Published:Updated:

“ஆரம்ப சம்பளம் 500 ரூபாய்... இ.எம்.ஐ-யில் கார், வீடு..!”

ஆயிரம் முதல் லட்சம் வரை - அனுபவம் பகிரும் பிரபலங்கள்

பிரீமியம் ஸ்டோரி

'அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்...’ என வாழ்க்கையின் யதார்த்தத்தைத் தன் பாடல் வரிகள் மூலமாக நமக்கு உணர்த்தியவர் பாடலாசிரியர் சினேகன். இனிமையான, எளிமையான வார்த்தைகளால் சினிமா பாடல்களுக்கு உயிரோட்டம் கொடுக்கும் கவிஞர்களில் சினேகனுக்குத் தனியிடம் உண்டு. ‘ஞாபகம் வருதே’, ‘ஆராரிராரோ, நான் இங்கு பாட’, ‘அறியாத வயசு’, ‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’, ‘வெள்ளாவி வச்சுத்தான்’, ‘காட்டுப் பயலே’ உள்ளிட்ட பல பாடல்கள் சினேகனின் கவித்திறமைக்குச் சான்றுகள். பிழைப்புக்காகச் சென்னை வந்து, போராடி சினிமாத் துறையில் புகழ்பெற்றவர், தனது பண அனுபவங்களை சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டார்.

மனைவி கன்னிகாவுடன் சினேகன்
மனைவி கன்னிகாவுடன் சினேகன்

“எனது பூர்வீகம், தஞ்சாவூர் மாவட்டம் புதுக்கரியப்பட்டி கிராமம். கூடப்பிறந்த எட்டு பேரில் நான்தான் கடைக்குட்டி. கூட்டுக் குடும்பம். அப்பா, சித்தப்பா, பெரியப்பா ஆகியோர் இணைந்து சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். சேமிப்பு குறித்த விழிப்புணர்வு அப்போது அதிகம் இல்லாததால், அறுவடைக்குப் பிறகு, பணம் இருக்கும்போது நிறைய செலவழிப்பார்கள். பண நெருக்கடி ஏற்படும்போது சிக்கனத்தைக் கடைப் பிடிப்பார்கள்.

எங்களுடையது மானாவாரி பூமி. மழை யின்றி அடிக்கடி பஞ்சம் ஏற்படும். விவசாயிகள் பலரும் சொந்த நிலத்தை விற்றுவிட்டு, கூலி வேலைக்குச் செல்லும் நிலை தொடர்ந்தது. அதன்பிறகுதான், சேமிப்பு குறித்த சிந்தனையே எங்களில் பலருக்கும் ஏற்பட்டது.

ஆடு, மாடு வளர்ப்பதுதான் அப்போது எங்களுக்குத் தெரிந்த ஒரே சேமிப்புப் பழக்கம். கஷ்டம் வரும்போது, கால்நடைகளை விற்று நெருக்கடியைச் சமாளிப்போம். விவசாயம் பொய்த்துப்போகும் சில சமயங்களில் எங்கள் குடும்பத்திலும் நிதி நெருக்கடி பெரிய அளவில் தாக்கும். ஆனாலும், கிராமத்துச் சூழலில் மகிழ்ச்சியாகவே வளர்ந்தேன். அரசுப் பள்ளியில்தான் படித்தேன். சிறு வயதிலிருந்தே சினிமா மீது ஏற்பட்ட ஆர்வத்தால் படிப்பில் எனக்குப் பெரிதாக நாட்டமில்லை.

தஞ்சை மாவட்டத்தில் வைரமுத்து சாரின் பெயரில் இலக்கியப் பேரவை ஒன்று இயங்கி வந்தது. அதில் நானும் ஒரு பொறுப்பில் இருந்தேன். அந்த வகையில் வைரமுத்து சாருடன் எனக்கு ஏற்பட்ட பழக்கம், அவருடைய உதவியாளராகப் பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடிக்கும் தறுவாயில், 1995-ல் முதன் முதலாகச் சென்னை வந்தேன்.

