Published:Updated:

சம்பாதித்த பணத்தை இழக்காமல் காப்பாற்றும் சூட்சுமங்கள்! பிராக்டிக்கல் பாடங்கள்!

சேமிப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
சேமிப்பு

S A V I N G

சான் டியாகோ ஸ்டேட் யுனிவர்சிட்டி (San Diego State University) தங்களிடம் படிக்க வரும் முதல் வருட மாணவர் களிடம் 1966-லிருந்து ஒரு சர்வேயை நடத்தி வருகிறது. ‘எதற்காக படிக்க வருகிறார்கள்’ என்ற கேள்விக்கு பலரும் பலவிதமாகப் பதில் அளித்து வந்தார்கள். ஆனால், 1989-ம் வருடத்திலிருந்து வேறு விதமான பதில் வரத் தொடங்கியது. “பணம் சம்பாதிப்பதற்காக” என்ற பதில் தான் அதிக மாணவர்களால் கூறப் படுகிறது. ஆனால், பணம் சம்பாதிப்பதைவிடக் கடினமானது செல்வந்தராகக் கடைசி வரை வாழ்வது என்கிறார் பேட்ரிக் ரஷ் என்னும் பொருளாதார ஆலோசகர்.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

குறுகிய காலத்திலோ, நீண்ட கடும் முயற்சிக்குப் பின்போ, பணம் சம்பாதிப்பது அநேகமாகப் பலருக்கும் கைகூடுகிறது. ஆனால், கிடைத்த பணத்தைப் பாதுகாத்து கடைசி வரை வாழ்வை வசதியாக ஓட்டும் பாக்கியம் மிகச் சிலருக்கே கிடைக்கிறது. இவர்கள் வெறும் பணக்காரர்கள் அல்ல; செல்வந்தர்கள். பட்ஜெட் போட்டு செலவழிப்பது, செலவைக் குறைப்பது, சேமிப்பை அதிகப் படுத்துவது – இவையெல்லாம் பணக்காரர் ஆவதற்கு உதவலாம். ஆனால், கடைசி வரை ஒருவர் செல்வந்தராக வாழ, வேறு சில குணாதிசயங்களும் தேவை. செல்வந்தர்கள் அனைவரிடமும் காணப்பெறும் அந்த நல்ல அம்சங்கள் என்னென்ன?

சேமிப்பு
சேமிப்பு

1. பொருளாதார ரீதியாக நல்ல சூழலை உருவாக்குதல்...

பொருளாதாரத்தில் தேர்ந்தவர் களுடன் பழகுதல், விவாதித்தல் போன்ற செயல்களால் செல்வந்தர்கள் தங்கள் அறிவை விஸ்தரித்தபடி இருக்கிறார்கள். கோவிட் புண்ணியத்தில் ஆன்லைனிலும் யூடியூபிலும் நிறைய பொருளாதார வகுப்புகள், படிப்புகள், கருத்தரங் குகள், விவாதங்கள் இன்று நமக்குப் படிக்கவும் காணவும் கிடைக்கின்றன. இவை தவிர, கட்டண வகுப்புகளும் உள்ளன. “இவை அனைத்தும் நம் மீது நாம் செய்யும் முதலீடுகள்; இவை நம் மனநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், புது வழிகளையும் புது உலகங்களையும் காட்டுகின்றன” என்பதைப் புரிந்துகொண்ட இவர்கள் ஓயாது முன்னேறும் வழிகளில் கவனம் செலுத்துகிறார்கள்.

2. தெளிவான திட்டம் மற்றும் செயல்பாடு...

தங்கள் குறிக்கோள்களையும், அதற்கான வரவு செலவுத் திட்டங் களையும் முதலிலேயே தெளிவாக நிர்ணயித்து, அதை இம்மி பிசகாமல் செயல்படுத்துவது செல்வந்தர்களின் ஒரு தலையாய உத்தியாக விளங்குகிறது. தேவைப்பட்டால், பொருளாதார ஆலோசகர்களின் உதவியை நாடவும் அவர்கள் தயங்குவதில்லை. ஏனெனில், வரிச் சேமிப்பு நம் செல்வ வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. சேமிப்பு வழிகளைத் திட்டமிடும்போதே வரிச் சேமிப்பின் மீதும் ஒரு கண் வைத் திருப்பது இவர்கள் ஸ்பெஷாலிட்டி.

3. பல வழிகளிலும் பணவரவை ஏற்படுத்துவது...

செல்வந்தர்கள் பணவரவுக்கு ஒரே வழியை நம்பி இருப்பதில்லை. நல்ல வேலையிலிருந்து சம்பளம் வாங்கு பவர்கள்கூட அதை மட்டுமே நம்பி இருக்காமல், இன்னொரு சிறிய வழியையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அநேகமாக அது அவர்கள் பொழுதுபோக்கு சார்ந்த விஷயமாக இருக்கிறது. எழுத விரும்பு பவர்களுக்கு வலைப்பதிவு பக்கங்கள், பேச்சில் சிறந்தவர்களுக்கு யூடியூப் என்று பொழுதுபோக்காக மட்டுமன்றி, ஓரளவு சம்பாதிக்கவும் உதவும் வலைதளங்கள் ஏராளமாக இருக்கின்றன.

சமையல், புகைப்படம் எடுத்தல், தோட்ட வேலை, விளையாட்டுகள் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் அவை சார்ந்த சிறு தொழில்களை முன்னெடுக்கலாம். இதற்குச் சிறந்த உதாரணம், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி. வெறும் கிரிக்கெட் வீரராக நின்றுவிடாமல் கிரிக்கெட் அகாடமி ஒன்றைத் தொடங்கி நடத்திவருகிறார். துபாய் வரை அதை விரிவுபடுத்தி வருகிறார். ஃபுட்பால் கிளப், ஹாக்கி கிளப் என்று தன் பொழுதுபோக்குகள் அனைத்திலும் சிறிய அளவில் முதலீடு செய்திருக்கிறார்.

வங்கியிலோ, கல்லூரியிலோ பணிபுரியும் பெண்கள் ஆன்லைன் டியூஷன் மூலம் சம்பாதிக்கலாம்; தையலில் பயிற்சி பெற்றவர்கள், ஆரி வேலைப்பாடு தெரிந்தவர்கள், சமையலில் கலக்குபவர்கள் அனைவருமே அவற்றைப் பொழுதுபோக்காக மட்டுமன்றி, பணம் கொழிக்கும் சைடு பிசினஸாகவும் மாற்றலாம். ரியல் எஸ்டேட் தலை தூக்கிவரும் இந்த நேரத்தில் வாங்கி விற்றலில் ஈடுபாடும், திறமையும் உள்ளவர்கள் அதைப் பகுதி நேர வேலையாகக் கொள்ளலாம்.

4. பணம் வளரும் வழிகளில் அடிக்கடி குறுக்கிடாதிருப்பது...

பணத் தோட்டமும் ஒரு மலர்த் தோட்டம் போன்றதுதான். நட்ட செடியை அடிக்கடி பிடுங்கி வேரின் வளர்ச்சியை யாரும் கண்காணிப்ப தில்லை. அதேபோல் செல்வந்தர்கள் தம் தேவைக்கேற்ப பணம் வளர்க்க சில வழிகளை நிர்ணயித்த பின், அவசரப் படுவதோ, அடிக்கடி வழிகளை மாற்றுவதோ இல்லை. லாப, நஷ்டம் பற்றிய குறுகிய கண்ணோட்டங்களைத் தவிர்த்து, ஒவ்வொரு சொத்தும் வளர்வதற்கான கால அவகாசங்களைத் தருகிறார்கள். உதாரணமாக, ரியல் எஸ்டேட் முதலீடுகள் வளர குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பிடிக்கும்; மியூச்சுவல் ஃபண்டுகள் அதீத பலன் தருவது 5 – 7 ஆண்டுகள் கழித்துதான். சிறந்த முதலீட்டு வழியாகக் கருதப்படும் பங்குச் சந்தையிலும் இன்று வாங்கி, நாளை விற்று வியாபாரத்தில் லாபம் பார்க்க முடிந்தாலும், ஒரு முதலீட்டாளராகப் பொறுமை காப்பது மட்டுமே நீண்டகால பலனைத் தரும். செல்வந்தர்கள் இதுபோன்ற சூட்சுமங்களை அறிந்து வைத்திருப்பதுடன் அவற்றைத் தவறாமல் கடைப் பிடிக்கவும் செய்கிறார்கள்.

5. ஓய்வுக்காலத்தின் தேவையைவிட அதிகமாகச் சேர்த்து வைப்பது...

அறுபது வயதுக்குப் பின் வரவு குறைந்துவிடுகிறது அல்லது நின்று விடுகிறது; ஆனால், செலவு குறைவதில்லை. இப்படியான சூழலிலும் செல்வந்தர்கள் வாழ்வில் மட்டும், வயதானாலும் வசதி கூடிக்கொண்டே இருப்பது எப்படி? அவர்கள் வயதான காலத்தில் வரக்கூடிய செலவு களைக் கணக்கிட்டு, அந்தத் தேவையைவிட அதிகமாகத் திட்டமிட்டு, சேர்த்து வைக் கிறார்கள். இன்றைய சூழலில் மனிதனின் சராசரி வாழ்நாள் 96 வயதாக இருக்கிறது. ஓய்வு பெற்றபின் 30 வருட காலத்தைக் கடத்த வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தவர்களும், வாழ்நாளின் எல்லை வரை இப்போதுள்ள வசதிகளுடன் வாழ விரும்புகிறவர் களும் கண்டிப்பாகத் தங்கள் சேமிப்பின் எல்லையையும் விஸ்தரிக்க வேண்டும்.

“பொருளில்லார்க்கு இவ்வுல கில்லை” என்பது முக்காலத்திலும் உண்மை. இதை முற்றிலுமாக உணர்ந்து செயல்படுபவர்கள் பெரும் பணக்காரார் ஆவதுடன் கடைசி வரை செல்வந்தர்களாகவே வாழ்கிறார்கள்!