Published:Updated:

“இன்னைக்கு ஹோட்டலுக்கு பில் கட்டக்கூட என்கிட்ட பணம் இல்லை!”

நாஞ்சில் சம்பத்

ஆயிரம் முதல் லட்சம் வரை... அனுபவம் பகிரும் பிரபலங்கள்

“இன்னைக்கு ஹோட்டலுக்கு பில் கட்டக்கூட என்கிட்ட பணம் இல்லை!”

ஆயிரம் முதல் லட்சம் வரை... அனுபவம் பகிரும் பிரபலங்கள்

Published:Updated:
நாஞ்சில் சம்பத்

கன்னியாகுமரி மாவட்டம், மணக்காவிளையில் என் அப்பா மளிகைக் கடை வைத்திருந்தார். எங்க கிராமத்துலயே அதுதான் பெரிய கடை. சுற்றுவட்டாரத்துல இருக்கிற மக்களுக்கெல்லாம் அந்தக் கடைக்குத் தான் வருவாங்க. அதுமட்டுமல்ல, எங்க அப்பா அந்த ஊர் மக்களுக்கு ரொம்பவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார். பணத்தைப் பத்திரப்படுத்தணும்னா என் அப்பாகிட்டதான் கொடுத்து வைப்பாங்க. சுருக்கமா, அப்பா ஒரு லாக்கர் மாதிரி. ஆனா, நான் அவருக்கு நேரெதிர்” - அதிர்ந்த சிரிப்புடன் தன் பண அனுபவத்தை விவரிக்கிறார் பிரபல மேடைப் பேச்சாளரும் எழுத்தாளருமான நாஞ்சில் சம்பத்.

``அஞ்சு பசங்க, ஒரு பொண்ணுனு எங்க வீட்ல மொத்தம் ஆறு பிள்ளைகள். என்னைத் தவிர, எல்லாருமே கடைதான் வெச்சிருக்காங்க. அப்பா நடத்திய மளிகைக் கடையை இப்போ என் தம்பி ஜீவா நடத்துறான். அந்தக் கடைக்கு 80 வயசு. இன்னொரு தம்பி, ஸ்டேஷனரி கடை, இன்னொருவர், பேன்ஸி கடை வைத்துள்ளார்கள். மூத்த அண்ணன் கருணாநிதி, நாட்டு மருந்து மொத்த வியாபாரம் பண்றார். என் தங்கச்சியை வில்லிபுத்தூர்ல கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம். அவங்களும் நகைக்கடை வெச்சிருக்காங்க.

எனக்கும் 35,000 ரூபாய் முதலீட்டுல கடை வெச்சுக் கொடுத்தாரு என் அப்பா. ஆனா, என்னால அந்தக் கடையை வெற்றிகரமா நடத்த முடியல. காரணம், என்னன்னா கடன் வாங்குறவங்ககிட்ட எனக்கு திரும்ப வசூலிக்கத் தெரியாது. எங்க அப்பா கடனே கொடுக்க மாட்டாரு. எனக்கு அது கைவரலை. வேலைக்கு இருந்த சின்ன பையன்கூட என்னை ஏமாத்தினான். என்னால அவனைக் கண்டிக்க முடியலை. அதுதான் என்னுடைய இயல்பு.

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில், பழனிகிருஷ்ணன் தலைமையில் நடந்த வழக்கு மன்றத்தில்தான் நான் முதன்முதலில் பேசினேன். தமிழ்த் திரையிசைப் பாடல்கள் இலக்கிய வளர்ச்சிக்கு உதவும் என்று எழுதியும் பேசியும் வரும் இவர், குற்றவாளி என்றொரு வழக்கை நான் முன்வைத்தேன். என்னைக் காட்டிலும் நாவீறுகொண்ட நாஞ்சில் நெடுமாறன் அந்த வழக்கை மறுத்தார். அன்றைக்கு எனக்கு நூறு ரூபாய் தந்தார்கள். அதுதான் முதல் சம்பாத்தியம். கோடி பொன் கிடைத்ததுபோல் இருந்தது. இதையே நம் வாழ்க்கையாக வரித்துக்கொள்ளலாமே என்று மனதுக்குள் ஓடியது. அதன் பின்பு, நிறைய தி.மு.க கூட்டங்களில் பேச ஆரம்பித்தேன். ஒரு கூட்டத்துக்கு 100 ரூபாய், 150 ரூபாய் என்று கொடுக்க ஆரம்பித்தார்கள். ஆனா, கடை மொத்தமா போயிருச்சு.