கிராமத்திலேயே வளர்ந்த எனக்கு, சென்னையின் சூழல் ஒருவிதமான அச்சத்தையும் வியப்பையும் தந்ததை என்றுமே மறக்க முடியாது. வைரமுத்து சாரிடம் நான் பெற்ற முதல் சம்பளம் 600 ரூபாய். சொந்த ஊரில் என் பெற்றோர் வசித்து வந்த ஓலைக்கூரையால் வேயப்பட்ட வீட்டைப் புனரமைக்க 7,000 ரூபாய் தேவைப்பட்டது. அந்தத் தொகையை வைரமுத்து சாரிடம் முன்பணமாகப் பெற்றுக்கொண்டு, என் சம்பளத் திலிருந்து மாதம்தோறும் 500 ரூபாயைக் கழித்துக்கொள்ளச் செய்து, அந்தக் கடனை அடைத்தேன். வைரமுத்து சார் தொடங்கிய சூர்யா பதிப்பகத்தின் முழுப் பொறுப்பையும் கவனித்துக்கொண்டது உட்பட அவருடன் பல தளங்களில் நான்கரை ஆண்டுகள் பணியாற்றினேன்.

அதன்பிறகு, தனியாகப் பயணிக்க ஆரம்பித்தேன். வருமான வாய்ப்புகளுக்காகப் பக்திப் பாடல்கள் அதிகம் எழுதினேன். ஒரு பாட்டுக்கு 500 ரூபாய்தான் கிடைக்கும். அப்போது எனக்குக் கொடுத்து உதவும் நிலையில் என் பெற்றோரும், அவர்களிடம் பண உதவி கேட்கும் மனநிலையில் நானும் இல்லை. நண்பர்கள் சிலருடன் இணைந்து தங்கியிருந்தேன். அந்த அறைக்கான வாடகைக் கொடுக்கவும் பல மாதங்கள் சிரமப்பட்டிருக்கிறேன். அந்தச் சிரமத்திலும் தியேட்டரில் சினிமா பார்ப்பதற்காகவே குறிப்பிட்ட தொகையைச் சேர்த்து வைக்க மெனக்கெடுவேன். மாதக் கடைசியில் பண நெருக்கடி அதிகம் இருக்கும். அப்போதெல்லாம் பேருந்துக்குப் பணம் இன்றி, பல கிலோ மீட்டர் நடந்தே செல்வேன்.

‘இளந்தென்றல்’ என்ற சிறார் இதழின் ஆசிரியராகவும், டி.ராஜேந்தர் சாரின் ‘உஷா’ பத்திரிகையில் பகுதிநேர பத்திரிகையாளராகவும் சில ஆண்டுகள் வேலை செய்தேன். கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றிலும் வேலை செய்தேன். வலம்புரி ஜான் ஐயாவுடன் சில காலம் பயணித்தேன். பல பத்திரிகைகளில் கவிதை எழுதியதுடன், புத்தகங்களும் எழுதினேன். கிடைத்த சின்ன வாய்ப்புகளையும்கூட சரியாகப் பயன்படுத்திக்கொண்டேன்.

லோன் போட்டு பைக் வாங்கி, வாய்ப்புகள் தேடி சென்னையில் தெருத் தெருவாய் அலைந்தேன். அப்போதைய தேவைக்குப் போக, சில நூறு ரூபாய் கூடுதலாக வருமானம் கிடைத்தால் எனக்குக் கொண்டாட்டமாக இருக்கும். அந்தப் பணத்தில் என்னுடன் தங்கி யிருந்த நண்பர்களுக்கு உணவு வாங்கிக் கொடுப்பேன் அல்லது அரை கிலோ கறி எடுத்து தண்ணீராகக் குழம்பு வைத்து எல்லோரும் பகிர்ந்து உண்போம்.

இயக்குநர் கே.பாலசந்தர் ஐயா மற்றும் நண்பர்கள் சிலரின் ஊக்கத்தால், பாடலாசிரியர் ஆவதற்கு முயற்சி செய்தேன். ஆரம்பக்காலத்தில் சில சினிமா பாடல்களை எழுதிய நிலையில், அவை இடம்பெற்ற படங்கள் தியேட்டரில் வெளியாகவில்லை. ‘உன் தலையெழுத்து என்ன ஆகுமோ?’ என்று என் குடும்பத் தினரால் ஏற்பட்ட புறக் கணிப்புகள், எனக்குக் கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்தன. தன்மானம், இலக்கை நோக்கிய போராட்டம் எனப் பெரிய வேட்கையுடன் உறக்கமின்றி இரண்டு ஆண்டுகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டேன்” என்று போராட்டக் காலத்தை நினைவுகூர்ந்தவருக்கு, ‘பாண்டவர் பூமி’யில் வரும் ‘அவரவர் வாழ்க்கையில்’ பாடல் தான் பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. அந்தப் படத்தில் எழுதிய ஐந்து பாடல்களுக்கும் ஊதியம் பெற மறுத்திருக்கிறார் சினேகன்.

