Published:Updated:

சேர்த்து வைத்த பணம்... செலவழிக்கும் கலை..!

பண நிர்வாகம்
பிரீமியம் ஸ்டோரி
பண நிர்வாகம்

பண நிர்வாகம்

சேர்த்து வைத்த பணம்... செலவழிக்கும் கலை..!

பண நிர்வாகம்

Published:Updated:
பண நிர்வாகம்
பிரீமியம் ஸ்டோரி
பண நிர்வாகம்

ட்விட்டரில் உமாஷங்கர் பாண்டே என்பவர் செய்த ட்வீட்... ‘Money unused is money abused’. இந்த ட்வீட் பலரின் சிந்தனையைத் தூண்டியிருக்கும். ‘உபயோகிக்கப்படாத பணம் மதிப்பிழக்கிறது; உபயோகிக்கப்படாத திறமை குறைகிறது; உபயோகிக்கப்படாத இயந்திரம் துருப் பிடிக்கிறது’ என்கிற ரீதியில் செல்லும் அந்தச் செய்தி நம்மில் பலரின் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

1965 முதல் 1976 வரை உள்ள ஆண்டுகளில் பிறந்தவர்கள் ஜென் எக்ஸ்; 1977 முதல் 1997 வரை உள்ள ஆண்டுகளில் பிறந்தவர்கள் ஜென் ஒய்; 1998-க்குப் பின் பிறந்தவர்கள் ஜென் இஸட் என்று குறிப்பிடுகிறோம். ஜென் ஒய், ஜென் இஸட் தலைமுறையினருக்கு செலவழிப்பதற்கு ஆயிரம் இடங்கள், ஆயிரம் காரணங்கள். ஆனால், ஜென் எக்ஸ் மட்டும் தேவைக்கு அதிகமாகப் பணம் சேர்த்த பின்னர் செலவழிக்கும் வகை அறியாமல் திகைப்பதாக உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பொதுவாக, ‘சேமியுங்கள்; சேமியுங்கள்; இன்னும், இன்னும் சேமியுங்கள்!’ என்பதே பொருளாதார வல்லுநர்களின் தாரக மந்திரமாக இருக்கும். ஆனால், ஜென் எக்ஸிடம் மட்டும் “ஏன் செலவழிக்க வேண்டும்; எப்படி செலவழிப்பது” என்பது குறித்துப் பேச வேண்டியிருக்கிறது.

சேர்த்து வைத்த பணம்... செலவழிக்கும் கலை..!

ஜென் எக்ஸ் – ஓர் அறிமுகம்

ஜென் எக்ஸ் தலைமுறையில் பிறந்த பலரும் குறைந்த பொருளாதார வசதியுடன் வளர்ந்து கடின உழைப்பாலும் சிக்கனத்தாலும், அதீத சேமிப்பாலும் தங்களின் நாற்பது / ஐம்பது வயதுகளில் வசதி வாய்ப்புகளைச் சந்தித்தவர்கள். ரீடர்ஸ் டைஜஸ்ட் சர்வேயின்படி, இவர்களில் 74% “கடின உழைப்பும், சேமிப்புமே முன்னேற்றத்துக்கு வழி” என்று உறுதியாக நம்புபவர்கள். பிள்ளைகளின் படிப்பு, திருமணம், சொந்த வீடு, கார் போன்ற முக்கிய இலக்குகளை நிறைவேற்றி, இன்று அனைவரின் கனவான பொருளாதார சுதந்திரத்தை வெற்றிகரமாக எட்டியவர்கள்.

ஆனால், இவர்களில் பலர், “இப்போது இருக்கும் பணம் கடைசி வரை போதுமா? வயதான காலத்தில் பணம் பற்றா விட்டால் என்ன செய்வது?” என்று கவலைப்பட்டே சுகங்களை அனுபவிக்காமல் தள்ளி வைக்கிறார்கள். இவர்களால் தேவைக்கு அதிகமான செலவை நினைத்துகூட பார்க்க முடியாது; சேமிக்கும் பழக்கத்தைக் கைவிடவும் முடியாது. இன்னும் சிலர் சிக்கனம் தவிர வேறு வாழ்க்கை முறையையே அறிய மாட்டார்கள்.

சரியாகத் திட்டமிட்டு இலக்குகளை அடையத் தெரிந்த இவர்களுக்கு தங்கள் தேவைகள் முடிந்த பின்னும் தொடர்ச்சியாக வரும் பணத்தைச் செலவழிக்கத் தெரிவதில்லை; அதை மற்றவர் செலவழிப்பதை அனுமதிக் கவும் முடிவதில்லை. அவர்களின் அடுத்த தலைமுறை சம்பாதிக்க ஆரம்பித்து பெற்றோருக்குப் பணம் கொடுக்க முன்வந்தால், அதையும் சேமிக்கவே விரும்புகிறார்கள். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அதைச் சற்றும் குறையாமல் முழுவதுமாகக் கடத்துவது எப்படி என்பது பற்றியே யோசிக் கிறார்கள்.

