பணத்தை நிர்வகிக்க பெண்களுக்கு உதவும் மூன்று விஷயங்கள்! நீங்களே உங்கள் வீட்டு நிதி மந்திரி

S A V I N G
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலர் வேலைக்குச் செல்வதால், பொருளாதார ரீதியாகச் சுதந்திரமான வாழ்க்கையை வாழ்கின்றனர். அதே வேளையில் பணத்தைச் சாமர்த்திய மாகக் கையாளவும் பெண்கள் அறிந்திருக்க வேண்டும். செல்வம் சேர்ப்பது எதிர்காலத்தை எதிர்கொள்ள எவ்வளவு தைரியம் கொடுக்கிறதோ, அதுபோலவே பொருளாதார அறிவை பெருக்கிக் கொள்வதும் பெண்களுக்கு மிகப் பெரிய தைரியத்தைக் கொடுக்கும். பெண்கள் இதற்கு செய்ய வேண்டிய மூன்று விஷயங்களைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னர் நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன்.

1. சேமிப்பு...
நம் பெண்கள் சேமிப்புக்குப் பெயர் போனவர்கள். ஆனால், அவர்கள் இன்னும் சில விஷயங்களைக் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். அது பற்றி முதலில் சொல்கிறேன்.
பே ஸ்லிப்பைப் புரிந்து கொள்ளுங்கள்...
வேலைக்குச் செல்லும் பெண்கள் சம்பளம் வாங்கியவுடன் பே ஸ்லிப்பைத் தருவார்கள். இந்த ஸ்லிப்பை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். வேலைக்குச் செல்லாத பெண்கள் எனில், கணவரின் ‘பே ஸ்லிப்’பை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் என்னென்ன சலுகைகள் (Allowances) இருக்கின்றன என்பதை அறிய முடியும்.
வேலை பார்க்கும் அலுவலகம் மூலம் பலருக்கும் என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன என்பது தெரிவதில்லை. வேலை பார்க்கும் நிறுவனத்தில் எவற்றுற்கெல்லாம் சலுகைகள் இருக்கின்றன, அவற்றை எந்தளவுக்குப் பயன்படுத்த முடியும், எந்தெந்த சலுகைகளுக்கு வரிவிலக்கு இருக்கிறது, எவற்றுக்கெல்லாம் வரிவிலக்கு இல்லை, ஒவ்வொரு மாதச் சம்பளத்திலும் பிராவிடன்ட் ஃபண்டுக்கு எவ்வளவு கட்டுகிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். சலுகைகள் போக மீதி சம்பளத்துக்கு வரி கட்டினால், நமக்கு சிலபல ஆயிரங்கள் மிச்சமாகும்.
வங்கிக் கணக்கில் சம்பளம் வந்து சேர்ந்தால் போதும் என்று நினைத்து பே ஸ்லிப்பைப் பார்க்கத் தவறும் பழக்கத்தைப் பெண்கள் இனி பின்பற்றக்கூடாது. பே ஸ்லிப்பில் இருக்கும் அனைத்து விஷயங்களும் புரியவில்லை என்றாலும் பரவா யில்லை. அதை விவரம் தெரிந்தவர் களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள லாம். ஆனால், நிதி நிர்வாகத்தில் அடுத்தகட்டத்தை நோக்கி நகர இதுதான் முதல் படி.
வங்கித் திட்டங்களைப் புரிந்துகொள்வது...
‘சம்பளம் வங்கிக் கணக்குலதான வந்து சேரப்போகுது... வேற தெரிஞ்சிக்கிற அளவுக்கு பேங்க்ல என்ன இருக்கு...’ என்கிற நினைப்பே இன்றைக்குப் பல பெண்களிடம் இருக்கிறது. ஆனால், அதைத் தாண்டி பல விஷயங்கள் இருக்கின்றன. உதாரணமாக, நீங்கள் டிமாண்ட் டிராஃப்ட் தேவை. அதை ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியுமா என்று கேட்டால், முடியும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்..? இது மட்டுமல்ல, புதிதாக வந்திருக்கும் வங்கித் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து நாம் கணக்கு வைத்திருக்கும் நெட் பேங்கிங்கிலேயே எளிதாகப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
மொபைல் ஆப்கள் மூலம் வேலையை எளிதாக்கிக்கொள்வது...
இன்றைக்கு அதிகளவில் பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். நேரம் விரயமாகும் இடங்களில் மொபைல் ஆப் மூலமாக வேலைகளைச் சுலபமாக முடிப்பதைக் கற்றுக் கொள்ளலாம். உதாரணமாக, ‘போஸ்ட் ஆபீஸ் போனேன்... க்யூ ரொம்ப பெருசா இருந்துது... நேரம் ரொம்ப வேஸ்ட் ஆயிடுச்சு...’ என்பதைத் தவிர்த்து, மொபைல் ஆப் மூலம் போஸ்ட் ஆபீஸ் செல்லும் வேலையை வீட்டிலிருந்தபடியே முடித்துக்கொள்ளலாம். நேரம் விரயமாகும் இடங்களில் மொபைல் ஆப்கள் மூலமாக எளிதாக அந்த வேலைகளை முடிப்பதைக் கற்றுக்கொண்டால், பல மணி நேரத்தை மிச்சப்படுத்தலாம். அதை வேறு வகையில் பயனுள்ள முறையில் செலவு செய்யலாம்.

