Published:Updated:

12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சிறு குறு, நடுத்தர தொழில்களை மீட்க அரசு என்ன செய்யவேண்டும்?

சிறுதொழில் நிறுவனங்கள்
News
சிறுதொழில் நிறுவனங்கள் ( vikatan )

15 டன் எடை கொண்ட சரக்கு லாரி, வட இந்தியாவிலிருந்து வரும்போது சுங்கக்கட்டணத்துக்கு மட்டுமே சுமார் 8,000 ரூபாய்வரை கூடுதல் செலவாகிறது. இது விலைவாசி உயர்வதற்கே வழிவகுக்கும்.

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு, ஒருமாத காலத்தைக் கடந்து நீடிக்கிறது. வியாபாரிகள், தொழில்துறையினர் என அனைத்துத்தரப்பினரும் பெருத்த வருமான இழப்பு, தொழில் வாய்ப்பு இழப்பு, பணியாளர்கள் இழப்பு உட்பட பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுவருகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில், நிதி அமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. இந்த அறிவிப்புகளால் உண்மையில் பலன் உண்டா, ரிசர்வ் வங்கி மற்றும் அரசு தரப்பிலிருந்து மேலும் என்னென்ன அறிவிப்புகளை எதிர்பார்க்கிறார்கள் என்று வியாபாரம் மற்றும் தொழில்துறை சார்ந்த சங்கங்களிடம் விசாரித்தோம்.

ஆர்.ராமமூர்த்தி
ஆர்.ராமமூர்த்தி
vikatan

ஆர்.ராமமூர்த்தி, தலைவர், கொடிசியா

"கொரோனா பாதிப்பிலிருந்து எம்.எஸ்.எம்.இ (சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்) துறையை மீட்டெடுக்கும் எண்ணத்தோடு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிதிச்சலுகைகளை வரவேற்கிறோம். மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகளையும் பாராட்டுகிறோம். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம். ஊரடங்கு காரணமாக, எம்.எஸ்.எம்.இ துறை, பொருளாதாரத் தேக்க நிலை, வேலையிழப்பு, பணி ஆர்டர்கள் ரத்து போன்றவற்றை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். நீண்ட நாள் ஊரடங்குக்குப்பிறகு தொழிற்கூடங்கள் திறக்கப்படும்போது பணிக்குவரும் தொழிலாளர்களுக்கு அரசாங்கமே பிரைமரி ஹெல்த் சென்டர் மூலமாக மருத்துவப்பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யவேண்டும். ஏனென்றால், தொழிற்கூடம் செயல்படத்தொடங்கியபின் ஒருவருக்குக் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தாலும் அந்தத் தொழிற்கூடத்துக்கு மீண்டும் 3 மாதக் காலத்துக்கு சீல் வைக்கப்படும் என்று கூறியுள்ளார்கள். ஏற்கெனவே ஊரடங்கால் வருமான இழப்புக்கு ஆளாகியுள்ள தொழிற்கூடங்கள், மீண்டும் 3 மாதக் காலம் மூடப்பட்டால் அவரால் அந்த இழப்பைத் தாங்கவே முடியாது. எனவே அரசாங்கம், அவர்களின் பொறுப்பிலேயே சோதனையை முன்கூட்டியே நடத்துவது நல்லது. எங்கள் துறை மூலமாக இந்தியா முழுவதும் 12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தற்போதுள்ள நிலையில், தொழிற்கூடங்களை மீண்டும் இயக்குவதற்கு நிதித்தேவை இருக்கிறது. எனவே, கூடுதல் வங்கிக்கடனாக, செயல்பாட்டு மூலதனத்தில் 40% அளவுக்குக் கடன் வழங்கினால்தான் நிறுவனங்களால் மீண்டுஎழ முடியும். இந்த வங்கிக்கடனை 6% வட்டி விகிதத்தில், 12 மாத காலத் தவணை அவகாசத்துடன், 10 ஆண்டு காலக்கணக்கில் அளிக்க வேண்டுகிறோம். வங்கிக்கடன் பெறுவதற்கு, வங்கிகள் கொடுக்கும் விதிமுறைகள் யாருக்கும் பொருந்துவதாக இல்லை. டிசம்பர், 2020 வரை வாராக்கடன் கணக்கிடக்கூடாது என்று நிதி அமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால், ஜனவரி, பிப்ரவரியில் வங்கிக்கடன் செலுத்த முடியாமல் போனவர்களுக்கு வாராக்கடனாகும் எனக் காரணம்கூறி தவணையைத் தள்ளிவைக்க மறுக்கிறார்கள். இன்றைய சூழலில் அனைத்து சுமையையும் நாங்கள் மட்டுமே சுமக்க முடியாது. வங்கிகள் தரப்பில் எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, ஓரளவு சுமையைப் பகிர்ந்துகொண்டு, சிக்கலிலிருந்து மீண்டுவர எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

Reserve Bank of India (RBI) Governor Shaktikanta Das
Reserve Bank of India (RBI) Governor Shaktikanta Das
Photo: AP / Rajanish Kakade

ஊரடங்குக்குப்பிறகு நிறுவனத்தை நடத்துவதென்பது, மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குவது போன்றதாகும். பலருக்கு, ஏற்றுமதி ஆர்டர்கள் கேன்சலாகி உள்ளன. ஊர்களுக்குச்சென்றுள்ள பணியாளர்கள் அனைவரும் திரும்ப வந்தாக வேண்டும். இந்த இழப்புகளிலிருந்து நாங்கள் மீண்டு வருவதற்கு இரண்டு, மூன்று ஆண்டுகளாகக்கூடும். அடுத்த ஓராண்டு காலத்துக்கு, தினசரி வேலை நேரத்தை, 8 மணி நேரத்திலிருந்து 9 மணி நேரமாக உயர்த்த வேண்டும். தொழிற்சாலையே செயல்படாத நிலையில், ஏப்ரல் மாதத்துக்குத் தொழிலாளர்களுக்குச் சம்பளம் தரச்சொல்கிறார்கள். கிளெய்ம் செய்யப்படாத இ.எஸ்.ஐ தொகை மற்றும் கிளெய்ம் செய்யப்படாத வருங்கால வைப்பு நிதித்தொகையே 1,60,000 கோடி ரூபாய் உள்ளது. இதிலிருந்து அரசாங்கமே ஏப்ரல், மே மாதங்களுக்குச் சம்பளத்தை வழங்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மைக்ரோ சைஸ் நிறுவனங்களுக்கு 5,00,000 ரூபாய் வரையிலும், ஸ்மால் சைஸ் நிறுவனங்களுக்கு 15,00,000 ரூபாய் வரையிலும் நிதி உதவி அளிக்க வேண்டும். எங்களின் தேவைகளைக் கேட்டறிய, எங்களைப்போன்ற அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு கமிட்டி அமைக்க வேண்டும். அதில் ஆலோசித்து எடுக்கப்படும் முடிவுகளைச் செயல்படுத்த வேண்டும்" என்கிறார்.

வி.கிருஷ்ணமூர்த்தி
வி.கிருஷ்ணமூர்த்தி
vikatan

வி.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் செயலாளர், மதுரை எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்கள் சங்கம்

"தற்போதைய ஊரடங்கு காரணமாக உள்நாட்டு உற்பத்தி இழப்பு சுமார் ரூ.பத்து லட்சம் கோடிவரை இருக்குமென்று கணித்துள்ளார்கள். சிறு, குறு நிறுவனங்களுக்குக் கடன் வழங்க ரூ.15,000 கோடியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்க அறிவிப்பு. ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதம், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் இரண்டையுமே மாற்றியமைத்துள்ளது. இதன்மூலம் வங்கியின் இருப்பு அதிகரிக்கக்கூடும். அதனை தொழில்துறை மீண்டுவருவதற்குப் பயன்படுத்த வேண்டும்.

தொழில்துறைக்கு வழங்கும் கடனுக்கான வட்டியைக் குறைக்க வேண்டும். வங்கிக்கடன் தவணையை 90 நாள்களில் செலுத்தாவிட்டால் வாராக்கடனாகும் என்பதைத் தற்போது 180 நாள்களாக்கி உள்ளனர். ஒரு நிறுவனத்தை திவால் என்று அறிவிப்பதற்கான கால அளவை 210 நாள்களிலிருந்து 300 நாள்களாக மாற்றியுள்ளனர். இந்தக் கால நீட்டிப்பு மட்டுமே போதாது. அவர்களைக் கைதூக்கிவிட மேலும் சில சலுகைகளை வழங்க வேண்டும். மத்திய அரசு, 1.5 லட்சம் கோடி ரூபாயை நிதிச்சந்தையில் படிப்படியாகப் புழக்கத்தில் விடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள். மேலும் 50,000 கோடி ரூபாயையும் புழக்கத்தில் விடவுள்ளதாகத் தெரிகிறது. இப்படிச்செய்வது தற்காலிகமாக அவசியம் என்றாலும், இதனால் விலைவாசி உயருமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாண்டூர் சுங்கச்சாவடி
கள்ளக்குறிச்சி மாண்டூர் சுங்கச்சாவடி

ஏப்ரல் 20 முதலாக, எவ்வித முன்னறிவிப்புமின்றித் திடீரென சுங்கச்சாவடிக் கட்டணத்தை உயர்த்தி, நிறுத்திவைக்கப்பட்ட சுங்கச்சாவடி வசூலையும் தொடங்கியுள்ளார்கள். பெரும்பாலான மளிகைப்பொருள்கள் வட இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படுகின்றன. 15 டன் எடைகொண்ட சரக்கு லாரி, வட இந்தியாவிலிருந்து வரும்போது சுங்கக்கட்டணத்துக்கு மட்டுமே சுமார் 8,000 ரூபாய்வரை கூடுதல் செலவாகிறது.இது விலைவாசி உயர்வதற்கே வழிவகுக்கும். தற்போது கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்திருக்கிறது. ஆனால் பெட்ரோல் விலையோ குறைக்கப்படாமல் 70 ரூபாய்க்கும் மேலே இருக்கிறது. இப்படிச்செய்வது எந்த விதத்தில் நியாயம்? பெட்ரோல் விலையைக் குறைத்தால் விலைவாசியும் பெருமளவு குறையும். இதை அரசு பரிசீலிக்க வேண்டும்"

எஸ்.அன்புராஜன், தலைவர், டான்ஸ்டியா

"எம்.எஸ்.எம்.இ துறையில், குறிப்பாக சிறிய மற்றும் மிகச்சிறிய நிறுவனங்கள் பெரிதும் பாதிப்புள்ளாகியுள்ளன. அவை மீண்டு வருவதற்கு குறைந்தபட்சம் 6 மாத காலங்கள் ஆகலாம். மார்ச் மாதத்தில் பணியாளர்களுக்கான சம்பளத்தை முழுமையாகக் கொடுத்துள்ளோம். ஆனால் ஏப்ரல் மாதச்சம்பளத்தை முழுமையாகக் கொடுப்பது எம்.எஸ்.எம்.இ துறைக்கு மிகவும் கடினம். எனவே நடப்பு ஏப்ரல் மாதத்துக்குக் குறைந்தது 7,000 ரூபாய் முதல் அதிகபட்சம் 30,000 ரூபாய் வரையிலான சம்பளதாரர்களுக்கு, 50% சம்பளத்தை, அரசாங்கமே இ.எஸ்.ஐ பிடித்தத்தில் கிளெய்ம் செய்யப்படாத தொகையின் இருப்பிலிருந்து தர வேண்டுமென்றும், மீதி 50% தொகையை நிறுவனங்களே செலுத்துமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.

எஸ்.அன்புராஜன்
எஸ்.அன்புராஜன்
vikatan

வங்கிக்கடனை 6% வட்டியாகக் குறைத்து, செயல்பாட்டு மூலதன அளவிலிருந்து 30% அளவுக்கு வழங்க வேண்டும். அதனை 30 மாதத்தவணைகளில் திருப்பிச்செலுத்த கால வரையறை செய்ய வேண்டும். முதல் 6 மாத காலத்துக்குத் தவணையைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். மைக்ரோ நிறுவனங்களுக்கு, 4 சதவிகித வட்டியில், 2.5 லட்சம் ரூபாய்வரை வங்கிக்கடன் வழங்க வேண்டும். முதல் 6 மாதங்களுக்குத் தவணையைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். இ.எஸ்.ஐ, பி.எஃப், ஜி.எஸ்.டி, டி.டி.எஸ் ஆகிய அனைத்தையும் வட்டிப்பிடித்தம் இல்லாமல் 2020, ஆகஸ்ட் மாதத்தில் செலுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்"

ஜே.ஜேம்ஸ், கோவை மாவட்டத் தலைவர், டேக்ட்

"சிட்பி, நபார்டு மற்றும் தேசிய வீட்டு வசதி வங்கி போன்ற மத்திய அரசின் நிதி நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி ஒதுக்கியுள்ளது. ஆனால் சிட்பி வங்கி, சிறிய தொழில்களுக்கு நிதி உதவி கொடுப்பதில்லை. கட்டடப் பணியாளர்களுக்கெல்லாம் தனியாக வாரியம் இருக்கிறது. ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களை வைத்து இயங்கும் நிறுவனங்களுக்கு வாரியம் கிடையாது. மாநில அரசு, வாரியம் மூலமாக வழங்கிய நிதி உதவி மற்றும் உணவுப்பொருள்களை இவர்களால் பெற இயலவில்லை. எனவே இந்த ஊரடங்கு காலகட்டத்தைப் பொருளாதார நெருக்கடியோடுதான் கடந்து செல்கிறார்கள். மினிமம் மின் கட்டணத்தை ரத்து செய்யும்படி கேட்டிருந்தோம். இதுவரை எந்த பதிலும் தரவில்லை. மே 6ம் தேதி மின்கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டும். நிறுவனமே இயங்காத நிலையில் மினிமம் மின்கட்டணம் என்பது பெரிய சுமையாகவே இருக்கும்"

ஜே.ஜேம்ஸ்
ஜே.ஜேம்ஸ்
vikatan

தொழில்துறையினரைப் பொறுத்தவரை, ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளில் சிலவற்றை வரவேற்றாலும், அவற்றை வங்கிகள் எவ்வாறு செயல்படுத்தக்கூடும் என்ற சந்தேகத்துடன்தான் இருக்கிறார்கள். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காததுபோல வங்கிகள் பல்வேறு விதிமுறைகளை உருவாக்கி, தேவையான நிதிப்பலன்களைக் கிடைக்காமல் செய்துவிடுவார்களோ என்ற கவலையை வெளிப்படுத்தினார்கள். தொழில்முனைவோர்களுக்கு உதவுவதில், தனியார் வங்கிகளைவிட பொதுத்துறை வங்கிகளே முனைப்பாக இருப்பதாகவும் தெரிகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு எம்.எஸ்.எம்.இ துறைகளே அச்சாணி போன்றவை. எனவே இவர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும்பட்சத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் நம்பிக்கையான பாதையில் பயணிக்கும் என்பது உறுதி.