இவர்களிலும் பணம், செலவு, சிக்கனம் போன்ற அனைத் தையும் கடந்த பக்குவ நிலையை அடைந்தவர்கள் சிலர் உண்டு. ‘எளிய வாழ்க்கையே சிறந்தது; அரசனே ஆனாலும் வயதான காலத்தில் நாட்டைத் துறந்து வனவாசம் சென்றார்கள் அல்லவா? காந்திஜி, மதர் தெரசா போன்றவர்கள் கடைசி வரை எளிமையைக் கடைப்பிடிக்க வில்லையா?’ என்று எளிய வாழ்வின் சிறப்பை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு, அதிக செலவில்லாத எளிய வாழ்க்கை முறையைக் கடைப் பிடிப்பவர்கள். அது மிக உயர்ந்த ஒரு நிலை என்பதால், இவர்கள் போற்றத் தகுந்தவர்கள்.

ஆனால், அப்படி இல்லாமல் பழக்கதோஷத்தால் சிக்கனத் தைக் கைவிடாமல் இருப்பவர்கள் பற்றியே இங்கு பேசுகிறோம். இந்தச் சிக்கனத்துக்குக் காரணம், நாம் வளர்ந்த விதம் என்றாலும், ‘வயதாக ஆக, தன்னைப்பற்றிய, தன் சுகங்களைப் பற்றிய, எண்ணங்களை வளர்க்கக் கூடாது’ என்ற சமூக எதிர்பார்ப் பும் இன்னொரு காரணம்.

ஆனால், கடமைகளை முடித்த பின்பும் சிக்கனக் கோட்பாடுகளாலோ, சமூகத் துக்கு பயந்தோ உரிமைகளை அனுபவிக்காமல் தவறவிட்டால், வாழ்வில் சலிப்புத் தோன்றிவிடும் அபாயம் உண்டு. அதை எப்படித் தவிர்ப்பது?

செலவழிக்கப் பழகுங்கள்

முதலில் இதுவரை நீங்கள் செய்ய ஆசைப்பட்டு தள்ளிப்போட்ட விஷயங்களைப் பட்டியல் போட லாம். அநேகமாக சுற்றுலா செல்வது, இசை கற்பது, புத்தகங்கள் படிப்பது, படம் வரைவது, விரும்பிய உணவுகளை சுவைத்து ரசிப்பது, இசை / நாடக நிகழ்ச்சிகளுக்குச் செல்வது, ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வது போன்றவையே இந்தப் பட்டியலில் இடம்பெறும். இவற்றுக்கு செலவழிக்க இனியும் தயங்கக் கூடாது.

இரண்டாவதாக உங்கள் சுற்றுப்புறத்தை வசதியாக அமைத்துக் கொள்ளலாம். அமர்வதற்கு, படிப்பதற்கு, படுப்பதற்கு பயன்படுத்தும் ஃபர்னிச்சர்கள், லைட்டுகள், அலமாரிகள், குஷன்கள், போர்வைகள், தலையணைகள், கால் மிதிகள் போன்றவற்றை வாங்கும்போது சற்று விலை உயர்ந்தவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

பழைய கிரைண்டர், மிக்ஸி போன்ற வீட்டு உபயோகப் பொருள்களை மாற்றலாம். வீட்டில் உதவி செய்ய டிரைவர், சமையல்காரர், வாட்ச்மேன் போன்றவர்களை நியமிக்கலாம்.

பஸ்களிலும் ஆட்டோவிலும் செல்வதை விடுத்து ஆட்டோ, காரில் செல்லலாம். தூரப் பயணங்களின் போது பழக்கதோஷத்தால் பஸ், டிரெயின் போன்ற வாகனங்களை நாடுவதை விட்டு, வசதிக் கேற்றவாறு கார் மற்றும் விமான சேவைகளைப் பயன்படுத்தலாம்.

அடுத்தவருக்கு உதவும் ஆலமரம்

மிக முக்கியமாக, நம்மிடம் மிகுதியாக இருக்கும் பணத்தையும் நேரத்தையும் தேவை இருப்பவர்களுக்கு உதவி செய்ய உபயோகிப்பது சிறப்பு. இதற்காக எங்கும் தேடி அலைய வேண்டாம். நம்மைச் சுற்றி இருக்கும் எளிய மக்களில் பல துடிப்பான குழந்தைகள் பெற்றோரின் ஏழ்மையால் கல்வியைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அவர்கள் படிப்புச் செலவுக்குக் கைகொடுக்கலாம்.

இன்னும் சற்றுப் பெரிய அளவில் உதவ எண்ணினால், அரசுப் பள்ளி களில் படிக்கும் துடிப்பான மாணவ, மாணவி களின் கல்லூரிச் செலவு களை ஏற்றுக் கொள்ளலாம். மருத்துவச் செலவும் ஏழைகளுக்குப் பெரிய பாரமாக இருக்கும். அவர்கள் பாரத்தைக் குறைக்க உதவலாம்.

நாம் கஷ்டப்பட்டு சேமித்த பணம் நம் குடும்பத்துக்கு மட்டுமன்றி, இன்னும் பலருக்கும் உபயோகப்படும் ஆலமரமாக ஆவதென்பது மிகச் சிறந்த சந்தோஷத்தைத் தரவல்லது. பணம் தரும் பலவிதத் திருப்திகளில் இதுவும் ஒன்று. அனுபவித்துதான் பார்ப்போமே!