2. வீட்டின் நிதி நிலவரம் அறிதல்...
ஒவ்வொரு வருடமும் நிறுவனங்கள் செய்வதுபோல, ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் (Annual financial statement) தயார் செய்வது நல்ல பழக்கம். அதை டைரியிலோ கம்ப்யூட்டர் எக்ஸல் ஷீட்டிலோ தயார் செய்துகொள்ளலாம். வீட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபரின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தனியாகக் குறித்து வைக்க வேண்டும்.
யார் யாருக்கு எந்தெந்த வங்கிகளில் எங்கெங்கே வங்கிக் கணக்குகள் இருக்கின்றன. சிங்கிள் அக்கவுன்ட், ஜாயின்ட் அக்கவுன்ட் ஆகியவற்றுக்கு ஆன்லைன் ஆக்ஸஸ் இருந்தால், அதன் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டைக் குறித்துக் கொள்ள வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் இருந்தால், அதன் விவரம், என்.பி.எஸ் முதலீடு இருந்தால், அதன் பாஸ்வேர்டு, வங்கிக் கணக்குக்கு நாமினி நியமித்திருந்தால் யார், யாருக்கு நாமினியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
தனி வங்கிக் கணக்காக இருந்தாலும்கூட, எவ்வளவு பணம் இருக்கிறதென நிறுவனங் கள் கணக்கிடுவதுபோல, ஒரு எக்ஸல் ஷீட்டில் கணக்கிட்டு வைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் என்னென்ன முதலீடுகள் கையிருப்பில் இருக்கின்றன என்னும் தெளிவு கிடைக்கும். அது தவிர, வங்கி சேமிப்புக் கிடங்கில் பணத்தைப் போட்டு வைப்பதற்குப் பதில், முதலீடு செய்ய வேண்டிய எண்ணத்தை அது உருவாக்கிக் கொடுக்கும். வங்கிக் கணக்கு மட்டுமல்லாமல், முதலீடு செய்யும் கணக்குகள், பாண்ட் முதலீடு, நிலம் வாங்கிய விவரம் என அனைத்துச் சொத்து விவரங்களும் ஆண்டு நிதி நிலவர அறிக்கைக்குள் வந்துவிட வேண்டும். இதன் மூலம், வரவு செலவுகள் தொடங்கி வரிவிலக்காக முதலீடு செய்த திட்டங்கள் (உதாரணம், பொன்மகள் திட்டம்) வரை எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். குடும்பத் தலைவிகள் மட்டுமல்லாது குழந்தைகளும் தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம்.
குடும்பத் தலைவர் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனால், வீட்டின் ஆண்டு நிதி நிலவர அறிக்கையை அறிந்திருப்பது, அடுத்து என்ன செய்யலாம் என்னும் தைரியத் தைக் கொடுக்கும்.
அவசர காலத்தில் வருமான வரிக்காக ஆடிட்டர்களிடம் சென்றால், அனைத்து ஆவணங் களையும் கொண்டு வரச் சொல்வார்கள். வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தெந்த ஆவணம் எங்கிருக்கிறது என்பது தெரியாதபட்சத்தில், அவசர காலத்தில் இது சிக்கலை ஏற்படுத்திவிடும். வருடம் தோறும் வீட்டின் ஆண்டு நிதி நிலவர அறிக்கையை முறையாகத் தயார் செய்து வைத்திருந்தால், எந்தச் சிக்கலையும் உங்களால் தைரியமாக எதிர்கொள்ள உதவும்.
3. முதலீடு...
பெண்களே, முதலீடு செய்வதற்கு முன் முதலில் ஷாப்பிங் செய்யுங்கள். செலவு செய்யச் சொல்கிறாரே என்று பார்க்காதீர்கள்... ஆம், ஷாப்பிங்தான். துணிக்கடைகளில் ஷாப்பிங் செய்வது போல, முதலீடுகள் செய்யும் முன்னும் ஷாப்பிங் செய்யுங்கள். துணிக்கடையில் என்னென்ன துணி வகைகள் இருக்கின்றன எனப் புரட்டிப்போடுவது போல, என்னென்ன முதலீட்டுத் திட்டங்கள் இருக்கின்றன என்பதை அலசி தெரிந்து கொள்ளுங்கள். அப்படி முதலீடு ஷாப்பிங் செய்யும்போது, எவற்றில் முதலீடு செய்தால் அதிக லாபம் என்னும் பட்டியலே உங்கள் கைக்குக் கிடைத்து விடும். வெறும் லாபத்தை மட்டும் பார்க்காமல், அதில் உள்ள ரிஸ்க் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இது தொடர்பாக உங்களுக்கு வரும் சந்தேகங்களை விஷயம் தெரிந்தவர்களிடம் அல்லது ஒரு நல்ல நிதி ஆலோசகரை அணுகி, தெளிவடை யுங்கள். முக்கியமாக, நாணயம் விகடன் மாதிரியான பத்திரிகையைத் தொடர்ந்து படியுங்கள்.
இப்படிச் செய்யும்பட்சத்தில் பல நல்ல முதலீட்டு வாய்ப்புகள் நம் கண் முன்னே பிரகாசிக்கும். அதில் உங்களுக்குத் தகுந்தவற்றில் நீங்கள் முதலீடு செய்து கொள்ளலாம். ஆக, ஷாப்பிங் செல்லுங்கள் பெண்களே... முதலீடு ஷாப்பிங்..!’’ என்று முடித்தார் லலிதா ஜெயபாலன்.
பெண்களே, நீங்க ரெடியா?