நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

நஷ்டம் தரும் நகை எக்ஸ்சேஞ்ச்.. !

ரசீது முக்கியம்...
பிரீமியம் ஸ்டோரி
News
ரசீது முக்கியம்...

‘Money’ துளிகள்..!

ஓவியங்கள்: அஞ்சலி.ஜி
ஓவியங்கள்: அஞ்சலி.ஜி

நஷ்டம் தரும் நகை எக்ஸ்சேஞ்ச்... !

என்னுடைய தோழி வீட்டுக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். புதிய மாடலில் தாலிக்கொடி வாங்கியிருப்பதாக பெருமையுடன் சொன்னாள். கடந்த ஆண்டுதான் புதிய மாடல் என்று சொல்லி தாலிக்கொடி வாங்கியிருந்தாள். நன்றாக இருந்ததை ஏன் மாற்றினாய் எனக் கேட்டதற்கு, தன் நாத்தனார் சமீபத்தில் வாங்கிய தாலிக்கொடியைப் பார்த்துவிட்டு, அந்த மாடல் பிடித்துப் போனதால் மாற்றியதாகச் சொன்னாள்.

இப்படி அடிக்கடி தங்க நகைகளை மாற்றினால் நஷ்டம் என அவளுக்கு கணக்குப் போட்டு விளக்கினேன். பழைய நகையில் கழியும் தொகை, புதிய நகைக்கான செய்கூலி சேதாரம் என எந்தவிதமான கணக்கீடும் அவளுக்குப் புரியவில்லை. பழைய நகையைக் கொடுத்துவிட்டு, புதிய நகை மாற்றுவதில் தவறில்லை. ஆனால், ஃபேஷன், புது மாடல் என ஆண்டுக்கு ஒரு முறை மாற்றினால் ஆயிரக் கணக்கில் பண இழப்பு ஏற்படும் என்பதை கொஞ்சம் கணக்குப் போட்டு புரிந்துகொள்ளுங்கள் தோழிகளே!

- ஆ.திவ்யா ராஜு, நாமக்கல்.

நஷ்டம் தரும் நகை எக்ஸ்சேஞ்ச்.. !

இன்ஷூரன்ஸ் பிரீமியம்... இரட்டைப் பலன்!

அண்மையில் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதற்காக முகவர் ஒருவரை அணுகினேன். மாதம்தோறும் பிரீமியம் செலுத்தும் முறையைத் தேர்வு செய்தேன். ``ஆண்டுக்கு ஒருதடவை மொத்தமாக பிரீமியம் செலுத்தும் முறையைத் தேர்வு செய்தால் அடிப்படைப் பிரீமியத்தில் 2% தள்ளுபடி கிடைக்குமே’’ என முகவர் ஆலோசனை சொன்னார். ஆனால், ‘‘என்னால் மொத்தமாக பணம் செலுத்த இயலாது’’ என்று சொன்னேன். ‘‘நீங்கள் ஓராண்டுக்கான ஆர்.டி கணக்கு ஒன்றைத் தொடங்குங்கள்; மாதம்தோறும் பிரீமியமாகச் செலுத்த வேண்டிய தொகையை, ஆர்.டி கணக்கில் செலுத்தி வாருங்கள். ஓராண்டு முடிந்ததும், பணத்தை எடுத்து இன்ஷூரன்ஸ் ஆண்டு பிரீமியம் செலுத்துங்கள். இப்படிச் செய்வதால் ஆர்.டி-க்கு வட்டியும் கிடைக்கும்; ஆண்டு பிரீமியத்துக்கு தள்ளுபடியும் கிடைக்கும்’’ என்று விளக்கினார். செலுத்துவது அதே தொகைதான். ஆனால், பயன்படுத்தும் முறையால் பலன் அதிகம் என்பதைப் புரிந்துகொண்டு அவர் சொன்ன வழிமுறையைப் பின்பற்றுகிறேன்.

- எஸ்.காசி விஸ்வநாதன், பாளையம்கோட்டை.

நஷ்டம் தரும் நகை எக்ஸ்சேஞ்ச்.. !

ரசீது முக்கியம் நண்பர்களே!

சமீபத்தில், சென்னையில் பிரதான பகுதியின் பார்க்கிங் ஏரியாவில், வாகனத்தை பார்க்கிங் செய்துவிட்டு வேலை விஷயமாகச் சென்றேன். வாகனத்தை நிறுத்தியதும், அங்கிருந்த பணியாளர்களில் ஒருவர், வாகன எண்ணுடன், நேரத்தையும் குறித்துக்கொண்டார்.

வேலையை முடித்துக்கொண்டு, முப்பது நிமிடத்துக்குள் திரும்பி வந்தேன். குறைந்தபட்ச கட்டணமான 60 ரூபாயை பணியாளர் செலுத்தச் சொன்னார். செலுத்திவிட்டு, அதற்கான ரசீதை கேட்டேன். சில நிமிடங்களில் மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றவர், என் மொபைல் நம்பரைப் பதிவு செய்துகொண்டார். ஆனால், அந்த ரசீது என் மொபைலுக்கு வரவே இல்லை.

ரசீது இல்லாமல், இதுபோன்று வசூலிக்கப்படும் கட்டணங்கள் தனிநபருக்குத்தான் போய் சேருமே தவிர, மாநகராட்சிக்கு போய் சேர வாய்ப்பே இல்லை. கட்டணம் செலுத்தும்போதே ரசீதைக் கேட்டுப் பெறுவது அவசியம்!

- எஸ்.ராமன், சென்னை - 17

நஷ்டம் தரும் நகை எக்ஸ்சேஞ்ச்.. !

ஹெல்த் பாலிசி... அலட்சியம் வேண்டாமே...

நான் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறேன். என்னுடன் பணியாற்றும் நண்பர் ஒருவர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தார். அப்போது என்னையும் என் குடும்ப உறுப்பினர்களைச் சேர்த்து ரூ.2 லட்சம் கவரேஜுக்கு மருத்துவக் காப்பீட்டு பாலிசி ஒன்றை எடுக்குமாறு வற்புறுத்தினார். ‘உங்களைப் போல அதிக சம்பளம் இருந்தால் பரவாயில்லை; என் சம்பளத்தில் பிரீமியம் கட்ட முடியாது’ என்று சொல்லி மறுத்துவிட்டேன். அத்துடன் நமக்கெல்லாம் என்ன ஆகிவிடப்போகிறது; ஹெல்த் பாலிசி எடுப்பது வீண்தான் என்றும் நினைத்தேன்.

சமீபத்தில் என் மனைவிக்கு எதிர்பாராமல் ஏற்பட்ட உடல்நலப் பிரச்னையால் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை. ரூ.4 லட்சத்துக்குமேல் செலவானது. நகைகளை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் சமாளித்தேன். இப்போது நான் ஹெல்த் ஃப்ளோட்டர் பாலிசி எடுத்துவிட்டேன்.

- ஆர்.முருகேசன், திருச்சி - 12

பிரசுரிக்கப்பட்ட ஒவ்வொரு துணுக்குக்கும் பரிசு ரூ.200

பண அனுபவங்களைப் பகிருங்கள்..!

சேமிப்பு, முதலீடு, ஏமாற்றம், இழப்பு, ஷாப்பிங், லாபம், நஷ்டம் என எல்லாவிதமான பண அனுபவங்களையும் இங்கே பகிர்ந்துகொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட அனுபவங்களுக்கு தகுந்த சன்மானம் உண்டு. அனுப்ப வேண்டிய மெயில் முகவரி: navdesk@vikatan.com