத்தி மத்திய அரசைப் பலகட்டமாக வலியுறுத்தியும் எங்களின் கோரிக்கையை ஜி.எஸ்.டி கவுன்சில் ஏற்கவில்லை.

ஜி.எஸ்.டி-யின் அளவைக் குறைத்தால் மட்டுமே தீப்பெட்டித் தொழிலையும் இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற முடியும்.
சேதுரத்தினம்

ஜி.எஸ்.டி-யின் அளவைக் குறைத்தால் மட்டுமே தீப்பெட்டித் தொழிலையும் இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற முடியும். அத்துடன் மீண்டும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகை 7 சதவிகிதத்தை வழங்கிட வேண்டும். மீண்டும் சிறுதொழில் பட்டியலில் தீப்பெட்டித் தொழிலைச் சேர்க்க வேண்டும் என்பது தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கோரிக்கை” என்றார்.

தீக்குச்சி அடுக்குதல்
தீக்குச்சி அடுக்குதல்

`வரப்போகும் மத்திய பட்ஜெட் தீப்பெட்டித் தொழிலுக்குப் புதிய வெளிச்சத்தை தரும்' என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் தீப்பெட்டித் தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள்.

அடுத்த கட்டுரைக்கு