Published:Updated:

கோவையில் மியூச்சுவல் ஃபண்ட் கூட்டம்... குடும்பசகிதமாக வந்து கலக்கிய முதலீட்டாளர்கள்..!

அழகப்பன் ராமநாதன் மற்றும் சுரேஷ் பாலாஜி ( வெ.தேனரசன் )

மியூச்சுவல் ஃபண்டிலும் ரிஸ்க் நிச்சயம் உள்ளது. ஆனால் அந்த ரிஸ்க்கை நுட்பமாகக் கையாண்டு லாபம் ஈட்டினால், நாமும் கோடீஸ்வரன் ஆகலாம். பணம் என்பது நமக்கு வாய்த்திருக்கும் மிகச் சிறந்த அடிமை. அந்தப் பணத்தை நமக்காக சரியாக உழைக்கச் செய்ய வேண்டும்.

கோவையில் மியூச்சுவல் ஃபண்ட் கூட்டம்... குடும்பசகிதமாக வந்து கலக்கிய முதலீட்டாளர்கள்..!

மியூச்சுவல் ஃபண்டிலும் ரிஸ்க் நிச்சயம் உள்ளது. ஆனால் அந்த ரிஸ்க்கை நுட்பமாகக் கையாண்டு லாபம் ஈட்டினால், நாமும் கோடீஸ்வரன் ஆகலாம். பணம் என்பது நமக்கு வாய்த்திருக்கும் மிகச் சிறந்த அடிமை. அந்தப் பணத்தை நமக்காக சரியாக உழைக்கச் செய்ய வேண்டும்.

Published:Updated:
அழகப்பன் ராமநாதன் மற்றும் சுரேஷ் பாலாஜி ( வெ.தேனரசன் )

``சரியான மியூச்சுவல் ஃபண்டைத் தேர்வு செய்வது எப்படி?” என்ற தலைப்பில் கோவையில் நவம்பர் 5-ம் தேதி நாணயம் விகடன் மற்றும் மிரே (MIRAE) அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து முதலீட்டாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

கூட்டத்தில் கலந்துகொண்ட பார்வையாளர்கள்
கூட்டத்தில் கலந்துகொண்ட பார்வையாளர்கள்
வெ.தேனரசன்

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் அடிப்படை நுட்பங்களை புதிய முதலீட்டாளர் களுக்குத் தெளிவாக விளக்கினார் மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஏரியா ஹெட் சுரேஷ் பாலாஜி.

நிகழ்ச்சியில் சுரேஷ் பாலாஜி பேசியதாவது, ``மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு முன்பாக நமது பாதுகாப்புக்காக அதாவது, `எமர்ஜென்சி ஃபண்ட்’ வைத்திருப்பது அவசியம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பயணத்துக்கு முன்பாக நாம் டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் கோவை மக்கள் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். காரணம் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற 75% முதலீட்டாளர்கள் ஏற்கெனவே டேர்ம் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் வைத்திருப்பதாகச் சொல்வதை வைத்துதான் இதைச் சொல்கிறேன்.

சுரேஷ் பாலாஜி
சுரேஷ் பாலாஜி
வெ.தேனரசன்

அடுத்து முதலீடு செய்ய முக்கியமான ஒன்று குறிக்கோள், நாம் செய்யும் முதலீட்டுக்கு சரியான குறிக்கோள் அதாவது இலக்கு நிர்ணயிக்க வேண்டும். இதை இரண்டு வகையாக அதாவது, ஷார்ட் டேர்ம் மற்றும் லாங் டெர்ம் கோல் என்று பிரித்துக் கொள்ளலாம். லாங் டேர்ம் இலக்கு என்பது வீட்டுமனை வாங்குதல், குழந்தைத் திருமணம் மற்றும் படிப்பு ஆகியவை அடங்கும். ஷார்ட் டேர்ம் இலக்கு என்பது நகை, கார் அல்லது சுற்றுலா போன்றவை உட்படும்.