விடுதலைப் புலிகள் மீதிருந்த ஈடுபாட்டால் கடையை விட்டுட்டு, ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டேன். நான் இறந்துவிட்டதாக எங்க வீட்டில் நினைத்துக்கொண்டார்கள். ஒருகட்டத்தில் அங்கிருந்து சென்னைக்கு வந்துட்டேன். 1984 தேர்தலுக்கு ராயபுரத்தில் கலைஞர் தலைமையில் நடந்த செயற்குழுவில் கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்தில் கலைஞரே வியக்கும் அளவுக்குப் பேசினேன். அதுதான் என் பேச்சு வாழ்க்கைக்கான மிகப் பெரிய அஸ்திவாரம். பாக்கெட்டில் ஒரு ரூபாய்கூட இல்லை. அடுத்தவேளை, சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த எனக்கு அந்தக் கூட்டம்தான் அடையாளம் கொடுத்தது. அதன் பின்பு, சென்னையின் பல இடங்களில் என்னைப் பேச அழைத்தார்கள். 50 ரூபாய், 100 ரூபாய் என்று வருமானமும் அளவில்லாத பாராட்டும் எனக்குக் கிடைக்க ஆரம்பித்தது.

1986 நவம்பரில் கோவையில் சிதம்பரம் பூங்காவில் நடந்த இந்தி எதிர்ப்பு திறந்தவெளி மாநாட்டில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பேசிவிட்டு கீழிறங்கியதும் கூட்டம் என்னை மொய்க்க ஆரம்பித்துவிட்டது. மாவட்டச் செயலாளர் மு.கண்ணப்பன் என்னை அழைத்து, `ரொம்ப பிரம்மாதமா பேசுனீங்க… அவ்வளவு அழகான தமிழ். நானே மயங்கிட்டேன். 15 நாள் தேதி கொடுன்னு கேட்டார். 15 நாள் கூட்டத்துக்கும் சேர்த்து 5,000 ரூபாய் கிடைச்சது. அந்தப் பணத்தை பேங்குக்கு எடுத்துட்டுபோய் டிடி எடுத்து அப்பாவுக்கு அனுப்பிட்டேன்’’ என்று தனது பழைய நினைவுகளில் மூழ்கியவர்… பணம் தொடர்பான விஷயத்துக்குத் திரும்பினார்.

``எனக்கு பணத்தைக் கையாளத் தெரியாது. நான் வாங்குகிற பணத்தை அடுத்த நாளே வீட்டுக்கு அனுப்பிருவேன். ரொம்பவும் சிக்கனமா இருப்பேன். எனக்கு வேறு எந்தப் பழக்கமும் கிடையாது. வரவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆள் நான். எனக்கு திருமணமானதற்குப் பிறகு, எல்லாத்தையும் என் மனைவி பார்த்துக்கிட்டாங்க. அவங்க ரொம்ப பொறுப்பானவங்க. `இன்னிக்கு ரூவா வாங்கிட்டீங்களா, நாளைக்கு காலையில அனுப்பியிருங்கனு’ கூட்டம் முடிஞ்ச அன்னைக்கே போன் பண்ணிருவாங்க. என் பேர்ல, என் மகன் பேர்ல, என் மனைவி பேர்லன்னு ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி போட்டிருக்கோம். அப்புறம் சீட்டு போடுவாங்க. சீட்டு போட்டு சேமிச்சுதான் என் மகனையும் மகளையும் படிக்க வெச்சேன். வீடு கட்டினேன். மகளுக்கு 125 பவுன் போட்டு கல்யாணம் செய்து கொடுத்தேன். என் மனைவியோட திறமையான நிர்வாகம்தான் அதுக்கெல்லாம் காரணம்.

2012-ம் ஆண்டு வரைக்கும் ஒரு கூட்டத்துக்கு 5,000 ரூபாய்தான் கிடைத்தது. அதில் 500 ரூபாய் எடுத்துக்கிட்டு 4,500 ரூபாயை வீட்டுக்கு அனுப்பிருவேன். அந்த 500 ரூபாய்க்கும் எனக்கு செலவு இருக்காது. நான் ஒரு ஊருக்குப் போனா, எல்லோரும் என்னை விருந்தினர்போல கொண்டாடு வாங்க. அதனால எனக்கு செலவே கிடையாது. செலவுக் காக எடுத்து வெச்ச 500 ரூபாய் செலவாகிற வரை நான் மறுபடி செலவுக்காகப் பணம் எடுக்க மாட்டேன். வாங்குற பணம் முழுவதையும் வீட்டுக்கு அனுப்பிருவேன்.

