Published:Updated:

கோடீஸ்வர முதலீட்டாளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது தெரியுமா?

மிடில் கிளாஸ் டு மில்லியனர்
பிரீமியம் ஸ்டோரி
மிடில் கிளாஸ் டு மில்லியனர்

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 14

கோடீஸ்வர முதலீட்டாளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது தெரியுமா?

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 14

Published:Updated:
மிடில் கிளாஸ் டு மில்லியனர்
பிரீமியம் ஸ்டோரி
மிடில் கிளாஸ் டு மில்லியனர்

நம்மில் பெரும்பாலானோர் அவர்களின் பிரச்னைகளுக்கு முக்கியமான காரணம், பணம் என்றுதான் நினைத்துக்கொண் டிருக்கிறார்கள். ‘எனக்கு கோடிக்கணக்கான பணம் கிடைத்தால் என் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்துவிடும்; நான் நிம்மதியாக இருப்பேன்’ என்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், உண்மையில் அப்படி நடக்கிறதா எனில், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

இதற்கு ஓர் உண்மைச் சம்பவமே உதாரணம். பீகார் மாநிலத்தில் சுசில்குமார் என்பவர் இருந்தார். அவர் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (கோன் பனேகா குரோர்பதி) நிகழ்ச்சியில் ஒன்று அல்ல, இரண்டு அல்ல ஐந்து கோடி ரூபாய் பரிசுத் தொகையை வென்றார். அவருக்கு இந்த ஐந்து கோடி ரூபாய் என்பது மிகப் பெரிய தொகையாகும்.

சுசில்குமார், கடைகளுக்கு பால் பாக்கெட் போடும் தொழில் செய்து வந்தார். கண்டபடி செலவு செய்ததால், ஐந்து ஆண்டுகளில் அவர் அந்த ஐந்து கோடி ரூபாயை காலி செய்து விட்டார். பழையபடி அவர் தன் பால் பாக்கெட் போடும் தொழிலைச் செய்ய ஆரம்பித்துவிட்டார். வாழ்க்கை ஒரு சுழற்சி என்பது போல் அவர் கோடிக்கணக்கான பணம் பெற்றும் கடைசியில் கடைக்கோடிக்கு போய்விட்டார். இவர் மட்டும் அல்ல. நிறைய பேர் இப்படி கோடிக்கணக்கான பணம் கிடைத்தும் அதைச் சரியாகப் பயன்படுத்த தெரியாமல் பழைய ஏழ்மை நிலைக்கே திரும்பி யிருக்கிறார்கள். இதற்குக் காரணம், எந்தவொரு நிதித் திட்டமிடலும் இல்லாமல் பணத்தை இஷ்டப்படி செலவு செய்ததாகும்.

செல்வந்தர்கள் கடைப்பிடிக்கும் மூன்று மனநிலையை ஒருவர் கடைப்பிடிக்கும்போது, அவர்களும் நிச்சயம் கோடீஸ்வரர் ஆக முடியும். அந்த மூன்று மனநிலை பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

1. பொறுமை

‘ஒரே நாள் இரவில் பணக்காரராக வேண்டும்; சீக்கிரம் செல்வந்தர் ஆக வேண்டும்’ என்பது பலரின் ஆசையாக இருக்கிறது. என்னை சந்திக்கும் பலரும் ‘ஒரே வருடத்தில் என் முதலீடு இரு மடங்காக அதிகரிக்க வேண்டும்; அதற்கு டிப்ஸ் கொடுங்கள்’ என்று கேட் கிறார்கள். ‘‘அதிக ரிஸ்க் கொண்ட ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸில் வர்த்தகம் செய்ய டிப்ஸ் கொடுங்கள்’’ என்கிறார்கள். ஆனால், உண்மையான செல்வந்தர்களிடம் முதலீடு அல்லது வர்த்தகம் மூலம் மிக வேகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் சிறிதும் இருப்பதில்லை. இவர்களின் நிதானம், பொறுமை எந்த அளவுக்கு இருக்கிறது எனில், சீன மூங்கிலின் வளர்ச்சி போல் இருக்கிறது.

உலகின் மிகவும் உயரமான மூங்கில் எனில், சீன மூங்கில்தான். இந்தச் சீன மூங்கிலை பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளின் (நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்) வருமானத்துடன் ஒப்பிட முடியும்.

முதல் ஐந்து வருடங்களில் மந்தமாக வளரும் இந்த மூங்கில், அதன் பிறகு ஆறு வாரங்களில் 90 அடி அளவுக்கு வளர்ந்துவிடுகிறது. இந்தச் சீன மூங்கில் நட்டதிலிருந்து ஐந்து ஆண்டுகள் அதன் வேரை பூமிக்கு அடியில் பலப்படுத்து கிறது. அதுவரைக்கும் விவசாயி அந்த மூங்கிலுக்கு தண்ணீர் ஊற்றி வர வேண்டும். இடையிடையே உரம் மற்றும் பூச்சி மருந்து போட வேண்டும். வேலி அமைத்து பாதுகாத்து வர வேண்டும்.

