நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

ஆன்லைன் பேமென்ட்... உஷார்!

சந்தையில்...
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தையில்...

‘Money’ துளிகள்..!

ஆன்லைன் பேமென்ட்... உஷார்!

சந்தையில் வாங்கினால் லாபம்!

சில வருடங்களுக்குப் பிறகு, எங்கள் ஊர் வார சந்தைக்குச் சென்றேன். காய்கறிகளை கடல் போல் பரப்பி வியாபாரம் செய்துகொண்டிருந் தார்கள். அப்போது யோசித்தேன். கடைகளில் சிறு பெட்டியில் இருக்கும் காய்கறிகளை வாங்குவதைவிட, சந்தையில் ஃப்ரெஷ்ஷாக பல ரகத்தில் குவிந்துகிடக்கும் காய்கறிகளை நாம் தேர்ந்தெடுத்து வாங்கியது புது அனுபவமாக இருந்தது. சுவையும் கூடுதலாக இருப்பதாக உணர்ந்தேன். அது மட்டுமல்ல, கடைகளில் விற்கப்படும் விலையைவிட, சந்தையில் உள்ள விலை மிகவும் குறைவு. சூப்பர் மார்க்கெட்களில் சொன்ன விலையைத் தந்து வாங்கியவர்கள், அங்கு பேரம் பேசுவதைக் கண்டேன். வாரம்தோறும் வாரச் சந்தையில் வாங்குவதன் மூலம் சிறு குறு விவசாயிகளும் பயனடைவார்கள் அல்லவா! வாய்ப்பு இருப்பவர்கள் வாரச் சந்தைகளைப் பயன்படுத்தலாமே என்பது என் வேண்டுகோள்!

- க.வாசுதேவன், சமயபுரம்.

ஆன்லைன் பேமென்ட்... உஷார்!

பேராசை பெரும் நஷ்டம்..!

சமீபத்தில் முகநூலில் 600 ரூபாய்க்கு 2 பட்டுச் சேலைகள் என்றும், ஆன்லைன் வழியே ஆர்டர் செய்தால் வீட்டுக்கு டெலிவரி செய்வதாகவும் விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன். கொடுக்கப்பட்டிருந்த படத்தில் சேலைகள் மிகவும் அழகாக இருந்தன. இவ்வளவு குறைவான விலைக்கு 2 பட்டுச் சேலைகள் கொடுக்க முடியுமா என சந்தேகம் வந்தது. ஆனால், ஆசை என்னை மேற்கொண்டு யோசிக்க விடவில்லை. 600 ரூபாய் செலுத்திவிட்டு காத்திருந்தேன். ஒரு வார காலத்தில் 2 சேலைகளையும் டெலிவரி செய்தார்கள். பார்சலைப் பிரித்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன். மிக மோசமான சாதாரண சேலைகள் இரண்டை அனுப்பி யிருந்தார்கள்.

விசாரிப்பதற்காக அவர்கள் கொடுத்திருந்த எண்ணை அழைத்தபோது, அந்த எண் உபயோகத்தில் இல்லை எனத் தெரியவந்தது. ஆன்லைன் பர்ச்சேஸ் செய்யும்போது நம்பகமான தளங்களைத் தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிந்துகொண்டேன். அறிவுபூர்வமாக யோசிக்காமல் பேராசைப்பட்டால் பணத்தை இழக்க வேண்டியிருக்கும் என்பதையும் புரிந்துகொண்டேன்.

- முத்துலெஷ்மி, திருநெல்வேலி.

ஆன்லைன் பேமென்ட்... உஷார்!

ஆன்லைன் பேமென்ட்... உஷார்!

கடந்த மாதம் வாடிக்கையாக வாகனம் பழுது பார்க்கும் மையத்துக்குச் சென்றேன். வாகனம் பழுது பார்த்தபின் அதற்கான தொகையைச் செலுத்த ஆயத்தமானேன். க்யூ.ஆர் கோட் மூலம் பணம் செலுத்தலாம் என்றார் கடையில் இருந்த பெரியவர். என் மொபைலில் இருந்து செலுத்தினேன். அவர் தன் மகனுக்கு போன் செய்து கேட்டுவிட்டு பணம் வரவில்லை என்றார். தெரிந்தவர் என்பதால் நானும் யோசிக்காமல் மீண்டும் அனுப்பினேன். மீண்டும் அவர் தன் மகனுக்கு போன் செய்து பணம் வந்துவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டார். வீட்டில் வந்து பேலன்ஸ் பார்த்தபோது இரண்டு முறை பணம் சென்றுள்ளதை அறிந்தேன். மறுநாள் காலை சென்று விசாரித்தேன். பெரியவர் தன் மகனை அழைத்துக் கேட்க, அவரோ வங்கிக் கணக்கு விவரங்களைப் பார்க்காமலேயே அலட்சியமாக ஒரு முறைதான் வந்துள்ளது என்றார். ஆனால், ஏ.டி.எம்மில் எடுத்த மினி ஸ்டேட்மென்ட் உட்பட பல ஆதாரங்களையும் காட்டிய பிறகு, வேறு வழியில்லாமல் தன் வங்கிக் கணக்கு விவரங்களைப் பார்த்து இரண்டு முறை பணம் வந்துள்ளதை ஒப்புக்கொண்டு, உரிய தொகையை திரும்பக் கொடுத்துவிட்டார். தெரிந்தவரோ தெரியாதவரோ ஆன்லைனில் தொகை செலுத்தும்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

- சபரி, திருச்சி.

ஆன்லைன் பேமென்ட்... உஷார்!

கூடுதல் வருமானம் தந்த மகிழ்ச்சி!

என் கணவர் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்கிறார். அவருடைய சொற்ப வருமானத்தில் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தடுமாறினேன். என் பெரியம்மா மகள் வீட்டுக்குச் சென்றபோது அங்கே நான் பார்த்த சில விஷயங்கள் எனக்கு ஆச்சர்யமாக இருந்தன. குடும்பத்தில் எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் வருமானம் ஈட்டினார்கள். வீட்டு வேலைகள் முடிந்ததும் மாலையில் அருகில் இருந்த கோயில் முன்பு பூ வியாபாரம் செய்தார் என் பெரியம்மா மகள். கல்லூரியில் படிக்கும் அவர் மகன் விடுமுறை நாள்களில் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து மாதம் 8,000 சம்பாதிக்கிறான் எனப் பெருமையாகச் சொன்னார். இதையெல்லாம் பார்த்த நான், இட்லி மாவு அரைத்து வீட்டு வாசலில் கடை போட்டேன். மாதத்துக்கு 10,000 வருமானம் வருகிறது. இப்போது எங்கள் குடும்பத்தில் பணப் பற்றாக்குறை இல்லவே இல்லை!

- பாக்கியவதி, திருவள்ளூர்.