2013-ல் ஜெயலலிதாவின் தலைமையேற்று அ.தி.மு.க-வில் சேர்ந்த பிறகு, பேசிய முதல் கூட்டத்தில் 25,000 ரூபாய் கொடுத்தார்கள். இப்ப அதுதான் ரேட்டு. ஒரு கூட்டத்துக்கு 25,000 ரூபாய் கொடுப்பாங்க. வெளிநாடுகளுக்கெல்லாம் போய் பேசும்போது ஒரு கூட்டத்துக்கு 50,000 ரூபாய் கொடுப்பாங்க” என்றவரிடம், ‘‘ஜெயலலிதா இருக்கும்போது இனோவா காரெல்லாம் கொடுத்தார்களே’’ என்று கேட்டதற்கு, ‘‘அதை என் பெயர்லயா கொடுத்தாங்க. கட்சிப் பெயர்லதான் கொடுத்தாங்க. என் பெயர்ல கொடுத்தாதானே எனக்குச் சொந்தம். அதுல எனக்கு உடன்பாடு இல்லை. அதனாலதான் திரும்பக் கொடுத்துட்டேன். உண்மை தெரியாம மீடியாக்கள் தப்பா எழுதிட்டாங்க. ஒரு புராஜெக்ட்டுக்கு மொத்தமா லட்ச ரூபாய்க்குமேல பார்த்ததுன்னா அது சினிமாவுலதான்.

நான் சினிமாவுல நடிப்பேன்னுலாம் நினைச்சு பார்த்ததே கிடையாது. சினிமா செய்திகளைக்கூட படிக்காத ஆளு நான். என் மகனை எம்.பி.பி.எஸ் படிக்க வைக்க வருஷத்துக்கு 10 லட்சம் கட்ட வேண்டிய சூழல். ரொம்பவும் சிரமப்பட்டோம். வீட்ல இருந்த மொத்த நகையையும் வித்து ஆரம்பத்துல சமாளிச்சோம். நகை சேர்ப்பது எவ்வளவு முக்கியம்னு அந்தச் சமயத்துலதான் உணர்ந்தேன்.

எல்லாத்தையும் வித்தும் என்னால முழுப் பணத்தையும் கட்ட முடியலை. இறுதியா 4,20,000 ரூபாய் கட்ட வேண்டியிருந்தது. அந்தச் சமயத்துலதான் ஆர்.ஜே பாலாஜி வந்து, சினிமாவுல நடிக்கிறீங்களான்னு கேட்டார். எல்.கே.ஜி படத்துல நடிச்சதுக்கு 4,20,000 கிடைச்சது. பிறகு, நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு படத்துல நடிச்சேன். அதுக்கு ஒரு நாளைக்கு 60,000 ரூபாய் கொடுத்தாங்க.

இப்போ பிரபு சாலமன் இன்னொரு படத்துக்கு பேசிக்கிட்டிருக்கார். இன்னும் பணத்தைப் பற்றிப் பேசலை. இவ்வளவு சம்பாதிச்சாலும் இன்றைக்கு என்கிட்ட பணமே இல்லை. எல்லாம் மகனோட படிப்பு, மகளோட திருமணம்னு செலவாகிருச்சு. இன்னைக்கு நான் தங்கியிருக்க ஹோட்டலுக்கு பில் கட்டக்கூட பணம் இல்லை.

காரணம், கொரோனா. எனக்கு வருமானமே மேடைப் பேச்சுதான். இந்த கொரோனா காலத்துல எந்த மீட்டிங்கும் நடக்கல. அதனால பாக்கெட் காலி. ஆனா, நான் அதைப் பத்தி கவலைப்படலை. பணத்தை பிசாசுன்னு நினைப்பேன். ஆனாலும், அது முக்கியம்னு உணர்ந்திருக்கேன்.

பணம் தேட வேண்டும். சம்பாதிக்க வேண்டும். பணம் சம்பாதித்தால் மட்டும்தான் அவன் மனிதன். புருஷ லட்சணம் என்பது குழந்தை பெற்றுக் கொள்வதில்லை; சம்பாதிப்பதுதான். குழந்தை பெற்றுக்கொள்வதைவிட சம்பாதிப்பது ரொம்ப முக்கியம். குழந்தை யார் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், பணம் எல்லோராலயும் சம்பாதித்து விட முடியாது. அதற்குத் திட்டமிட வேண்டும். அதில் உறுதியா இருக்கணும். அதை நோக்கியே பயணிக்க வேண்டும்.

வாழ்க்கையில் நான்கு பேரிடம் உதவி கேட்காமல் தன்னந்தனியாக நிமிர்ந்து வாழ்வதற்கு ஒருவனுக்கு பணம் வேண்டும். அதற்காக எப்படி வேண்டுமானாலும் சம்பாதித்துவிட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. நாணயத்துடன் சம்பாதிக்க வேண்டும். அறம் இல்லாமல் சம்பாதிக்கும் பணம் நிலைக்கவே நிலைக்காது” என்கிறார் உறுதியுடன்.

படம்: பா.காளிமுத்து