ஐந்து ஆண்டுகள் வரைக்கும் அந்த மூங்கில் பூமிக்கு மேலே எந்த வளர்ச்சியையும் காட்டாமல் பொறுமையாக இருக்கும். ஐந்து வருடம் முடிந்ததும் அந்தச் சீன மூங்கில் 5 அடி, 10 அடி என்று தொடங்கி, 90 அடி வரை உயர்ந்து வளரும். இந்த 90 அடி உயர வளர்ச்சி என்பது வெறும் ஆறு வாரங்களில் நடக்கும். ஆறு வருடங்களின் உழைப்பின் பயனை வெறும் ஆறு வாரங்களில் காண்கிறோம். இதே போல, பங்குச் சந்தை முதலீட்டிலும் தொழிலிலும், வணிகத்திலும் பொறுமையாகக் காத்திருக்கும்பட்சத்தில் அருமையான லாப அறுவடையை மேற்கொள்ள முடியும்.

2015-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து 2020-ம் ஆண்டு மார்ச் வரைக்கும் ஐந்து ஆண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் பங்குகளில், ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்து வந்தவர்களுக்கு நெகட்டிவ் வருமானம் அதாவது, அவர்கள் போட்ட மூலதனமே குறைந்திருக்கிறது. கிட்டத்தட்ட 10% - 15% மூலதனத்தின் மதிப்பு குறைந்திருக்கிறது. ஐந்து வருடங்கள் தொடர்ந்து எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வரும்போது, இப்படி மைனஸ் வருமானத்தில் இருக்கும்போது எந்தவொரு முதலீட்டாளரும் பதற்றத்தையும் பீதியையும் அடையத்தான் செய்வார். இதையெல்லாம் தாண்டி ஒரே ஒரு வருடம் மட்டும் பொறுமையாகக் காத்திருந்தால், அந்த முதலீடுகள் சுமார் 50% - 60% வளர்ச்சியைக் கொடுப்பதை அனுபவிக்க முடியும்.

நீண்ட காலத்தில் (10 ஆண்டுகள், 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள்) ஈக்விட்டி முதலீடு மூலம் ஆண்டுக்கு சராசரியாக 12 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைத் திருக்கின்றன. இது பணவீக்க விகிதத்தைவிட சுமார் 6% அதிகம் என்பதுடன், நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு ரூ.1 லட்சம் வரி இல்லை; அதன்பிறகு 10% மட்டும் வரி கட்ட வேண்டும் என்கிற அனுகூலம் என்பது ஈக்விட்டி முதலீட்டின் சாதக அம்சமாக இருக்கிறது. இதனால்தான் பெரும் செல்வந்தர்கள் எல்லாம் ஈக்விட்டி முதலீட்டைப் பெரிதும் விரும்புகிறார்கள். எந்தவொரு பத்து வருட காலத்தை எடுத்துக்கொண்டாலும் ஈக்விட்டி முதலீடு சராசரியாக 12% வருமானத்தைத் தந்திருக்கும். 1990 முதல் 2020 வரை எந்தவொரு பத்து ஆண்டை எடுத்துக்கொண்டாலும் சராசரியாக 12% வருமானம் கிடைத்திருக்கும். அதிக செல்வத்தை அடைய வேண்டும் எனில், முதலில் கடைப்பிடிக்க வேண்டியது பொறுமையாகும். பொறுமை இல்லை எனில், ஒருவரால் செல்வத்தைச் சேர்க்க முடியாது. அவர் செல்வந்தர் ஆக முடியாது.

கோடீஸ்வர முதலீட்டாளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது தெரியுமா?

2. பயத்தைக் கட்டுப்படுத்துதல்

பங்குச் சார்ந்த ரிஸ்க் அதிக முள்ள முதலீடுகளில் பணத்தைப் போடும்போது, சேர்த்து வைத்த பணத்தை இழந்துவிடுவோமோ என்கிற பயம் இருக்கும். இந்தப் பயத்தைத் தாண்டி துணிச்சலாக முதலீடு செய்யும்போதுதான் செல்வத்தை உருவாக்க முடியும்.

நம்மிடம் இருக்கும் பணத்தை முதலீடு செய்யாமல் பணத்தை வங்கி சேமிப்புக் கணக்கில் வைத்திருப்பது உண்மையில் பெரிய ரிஸ்க் ஆகும். காரணம், வங்கி சேமிப்புக் கணக்கு மூலம் 3%, ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் 5% வருமானம் கிடைக்கும் நிலையில், சராசரி பணவீக்க விகிதம் 6 சதவிகிதமாக இருக் கிறது. நாம் பயன்படுத்தும் சேவைகளையும் கணக்கில் கொண்டால், பணவீக்க விகிதம் என்பது 8% - 9% இருக்கும். இதனால், பணத்தின் மதிப்பு 4% - 5% குறைகிறது. இந்த நிலையில், தேவைகளை ஈடுகட்ட கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதிகமானவர்கள் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக சேமிப்புக் கணக்கு அல்லது எஃப்.டி-யில் போட்டு வைத்திருக் கிறார்கள்.