“ஒரு பாடல் ஹிட் ஆனதுமே சினிமா உலகம் நம்மைக் கொண்டாடத் தொடங்கும் எனத் தவறாகக் கணித்து விட்டேன். வாய்ப்புக்காக மீண்டும் அலைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோதுதான் அந்த யதார்த்தம் எனக்குப் புரிந்தது.

பல மாதக் கால முயற்சிக்குப் பிறகு, ‘கல்யாணம்தான் கட்டிக் கிட்டு ஓடிப்போலாமா...’ பாடலின் வெற்றிக்குப் பிறகு, ஓரளவுக்கு வாய்ப்புகள் வரத்தொடங்கின. அதன்பிறகுதான் சம்பாதிக்கவே ஆரம்பித்தேன்.

ஒரு பாடலுக்கு ஐந்தாயிரம், பத்தாயிரம் என்றுதான் வருமானம் கிடைக்கும். பொருளாதாரப் பலம் உயர உயர, எனக்கான பொறுப்பு களும் உயர்ந்தன. என் வருமானம், என்னைச் சுற்றியிருந்தவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான அவசியத் தேவைக்குச் செலவு செய்யவே போதுமானதாக இருந்தது.

சினிமாவில் நிலையான வாய்ப்புகளும் வருமானமும் கிடைக்காது என்பதையும், பணம் இருக்கும்போது அதைச் சரியாகச் சேமித்து வைக்க வேண்டும் என்பதையும் அனுபவத்தின் மூலம் காலதாமதமாகவே உணர்ந்தேன். அதன் பிறகு, லோன் போட்டு, கார் மற்றும் வீடு வாங்கினேன்.

சொந்த ஊரில் என் அண்ணன் கள் நால்வருக்கும் ஒரே காம்பவுண் டில் தனித்தனி வீடுகள் கட்டிக் கொடுத்தேன். அவற்றுக்கான கடனையெல்லாம் அடைக்க வேண்டிய உந்துதலில் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்துடன் வைராக்கியத் துடன் இயங்கினேன்.

மக்களுக்குப் பிடித்தமான பல பாடல்களை எழுதியிருப்பதாக நினைக்கிறேன். அதன்மூலம் கிடைத்த வருமானத்தில், எல்லாக் கடனையும் அடைத்து முடித்து விட்டேன்.

“ஆரம்ப சம்பளம் 500 ரூபாய்... 
இ.எம்.ஐ-யில் கார், வீடு..!”

பெரிய நடிகர்களின் படங்களாக இருக்கும்பட்சத்தில் ஒரு பாடலுக்கு அதிகபட்சமாக மூன்று லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெற்றிருக்கிறேன். பணத்துக்கான தேவை இருப்பினும், அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, எனக்கு உடன்படாத பாடல்களில் பணியாற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

இதனால், பாடல் வாய்ப்புக்காகக் காத்திருப்பதும் வருமானத்துக்காக ஓடுவதும் இன்றும் தொடர்கிறது. இந்தக் காத்திருப்பு, நமக்கான இருப்பைத் தக்கவைத்துக்கொள்வது, வாய்ப்புக்காக என்னைத் தயார்படுத்திக்கொள்வதெல்லாம் பெரிய சவாலாகவே இருந்தாலும், அதில்தான் வாழ்க்கை மற்றும் உழைப்பின் சுவாரஸ்யமான தடமும் பதிந்திருக் கின்றன.

ஓரளவுக்கு அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், எதிர்காலத் தேவைகளுக்கான சேமிப்பை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை நான் உணர்ந்திருக்கிறேன். பணம் உள்ளிட்ட எந்த விஷயமாக இருந்தாலும் இலக்கை நிர்ணயித்து, செயல் பட்டால், நிச்சயமாக வளர்ச்சியை அடையலாம்.

நம் சம்பாத்தியம் எவ்வளவாக இருந்தாலும், அதில் குறைந்தபட்சம் 25 சதவிகிதத்தையாவது சேமித்தால், அவசிய மற்றும் எதிர்காலத் தேவைகளைச் சிக்கலின்றி சமாளிக்கலாம் என்கிற உண்மையைப் புரிந்துகொண்டு, அதைச் செயல்படுத்தி வருகிறேன்” என்று பணம் தொடர்பான தன் அனுபவங்களை நிறைவாகக் கூறி முடித்தார் சினேகன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு