நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

தொழில்முறை நிதி ஆலோசகரின் உதவி உங்களுக்கு ஏன் அவசியம் தேவை?

நிதி ஆலோசனை
பிரீமியம் ஸ்டோரி
News
நிதி ஆலோசனை

நிதி ஆலோசனை

நம்முடைய நிதி இலக்குகளை (Financial Goals) அடைவதற்கான முதலீட்டுக் கலவையைத் (Portfolio) திட்டமிடுவது ஒரு முறை செய்யக்கூடிய வேலை என்று நம்மில் பெரும்பாலானோர் நினைக்கிறோம். ஆனால், அது உண்மையல்ல; நாம் அனைவருமே, நம் முதலீட்டுக் கலவையில் இடம்பெற்றிருக்கும் முதலீட்டுத் திட்டங்களைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் மதிப்பாய்வு (Review) செய்வது அவசியம். அதற்குத் திறமையான தொழில்முறை நிதி ஆலோசகரின் (Professional Financial Planner) உதவி அவசியம் தேவையாக இருக்கும். ஒரு நல்ல தொழில்முறை நிதி ஆலோசகரின் பணிகள் முதலீட்டாளர்களுக்கு எப்படி எல்லாம் உதவும் என விரிவாகப் பார்ப்போம்.

கா.ராமலிங்கம் 
இணை நிறுவனர், 
https://www.holisticinvestment.in/
கா.ராமலிங்கம் இணை நிறுவனர், https://www.holisticinvestment.in/

முதலீட்டுக் கலவையை மறுசீரமைத்தல்...

வேலை பார்க்கப்போகும் ஆண்டுகள் அல்லது சம்பாதிக்கும் ஆண்டுகளின் எண்ணிக்கை, நிதிப் பொறுப்புகள் மற்றும் நிதித் திட்டமிடும் நேரத்தில் முதலீட்டாளர் எடுக்கக்கூடிய ரிஸ்க்கின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் நம்மில் பெரும்பாலானோர் முதலீட்டுத் திட்டங்களை உருவாக்குகிறோம். ஆனால், காலப்போக்கில் நமது நிதிக் கடமைகளும், வயதுக்கு ஏற்ப நாம் எடுக்கும் ரிஸ்க்கும் மாற்றத்துக்கு உள்ளாகிறது. திருமணமாகி குடும்பம் பெரிதாகும்போது, குடும்பத்தில் குழந்தை பிறக்கும்போது நிதிக் கடமைகள் மாற்றத்துக்கு உள்ளாகிறது. காலப் போக்கில் நம் வாழ்க்கை முறை (Lifestyle) மற்றும் வாழ்க்கைத் தரம் (standard of living) மாற்றத்துக்கு உள்ளாகும். இந்த நிலையில், நம் முதலீட்டுக் கலவையை மாற்றி அமைக்க (Rebalancing of Portfolio) வேண்டியிருக்கும். அதற்கு நிச்சயம், நல்ல நிதி ஆலோசகரின் உதவி தேவைப்படும்.

மனித வாழ்க்கை என்பது பெரிய மாற்றத்துக்கு உட்பட்டது. இது நமது முதலீடுகளுக்கும் பொருந்தும். மாற்றப்பட்ட நமது பணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, முதலீடுகளில் மாற்றம் செய்வது அவசியமாகும். அதற்கு தொழில்முறை நிதி ஆலோசகரின் உதவி நிச்சயம் தேவைப்படும். அவரின் உதவியைப் பெறும்போது முதலீட்டின் மீதான ரிஸ்க் குறைவதுடன், வருமானமும் அதிகரிக்கும். அவர் நம் நிதி இலக்குகளை சரியாக நிறைவேற்றும் விதமாக முதலீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்து தருவார் மற்றும் மாற்றங்களைச் செய்வார். இப்படிச் செய்வது உண்மையிலேயே நல்ல நிதி ஆரோக்கியத்தை உருவாக்கித் தரும்.

தொழில்முறை நிதி ஆலோசகரின் 
உதவி உங்களுக்கு  ஏன் அவசியம் தேவை?

முதலீட்டு இழப்பைத் தவிர்க்க வழிகள்...

புதிதாக நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்போது, பங்குச் சந்தையின் திடீர் இறக்கம் அல்லது தொடர் இறக்கத்தால் மூலதனத்தின் மதிப்பு குறையும். அப்போது இந்த முதலீடுகளிலிருந்து ஒருவர் வெளியேற வாய்ப்பிருக்கிறது. அப்போது நம்முடன் நல்ல நிதி ஆலோசகர் இருக்கும்போது, ‘குறுகிய காலத்தில் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் இழப்பு ஏற்படுவது இயற்கை யானது; அப்போது அதிலிருந்து வெளியேறினால் இழப்பு என்பது நிரந்தரமானதாக மாறிவிடும்’ என எடுத்துச் சொல்லி, முதலீட்டிலிருந்து வெளியேறுவதைத் தடுப்பார்.

பங்குச் சந்தை வீழ்ச்சியின்போது பயத்தில் முதலீட்டை வெளியே எடுத்தவர்கள், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளானை நிறுத்தியவர்களில் பெரும்பாலானோர் சுயமாக முதலீட்டை மேற்கொண்டவர்களாக இருக் கிறார்கள். அந்த வகையில் நம்முடன் தொழில்முறை நிதி ஆலோசகர் இருக்கும்போது குறுகிய காலத்தில் ஏற்படும் முதலீட்டு இழப்பு பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

வழக்கமான நிதி ஆலோசகர்கள் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்கச் சொல்லும் நிலையில், தொழில்முறை நிதி ஆலோசகர்கள், உடல் உறுப்புகள் செயல்படாமல் போனால் வருமானம் தடைபடாமல் இருக்க ஊன பாதுகாப்பு (Disability) காப்பீட்டை எடுக்கச் சொல்வார்கள்.

ஆயுள் காப்பீடு, குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் மறைந்தால் குடும்ப உறுப்பினர்களை நிதி ரீதியாகப் பாதுகாக்கும் கவசமாக இருக்கும். மருத்துவக் காப்பீடு, மருத்துவமனை செலவுகளுக்குக் கைகொடுக்கும். ஊனப் பாதுகாப்பு காப்பீடு, உடல் ஊனத்தால் வேலைக்குச் செல்ல முடியவில்லை எனில், குறிப்பிட்ட காலத்துக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதாக இருக்கும். இது போன்ற பல்வேறு காப்பீடுகளின் நுணுக்கமான அம்சங்களைத் தொழில்முறை நிதி ஆலோசகர் விளக்கிச் சொல்வார்.

ஓய்வுக்கால திட்டமிடலுக்கான உதவி...

பொதுவாக, இளம்வயது அல்லது நடுத்தர வயதில் நிதித் திட்டமிடலை மேற்கொள்ளும்போது அதில் சொந்த வீடு, பிள்ளைகளின் உயர்கல்வி, பிள்ளைகளின் கல்யாணம், சொந்த கார் போன்ற நிதித் தேவைகளை நிறைவேற்ற நிதித் திட்டமிடலை நிதி ஆலோசகர்கள் வழங்குவார்கள்.

தொழில்முறை நிதி ஆலோசர்கள் மட்டுமே உங்கள் பணிக்காலத்திலேயே, எதிர்காலத்தில் மற்றவர்கள் கையை எதிர்பார்க்காமல் இருக்க ஓய்வுக்காலத் தொகுப்பு நிதித் திட்டத்தையும் தீட்டித் தருவார்கள். தொழில்முறை நிதி ஆலோசர்கள் மட்டுமே விலைவாசி உயர்வு என்கிற பணவீக்கத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நிதித் திட்டம் தீட்டித் தருவார்கள்.

சரியான பணப்புழக்கத்தை உறுதி செய்வார்...

அவசரகால செலவுகளை சமாளிக்க நம்மிடம் போதிய அளவுக்கு ரொக்கப் பணம் மற்றும் உடனடியாகப் பணமாக மாற்றக் கூடிய முதலீடுகள் இருப்பது அவசியமாகும். இதை தொழில் முறை நிதி ஆலோசகர்கள், நம் முதலீட்டுக் கலவையில் உறுதிப்படுத்தியிருப்பார்கள்.

அதாவது, பங்குச் சந்தையின் வீழ்ச்சியால் நம் முதலீட்டுக் கலவையில் இடம் பெற்றிருக்கும் நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் இழப்பில் இருக்கும்போது ஏதாவது அவசரச் செலவு என்று வந்தால், முதலீட்டில் இழப்பு ஏற்படாமல் செலவுகளை மேற்கொள்ளும் விதமாக ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்டுகள், தங்கம் போன்றவற்றில் குறிப்பிட்ட அளவு பணத்தை முதலீடு செய்யும் ஆலோசனையை தொழில்முறை நிதி ஆலோசகர் வழங்கியிருப்பார்; அதன்படி நம்மை முதலீடும் செய்ய வைத்திருப்பார்.

இப்படி செய்யும்போதுதான் நீண்ட கால நிதி இலக்குகளைப் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள் மூலம் சரியாக நிறைவேற்ற முடியும். சரியான அளவு பணப்புழக்கம், நிதி இலக்குகள் சரியான நேரத்தில் நிறைவேற்றம், செல்வம் உருவாக்கம் ஆகியவற்றை நல்ல நிதி ஆலோசகர் சரியான முதலீட்டுக் கலவை மூலம் உறுதிப்படுத்தியிருப்பார்.

சரியான முதலீட்டுக் கலவை என்பது ஃபிக்ஸட் டெபாசிட், லிக்விட் ஃபண்ட், கடன் ஃபண்டுகள், நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள், கோல்டு இ.டி.எஃப் / கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் ஆகியவற்றைக் கொண்ட தாக இருக்கும்.

சரியான பரிமாற்றம்...

தொழில் முறை நிதி ஆலோசனை என்பது மிகவும் பொருத்தமான எஸ்டேட் திட்டமிடலும் (Estate Planning) அடங்கியதாகும், எஸ்டேட் பிளான் என்பது ஒருவர் அவருக்குப் பிறகு அவரின் செல்வத்தை வாரிசுகளுக்கு வழங்கும் திட்டத்தை வகுப்பதாகும். நம்மில் பெரும்பாலானோர் உயில் எழுதி வைப்பது மட்டுமே எஸ்டேட் பிளான் என நினைக்கிறோம். ஆனால், சரியான எஸ்டேட் பிளான் என்பது நம் செல்வத்தை முறையாகப் பயனாளிகளான வாரிசுகளுக்கு அவர்களுக்குள் பிரச்னை வராமல் பிரித்துக் கொடுப்பதாகும். மேலும், இந்த எஸ்டேட் பிளானை முறையாக மேற்கொள்வதன் மூலம் வாரிசுகள் அதிகமாக வருமான வரி கட்ட வேண்டியிருக்காது.

ஒருவர் போதிய அளவு ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்திருக்கும் பட்சத்தில் அதைக் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பது உட்பட சிறிய விஷயங்கள் தொடங்கி, அதை எப்படி க்ளெய்ம் செய்வது வரை பல்வேறு விஷயங் களை எஸ்டேட் பிளான் உள்ளடக் கியதாகும். இதை ஒரு தொழில்முறை நிதி ஆலோசகர்தான் சரியாக மேற்கொள்வார்.

சரியான முதலீட்டுக்கு வழிகாட்டி...

ஏற்கெனவே நாம் சொந்த மாகவோ உறவினர், நண்பர், அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்கள், ஏஜென்டுகள் சொன்னார்கள் என்பதற்காக ஏதாவது சில முதலீடுகளைச் செய் திருப்போம்; செய்துகொண் டிருப்போம். அவை சரியானவை தானா என்பதை தொழில்முறை நிதி ஆலோசகரிடம் கருத்து கேட்பதன் மூலம் உறுதிப்படுத்திக்கொள்வதுடன் சரிசெய்து கொள்ளவும் முடியும்.

இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள், முதலீட்டு ஏஜென்டுகளின் ஆலோசனைகளைவிட தொழில்முறை நிதி ஆலோசகரின் ஆலோசனை நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். காரணம், ஏஜென்டுகள் அவர்களுக்குக் கிடைக்கும் அதிக கமிஷனுக் காக பல தேவையில்லாத திட்டங்களைப் பரிந்துரை செய்ய வாய்ப்புண்டு. ஆனால், தொழில்முறை நிதி ஆலோசகர், முதலீட்டாளர் மற்றும் அவரின் குடும்பத்துக்கு என்ன நிதி ஆலோசனை தேவையோ அதை மட்டுமே வழங்குபவராக இருப்பார்; மேலும், எந்த முதலீடுகள் மிகச் சரியாக இருக்குமோ அதை மட்டுமே மேற்கொள்ள வைப்பார்.

தொழில்முறை நிதி ஆலோசகர், ஒருவரின் நிதி இலக்குகளை அடைய உதவும் வகையில் முதலீட்டுக் கலவையை உருவாக்கித் தருபவராகவும், அதைத் தொடர்ந்து கண்காணித்து அதிக வருமானம் ஈட்டித் தந்து, குடும்பத்துக்கு நிதி பாதுகாப்புக்கு ஏற்படுத்தித் தருபவராகவும் இருப்பார். உங்கள் முதலீட்டை ஒரு நல்ல நிதி ஆலோசகரின் வழிகாட்டுதலுடன் செய்யத் தொடங்குங்கள். உங்கள் இலக்குகளுக்கு ஏற்ற சரியான முதலீட்டுப் பாதையில் பயணம் செய்யுங்கள்.

யார் தொழில்முறை நிதி ஆலோசகர்?

தொழில்முறை நிதி ஆலோசகர் என்பவர் ஒருவருக்கு முழுமையான நிதித் திட்டமிடலை அளிப்பவராக இருப்பார். அவர் முதலீட்டுத் திட்டங்களை விற்பவராக இருக்க மாட்டார்.

அவர் முதலீட்டாளரின் குடும்பத்தை நிதி ரீதியாகப் பாதுகாக்க டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் குடும்பத்தின் மருத்துவச் செலவுகளைக் குறைக்க உதவும் மருத்துவக் காப்பீடுகளைக் கட்டாயம் எடுக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்பவராக இருப்பார்.

அவர் பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணச் செலவுகளுக்கான முதலீட்டுத் திட்டங்களை வகுத்து சொல்வார். கூடவே, பணி ஓய்வுக்காலத்துக்கான தொகுப்பு நிதியை சேர்க்கவும் திட்டம் போட்டு தருவார். சுருக்கமாக, உங்களது சி.எஃப்.ஓ-வாக இருப்பார்!