எந்த முதலீடாவது சராசரி யாக ஆண்டுக்கு 8 சதவிகிதத் துக்குக் குறைவாக வருமானம் தருகிறது எனில், அதை மோச மான முதலீடு என்றே சொல்ல வேண்டும். முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் 8 சதவிகிதத்துக்கு மேல் இருக்கும்பட்சத்தில் மட்டுமே அதில் முதலீடு செய்ய வேண்டும்.

ஃபிக்ஸட் டெபாசிட்டுகளைப் போல் ஒவ்வோர் ஆண்டும் நிலையான உத்தரவாத வருமானத்தை பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் எதிர்பார்க்க முடியாது. ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மூலம் ஓராண்டில் 40% லாபம் கிடைத்திருக்கும். இதுவே அடுத்த ஆண்டு 20% இழப்பாக இருக்கும்.

பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளைப் பொறுத்த வரை, எப்போது வீழ்ச்சி அடையும், எப்போது ஏற்றம் அடையும் என்பது யாராலும் சரியாகக் கணிக்க முடியாது. ஆனால், நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைவிட சுமார் 5% - 6% அதிக வருமானம் தர அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே, சேர்த்த பணத்தை இழந்துவிடுவோமோ என்கிற பயம் இல்லாமல் முதலீட்டை நீண்ட காலத்துக்குத் தொடர்வது மிக முக்கியமானதாகும். குறைந்தபட்சம் 5-லிருந்து 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வது மிக முக்கியம். அதன் பிறகு சந்தை இறங்கினாலும் லாபத்தில் சிறிது குறையுமே தவிர, மூலதனத்தில் குறையாது.

3. தொடர் மற்றும் கூடுதல் முதலீடு...

பணக்காரர்கள் எப்போதும் தொடர்ந்து முதலீடு செய்யும் மனநிலையில் இருப்பார்கள். மேலும், முதலீட்டை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவார்கள். எஸ்.ஐ.பி முதலீட்டில் ஸ்டெப்அப் (Step-up) என்கிற ஒன்று இருக்கிறது. இதில் ஏற்கெனவே செய்திருக்கும் முதலீட்டைக் குறிப்பிட்ட சதவிகிதம் அல்லது குறிப்பிட்டத் தொகையை ஆண்டுதோறும் அதிகரிக்க முடியும். உதாரணமாக, ஒருவர் மாதத்துக்கு ரூ.10,000 முதலீடு செய்வதாக வைத்துகொள்வோம். 25 வயதில் முதலீட்டை ஆரம்பிக்கிறார். இவர் 45 வயதில் பணி ஓய்வு பெற விரும்புகிறார். முதலீடு சராசரியாக ஆண்டுக்கு 12% வருமானம் தந்தாலும்கூட தொகுப்பு நிதி நிறைய சேர்ந்திருக்கும். இருபது ஆண்டுகளில் முதலீடு செய்திருக்கும் தொகை ரூ.24 லட்சம் ஆகும். இந்தத் தொகை கிட்டத்தட்ட ரூ.1 கோடியாக அதிகரித்திருக்கும்.

அதுவே முதலீட்டுத் தொகையை ஆண்டுக்கு 10% அதிகரித்து வருவதாக வைத்துக்கொள்வோம். முதல் வருடம் ரூ.10,000 முதலீடு என்பது அடுத்த ஆண்டு ரூ.11,000-ஆக அதிகரிக்கும். இப்படி அதிகரித்து வரும்பட்சத்தில் ஆண்டுக்கு 12% வருமானம் கிடைத்தால், 20 ஆண்டுகள் கழித்து 45-வது வயதில் கிடைக்கும் தொகை ரூ.2 கோடியாக இருக்கும். முதலீட்டுத் தொகை அதிகரிப்பு என்பதோ ஆண்டுக்கு 10% மட்டுமே. ஆனால், தொகுப்பு நிதி 50% அதிகரிப்பது நமக்கு ஆச்சர்யத்தைத் தரும்.

சாதாரணமானவர்கள் எஸ்.ஐ.பி முதலீட்டை ரூ.1,000, ரூ.2,000 என ஆரம்பிப்பார்கள். அதை அப்படியே தொடரவும் செய்வார்கள். அதனால் தான் அவர்கள் கோடீஸ்வரர் ஆக அதிக காலம் பிடிக்கிறது. பதிலாக, ஆண்டுதோறும் கூடுதலாக முதலீடு செய்துவரும் பட்சத்தில் விரைவிலேயே செல்வந்தர் ஆகிவிட முடியும்.

பணக்காரர்களும், செல்வந்தர்களும் அவர்களின் தொழில் மற்றும் முதலீட் டின் மூலம் கிடைக்கும் தொகையை செலவு செய்ய மாட்டார்கள். மீண்டும் மீண்டும் தொழிலிலேயே முதலீடு செய்வார்கள். இதனால் அவர்கள் மேலும் மேலும் செல்வந்தர் ஆகிறார்கள் என்பதை இப்போதாவது நாம் உணர்வோம்!

(கோடீஸ்வரர் ஆவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism