Published:Updated:

``ரூ.1 லட்சம் கொடுங்க... 5 மாசத்துல டபுளா வாங்கிட்டுப் போங்க...’’ பெரம்பலூரில் கொட்டுது `பணமழை!’

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகம்

பெரம்பலூரிலிருந்து 27 கி.மீ தொலைவில் உள்ளது தொழுதூர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு செயல்பட்டுவரும் `ஜி.எஸ்.டி.எல்’ (ஜி.எஸ்.டி.எல் வைபவ் நிதி லிமிடெட்.) நிறுவனம் சொல்வதாகக் கூறப்படும் தொகையைப் பார்த்தால், யாருமே தடுமாறிவிடுவர்.

``ரூ.1 லட்சம் கொடுங்க... 5 மாசத்துல டபுளா வாங்கிட்டுப் போங்க...’’ பெரம்பலூரில் கொட்டுது `பணமழை!’

பெரம்பலூரிலிருந்து 27 கி.மீ தொலைவில் உள்ளது தொழுதூர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு செயல்பட்டுவரும் `ஜி.எஸ்.டி.எல்’ (ஜி.எஸ்.டி.எல் வைபவ் நிதி லிமிடெட்.) நிறுவனம் சொல்வதாகக் கூறப்படும் தொகையைப் பார்த்தால், யாருமே தடுமாறிவிடுவர்.

Published:Updated:
பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகம்

தமிழ்நாட்டில் ஊர் ஊருக்கு மோசடி முதலீட்டுத் திட்டங்கள் வெகுஜோராக நடந்துகொண்டு வருகின்றன. வேலூர் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் மோசடியில் பல லட்சக் கணக்கானவர்கள் பல ஆயிரம் கோடி ரூபாயை இழந்து தவித்துக் கொண்டிருக் கிறார்கள். அந்த நிறுவனத்தில் மக்கள் போட்ட பணம் திரும்பக் கிடைக்குமா, கிடைக்காதா என்று தெரியாத நிலையில், திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் `பிரைட் வே’ என்கிற நிறுவனம் மக்களிடம் இருந்து பல நூறு கோடி ரூபாயைத் திரட்டி, எப்போது வேண்டுமானாலும் அந்த நிறுவனம் மூடப்படலாம் என்கிற நிலை உருவாகி இருக்கிறது.

 மோசடி
மோசடி
(Representational Image)

இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதூரைச் சேர்ந்த `ஜி.எஸ்.டி.எல்’ (GSDL) என்கிற நிறுவனம், `மாதம்தோறும் 16% வருமானம் தருவதாகச் சொல்லி மக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்துக்கொண்டிருக்கிறது’ என்கிற தகவல் நம் காதுக்கு வரவே, களமிறங்கி விசாரிக்க ஆரம்பித்தோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அஞ்சே மாதத்தில் டபுள்...

பெரம்பலூரிலிருந்து 27 கி.மீ தொலைவில் உள்ளது தொழுதூர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு செயல்பட்டுவரும் `ஜி.எஸ்.டி.எல்’ (ஜி.எஸ்.டி.எல் வைபவ் நிதி லிமிடெட்) நிறுவனம் சொல்வதாகக் கூறப்படும் தொகையைப் பார்த்தால், யாருமே தடுமாறிவிடுவர். ``காட்டுக்கும் போக வேண்டாம்..! தொழிலுக்கும் போக வேண்டாம்..! ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் அஞ்சே மாதத்தில் டபுளாகாகக் கிடைக்கும்” என்பதை நம்பி, தொழுதூரைச் சுற்றியுள்ள வி.களத்தூர், பெரம்பலூர், லப்பைக் குடிகாடு, மங்களூர், திருப்பாக்கம், திட்டக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மக்களில் பலரும் கையில் இருந்த பணம் மட்டுமல்லாது, கடனை வாங்கி, தங்க நகையை அடகு வைத்து, நிலத்தைக்கூட அடமானம் வைத்துப் பணம் கட்டி வருகிறார்களாம்.

GSDL
GSDL

நல்ல நேரம் ஆரம்பிச்சிடுச்சு...

இந்த நிறுவனத்தில் பணம் போட விரும்புவதாகச் சொல்லிக் கொண்டு அந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் நுழைந்தோம். அங்குள்ள ஏஜென்ட் ஒருவரிடம் பேச்சு கொடுத்தோம். ``உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பிச்சிடுச்சு. நம்ம கம்பெனியில மெம்பரா சேர்ந்த யாருமே பின்தங்கியது இல்ல. இங்க வந்த எல்லாருக்குமே ஏறுமுகம்தான்” எனச் சொல்லி வலையை விரிக்க ஆரம்பித்தார் அந்த ஏஜென்ட்.

``எங்க கம்பெனியில நீங்க ஒரு லட்சம் போட்டா அஞ்சே மாசத்துல நீங்க போட்ட பணம் டபுள் ஆயிடும். அதாவது, மாசம் 20% வருமானம் கிடைக்கும். இடையில நிறைய வருமானம் கொடுக்க வேணாம்னு மாசாமாசம் 16% தர ஆரம்பிச்சோம். இப்ப அதை 10% குறைக்கலாமான்னு ஒரு பேச்சு ஓடுகிட்டு இருக்கு. மாசம் 10 பர்சன்ட்ன்னாலும் ஒரே வருஷத்துல டபுள் ஆயிடும்ங்கிறது எவ்வளவு பெரிய விஷயம்!’’ என்று அவர் நமக்குத் தூண்டில் போட்டார்.

``சூப்பர், உங்களால எப்படி இந்தளவுக்கு லாபம் தரமுடியுது’’ என்று வெள்ளந்தியாகக் கேட்டோம்.

``ஃபாரெக்ஸ் டிரேடிங்தான். டாலர், யூரோன்னும் எல்லா கரன்சியிலும் நாங்க டிரேடிங் பண்ணி, மாசம் 40% லாபம் சம்பாதிப்போம். அதுல இருந்து 20% பணத்தைத் தர்றதுக்கு எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்ல’’ என்றவர், ``சரி, நீங்க எவ்வளவு பணம் கட்டப்போறீங்க’’ என்று நம்மைக் கேட்க,

``ஸ்கீமைப் பத்தி மொதல்ல தெரிஞ்சுக்கலாம்னு வந்தோம். பணம் ரெடியானதும் உங்களைத் தேடி வர்றோம்’’ என்று நாம் இழுக்க, டென்ஷன் ஆனார் அந்த ஏஜென்ட்.

யார் சொல்லி இங்க வந்தீங்க?

``உங்க ரியாக்‌ஷனைப் பார்த்தா, நீங்க பணம் போடவந்த மாதிரி தெரியல. வேவு பார்க்க வந்த மாதிரில்ல தெரியுது. யார் சொல்லி நீங்க இங்க வந்தீங்க’’ன்னு என்று அவர் நம்மைப் பார்த்து கேள்விக்கு மேல் கேள்வி கேட்க, நாம் ஒருவரின் பெயரைச் சொல்ல, அடுத்த நிமிடம் அவருக்கு போன் போனது. அந்த நபரோ, ``நான் யாரையும் அனுப்பலையே’’ என்று சொல்ல, நம்மை ஏற இறங்கப் பார்த்தார் அந்த ஏஜென்ட். ``அவரு மறந்துட்டார்போல. பணத்தோட உங்களை வந்து பார்க்குறோம்’’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து `எஸ்கேப்’ ஆகி வெளியே வந்தோம்.

GSDL
GSDL
``நம்முடைய நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி யாரோ விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். இனி நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...’’

`போட்டுக் கொடுக்கும் கறுப்பு ஆடுகள்...’

அடுத்த சில மணி நேரத்துக்குள், நம்மைப் பற்றி எங்கெல்லாம் விசாரிக்க முடியுமோ, அங்கெல்லாம் விசாரித்துவிட்டார்கள்.

``நம்முடைய நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி யாரோ விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். இனி நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’’ என்று உஷாரான நிறுவனம், புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதை ஒரு வார காலத்துக்கு நிறுத்தி வைத்தது. ஏற்கெனவே இருக்கிற உறுப்பினர்களில் நிறுவனத்துக்கு எதிராக `போட்டுக் கொடுக்கும் கறுப்பு ஆடுகள்’ யாராவது இருக்கிறார்களா என்றெல்லாம் அலசி ஆராய்ந்து பார்த்தது. சந்தேகப்படும்படி யாரும் சிக்கவில்லை என்பதால், செப்டம்பர் 1-ம் தேதி முதல் மீண்டும் கடை விரித்து, புதிய நபர்களிடம் இருந்து பணம் வாங்கத் தொடங்கி இருக்கிறது ஜி.எஸ்.டி.எல் நிறுவனம்.

அதிர்ச்சி தந்த தகவல்கள்...

இந்த `கேப்'பில் நாமும் இந்த ஜி.எஸ்.டி.எல் நிறுவனம் குறித்து விசாரிக்க ஆரம்பித்தோம். இந்த நிறுவனம் பற்றி எங்களுக்குத் தெரியவந்த தகவல்கள் அதிர்ச்சி தருவதாக இருந்தன.

இந்த நிறுவனத்தின் வெப்சைட்டுக்குள் (http://gsdlnidhiltd.com/contact_us.html) நுழைந்து பார்த்தால், சிறு சேமிப்பு, சிறு தொழில் கடன் போன்றவற்றைச் செய்வதாகச் சொல்கிறது.

GSDL  ( ஜி.எஸ்.டி.எல் )
GSDL ( ஜி.எஸ்.டி.எல் )

இதை எல்லாம் செய்வதற்கு மக்களிடம் இருந்து ஏன் பணம் வாங்க வேண்டும், அப்படியே வாங்கினாலும் மாதந்தோறும் 10% என்கிற அளவுக்கு எப்படி லாபம் தர முடியும் என்கிற கேள்வி கட்டாயம் எழுகிறதல்லவா? அப்படியானால், இந்த நிறுவனம் என்னதான் செய்கிறது என இன்னும் தீவிரமாக விசாரித்ததில், மக்கள் தரும் பணத்தைக் கொண்டு ஃபாரெக்ஸ் டிரேடிங் செய்வதாகச் சொல்லப்படுகிறது. துபாயில் இருக்கும் ஆரா (Aura) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஃபாரெக்ஸ் டிரேடிங் செய்வதாகச் சொல்கிறார்கள் சிலர். ``அதெல்லாம் கிடையாது. இந்த நிறுவனத்துக்கும் துபாயில் இருக்கும் `ஆரா’ துளியும் சம்பந்தம் இல்லை. பணம் போடுகிறவர்களை ஏமாற்ற இப்படி எதையோ சொல்கிறார்கள்'' என்றும் கூறுகிறார்கள்.

டப்பா டிரேடிங்...

அடுத்து நமக்குக் கிடைத்த தகவல்தான் உச்சக்கட்ட அதிர்ச்சியைத் தருவதாக இருந்தது. அதாவது, இந்த நிறுவனம் `டப்பா டிரேடிங்’ செய்து வருவதாகச் சொன்னார்கள். அது என்ன டப்பா டிரேடிங்?

``அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரி எதையும் கட்டாமல் தவிர்ப்பதற்கு பில் இல்லாமல் பொருள் வாங்கி, விற்கிற `நம்பர் 2’ பிசினஸ் மாதிரிதான் இந்த டப்பா டிரேடிங். அரசு அங்கீகாரம் பெற்ற எக்ஸ்சேஞ்சுகளில் ஷேர்களை வாங்க வேண்டும் என்றாலோ, கமாடிட்டி டிரேடிங் செய்ய வேண்டும் என்றாலோ, ஃபாரெக்ஸ் டிரேடிங் செய்ய வேண்டும் என்றாலோ அரசுக்குரிய அனைத்து வரிகளையும் கட்டித்தான் வாங்க/விற்க முடியும். ஆனால், டப்பா டிரேடிங்கில் வரி, எக்ஸ்சேஞ்சுக்குரிய கட்டணம் எதுவும் கட்டாமலே ஃபாரெஸ் டிரேடிங் செய்யலாம். அதைத்தான் இந்த நிறுவனம் செய்துகொண்டிருக்கிறது’’ என்றார்கள் விவரம் தெரிந்த சிலர்.

டப்பா டிரேடிங்
டப்பா டிரேடிங்

``ஆனால், மக்களிடம் இருந்து வாங்கும் பணத்துக்கு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் மூலம் சரியாகக் கணக்கு காட்டப்படுவதாகச் சொல்லப்படுகிறதே!’’ என்று விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டோம்.

``இது மாதிரியான போலியான சாஃப்ட்வேர் தருவதற்கு எத்தனையோ நிறுவனங்கள் உள்ளன. நீங்கள் பணம் தருவது, லாபம் மூலம் கிடைக்கும் பணம் அதில் சேர்வது, குறைவது என எல்லாக் கணக்கையும் சாஃப்ட்வேர் மூலம் எப்படி வேண்டுமானாலும் காட்டலாம். இந்தக் கணக்கு எல்லாம் உண்மை கிடையாது’’ என்று விளக்குகிறார்கள் அந்த சிலர்.

இந்த நிறுவனம் சொல்வதை நம்பி லப்பை குடிகாட்டில் மட்டும் ரூ.100 கோடியும், வி.களத்தூரில் ரூ.100 கோடியும் மங்களூரில் ரூ.50 கோடியும், சிறுபாக்கத்தில் ரூ.50 கோடியும் மக்கள் பணம் போட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். சில ஊர்களில் உள்ள வங்கிகளில் தங்க நகைக் கடன் வாங்குவதற்குக் கூட்டம் அலைமோதக் காரணம், கையில் இருக்கும் நகைகளை வங்கியில் அடமானம் வைத்து, இதில் பணம் போடுவதற்குத்தான் என்கிறார்கள்.

இந்த நிறுவனத்தில் மக்கள் கட்டும் பணத்துக்கு `Maxpro’ என்கிற நிறுவனத்தின் பெயரில் ரூ.1 ஸ்டாம்ப் ஒட்டி ஒரு ரசீது தருகிறார்கள். இந்த நிறுவனத்தில் பணம் கட்டியிருக்கிறோம் என்பதற்கு மக்களுக்கு அளிக்கப்படும் ஒரே அத்தாட்சி இது மட்டும்தான்.

கூட்டு முதலீட்டுத் திட்டம்...

இந்த நிறுவனம் மக்களிடம் பணம் வசூலித்து ஃபாரெக்ஸ் டிரேடிங் செய்வதாகச் சொல்கிறது. இது, கூட்டு முதலீட்டுத் திட்டத்தின் (Collective investment scheme) கீழ் வருகிறது. இந்தத் திட்டத்தை நடத்த வேண்டும் எனில், இந்த நிறுவனம் `செபி’யிடம் அனுமதி வாங்க வேண்டும். அப்படி எந்த அனுமதியையும் இந்த நிறுவனம் வாங்கிய மாதிரி தெரியவில்லை.

ரூ.5 லட்சம் முதலீட்டில் இந்த நிறுவனம் தொடங்கி நடத்தப்பட்டு வருவதாக வர்த்தக விவகாரத் துறையில் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.என் நம்பர்கூட வாங்காமல் இந்த நிறுவனம் செயல்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

GSDL
GSDL

புதிதாக முதலீடு செய்யும் நபர்களை இந்த நிறுவனத்துக்கு அறிமுகம் செய்யும் உறுப்பினர்களுக்கு ரூ.2,500 முதல் ரூ.5,000 வரை கமிஷனாகத் தருகிறார்கள். இதனால், பலரும் புது உறுப்பினர்களைக் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருக் கிறார்கள்’’ என்று கூடுதல் தகவல்களையும் தந்தார்கள்.

மாதத்துக்கு ஒருமுறை இந்த நிறுவனத்தில் பணம் கட்டியவர் களுக்குத் தர வேண்டிய லாபத் தொகையை நேரடியாக சந்தித்துக் கொடுத்துவிடுவதால், இந்த நிறுவனம் பற்றி மக்கள் புகார் எதையும் தராமல் இருக்கிறார்கள். தவிர, இந்த நிறுவனத்தைத் தொடங்கி வைத்ததே காவல் துறையின் ஒரு முன்னாள் உயரதிகாரிதான் என்கிறார்கள்.

இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து காவல் துறை கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை. பிரச்னை முற்றிய பின்புதான் வழக்கம்போல காவல் துறை வருமோ என்னவோ!

``யாரிடமும் நாங்கள் நிதியைத் திரட்டவில்லை...’’

சரி, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி.எல் நிறுவனத்தின் பதில் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களுடைய இணையதளத்தில் இருக்கும் மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினோம். ``யோகேஷ்’’ என்று தன் பெயரை அடையாளப்படுத்திக்கொண்ட ஒருவர் நம்மிடம் பேசினார். அவர் அந்த நிறுவனத்தில் அக்கவுன்ட்ஸ் துறையில் வேலை பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.

``ஃபாரெக்ஸ் டிரேடிங் செய்து அதிக லாபம் தருவதாகக் கூறி மக்களிடம் நீங்கள் நிதி திரட்டுவதாகப் புகார்கள் வருகிறதே, அது பற்றி உங்களுடைய பதில் என்ன?” என்று கேட்டபோது,

GSDL
GSDL

``அப்படியெல்லாம் நாங்கள் யாரிடமும் நிதி திரட்டவே இல்லை. எங்களுடையது வங்கி சார்ந்த சேவைகள் தரும் நிறுவனம் மட்டுமே. சேமிப்பு, டெபாசிட், குறுங்கடன் போன்ற சேவைகள் மட்டுமே வழங்கி வருகிறோம். நீங்கள் கூறுவதுபோல எந்த டிரேடிங்கும் இங்கு நடப்பதில்லை. யாரிடமும் நாங்கள் நிதியைத் திரட்டவும் இல்லை” என்றார்.

``உங்களுடைய நிறுவனத்தை நடத்துவதற்குத் தேவையான அனுமதியை யாரிடம் பெற்றிருக்கிறீர்கள். எங்கு பதிவு செய்திருக்கிறீர்கள்?’’ என்றெல்லாம் கேட்டதும், ``அந்த விவரங்களெல்லாம் எங்களுடைய சாரிடம்தான் கேட்க வேண்டும். நான் சாதாரண ஊழியன்’’ என்றார்.

``உங்களுடைய சார் தொடர்பு எண்ணைக் கொடுங்கள்’’ என்று கேட்டோம்.

``தர முடியாது” என்று சொல்லி போனை வைத்துவிட்டார். இதையடுத்து, அவர்களுடைய இணையதளத்திலிருக்கும் மெயில் முகவரிக்கு (agmk7moorthy@gmail.com) கீழ்க்கண்ட கேள்விகளை அனுப்பி, பதிலளிக்கக் கோரினோம்.

நாங்கள் கேட்ட கேள்விகள்...

1. உங்கள் நிறுவனம் சிறுசேமிப்பு, குறுங்கடன் ஆகியவற்றைத் தருவதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தொழிலை நீங்கள் செய்கிறபட்சத்தில், பல ஆயிரம் கோடி ரூபாயை மக்களிடம் இருந்து திரட்டுவதாக ஏன் புகார் கூறப்படுகிறது?

2. உங்கள் நிறுவனத்தில் மக்கள் செய்யும் முதலீடு பணத்துக்கு மாதந்தோறும் 10% முதல் 20% வரை நீங்கள் லாபம் தருவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு தங்களுடைய விளக்கம் என்ன?

3. நீங்கள் வங்கிச் சேவையில் மட்டும்தான் ஈடுபடுகிறீர்கள் என்பதற்கான ஆதாரங்கள் என்ன? அதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறீர்களா, அனுமதி வாங்கியதற்கான ஆவணங்களை எங்களுக்குத் தர முடியுமா?

GSDL
GSDL

4. நீங்கள் ஃபாரெக்ஸ் டிரேடிங் போன்றவற்றில் எதுவும் ஈடுபடுகிறீர்களா, அவற்றை டெரிவேட்டிவ் முறையில் செய்கிறீர்களா? ஆம் எனில், எந்த எக்ஸ்சேஞ்ச் மூலம் செய்கிறீர்கள் அல்லது ஸ்பாட் முறையில் செய்கிறீர்களா? இப்படி செய்வதற்கு எந்தக் கண்காணிப்பு அமைப்பிடம் (Regulators) நீங்கள் அனுமதி வாங்கி இருக்கிறீர்கள்? நீங்கள் ஃபாரெக்ஸ் டிரேடிங் செய்து லாபம் ஈட்டியதற்கான டிரான்ஸாக்‌ஷன் கணக்குகளை எங்களுக்குத் தர முடியுமா?

5. உங்கள் GSDL நிறுவனம் வெளிநாட்டில் ஆரா ஃபைனான்ஸிங் புரோக்கர் (Aura - Financing Broker) நிறுவனத்துடன் பார்ட்னராக இருக்கிறதா? அந்த நிறுவனத்துக்கும் உங்கள் நிறுவனத்துக்கும் உள்ள உறவு என்ன?

6. உங்கள் நிறுவனத்தின் சார்பில் ஏஜென்டுகளை நியமித்து, எம்.எல்.எம் (MLM) முறையில் மக்களிடம் இருந்து பணம் வாங்குவதாகச் சொல்லப்படுகிறது. இதுபோல, மக்களிடம் இருந்து பணம் வாங்கி லாபம் தரும் திட்டங்களை நடத்துவது கலெக்ட்டிவ் இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீம் என்கிற வகையின்கீழ் வருகின்றன. இது மாதிரியான திட்டங்களை ஏதேனும் உங்களுடைய நிறுவனத்தில் நடத்துகிறீர்களா?

உஷார் மக்களே உஷார்!

மேற்கண்ட இந்த ஆறு கேள்விகளுக்கும் நாங்கள் ஜி.எஸ்.டி.எல் நிறுவனத்தின் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பிய பிறகு, ``Good evening sir, Few minutes I will revert sir’’ (``மாலை வணக்கம், சில நிமிஷங்களில் உங்களுக்கு பதில் தருகிறேன்’’) என்று பதில் வந்தது. நாம் கேட்ட கேள்விகள் எதற்கும் ஜி.எஸ்.டி.எல் நிறுவனத்தின் சார்பில் பதில் அளிக்கப்படவில்லை. நாங்கள் கேட்ட அந்த ஆதாரத்தையும், நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலையும் ஜி.எஸ்.டி.எல் நிறுவனம் தரும்பட்சத்தில், அவற்றையும் பதிவிடத் தயாராகவே இருக்கிறோம்.

மக்களே உஷார்... ஆசையைத் தூண்டு... கொள்ளை அடி...
மக்களே உஷார்... ஆசையைத் தூண்டு... கொள்ளை அடி...
``நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இழக்காமல் இருப்பது உங்கள் கடமை ஆகும். பேராசை பெரு நஷ்டத்தை ஏற்படுத்திவிடும் என்பதை மட்டும் மறக்காதீர்கள்..!''

மக்களே, எந்த நிறுவனத்திலும் பணம் கட்டுவதற்கு முன்பாகவும், மேலே உள்ள கேள்விகளை நீங்களும் தாராளமாகக் கேட்கலாம். அதீத வருமானத்தைத் தருவோம் என எந்த நிறுவனம் சொன்னாலும், மேலே உள்ள கேள்விகளைக் கேட்கத் தவறாதீர்கள். அந்தக் கேள்விகளுக்கு சரியான பதிலை அவர்களால் தர முடியவில்லை எனில், அந்த நிறுவனத்தில் ஒரு ரூபாயைக்கூட முதலீடு செய்யாதீர்கள். கூடவே சம்பந்தப்பட்ட நிறுவனம் பற்றியும், உங்களுடைய சந்தேகங்களையும் navdesk@vikatan.com என்கிற எங்களுக்கு இ-மெயில் முகவரிக்கு உடனே எழுதி அனுப்பி வையுங்கள்...

நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இழக்காமல் இருப்பது உங்கள் கடமை ஆகும். பேராசை பெரு நஷ்டத்தை ஏற்படுத்திவிடும் என்பதை மட்டும் மறக்காதீர்கள்!