அடுத்தகட்டமாக, ரிஸ்க் என்கிற முக்கியமான விஷயத்தை நாம் பார்க்க வேண்டும். நாம் செய்யும் அனைத்து விஷயங்களிலும் ரிஸ்க் இருக்கிறது. சில ரிஸ்க் நமது கண்களுக்குத் தெரியும். சில  தெரியாது. உதாரணமாக, வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு வண்டியில் செல்லும்போது சாலைகளில் வண்டி ஓட்டும்போது பல ரிஸ்குகளைச் சந்திக்கிறோம்.

அழகப்பன் ராமநாதன்
அழகப்பன் ராமநாதன்
வெ.தேனரசன்

இந்த ரிஸ்க்குக்காக நாம் வண்டி ஓட்டாமல் இருந்துவிடுவதில்லை. அதே போல, மியூச்சுவல் ஃபண்டிலும் ரிஸ்க் நிச்சயம் உள்ளது. ஆனால், அந்த ரிஸ்க்கை நுட்பமாக கையாண்டு லாபம் ஈட்டினால் நாமும் கோடீஸ்வரன் ஆகலாம். பணம் என்பது நமக்கு வாய்த்திருக்கும் மிகச் சிறந்த அடிமை. அந்தப் பணத்தை நமக்காக சரியாக உழைக்கச் செய்ய வேண்டும்’’ என்று பேசி முடித்தார் சுரேஷ் பாலாஜி.

இந்த நிகழ்ச்சியில் அடுத்து பேசவந்தார் சர்ட்டிஃபைட் ஃபைனான்ஸியல் பிளானரும், வரித்துறை நிபுணருமான அழகப்பன் ராமநாதன். அவர் பேசியதாவது, ``பங்குச் சந்தையில் மட்டுமல்ல, மியூச்சுவல் ஃபண்டிலும்  ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஏனென்றால் மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் கான்செப்ட் பங்குச் சந்தை மூலமாகத்தான் இயங்குகிறது.

குடும்பத்துடன் வந்த பார்வையாளர்கள்
குடும்பத்துடன் வந்த பார்வையாளர்கள்
வெ.தேனரசன்

பங்குச் சந்தை கீழே சென்றால் அந்தப் பங்குகளை வைத்திருக்கும் மியூச்சுவல் ஃபண்டும் கீழே செல்லும். எனவே, மியூச்சுவல் ஃபண்டிலும் அசல் தொகைக்கு கேரன்டி இல்லை. இதில் ஆண்டுதோறும் இத்தனை சதவிகித வருமானம் நிச்சயம் கிடைக்கும் என்று சொன்னால் நிச்சயம் நம்பாதீர்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கடன் (Debt) மற்றும் ஈக்விட்டி (Equity) என இருபெரும் பிரிவாகப் பிரிக்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் ஒரு ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும்முன் அதைப் பற்றி நன்கு புரிந்துகொண்டு முதலீடு செய்ய வேண்டும். நண்பர்கள், சமூக வலைதளங்கள், போலி முதலீட்டு ஆலோசரின் வலையில் சிக்கிவிடவே கூடாது.

எஸ்.ஐ.பி அல்லது மொத்தமாக (Lumpsum) என எப்படி வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். யார் அதிக வருடங்களுக்கு தங்கள் பணத்தை மார்க்கெட்டில் முதலீடு செய்திருக்கிறார்களோ அவர்கள்தான் அதிகம் லாபம் ஈட்டி இருக்கின்றனர். எனவே, மார்க்கெட்டை `டைமிங்’ செய்யாதீர்கள். எவ்வளவு சீக்கிரம் முதலீட்டு பயணத்தை ஆரம்பிக்க முடியுமோ, ஆரம்பிங்கள்’’ என்றார் அழகப்பன் ராமநாதன்.

பிறகு, நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் தங்கள் கேள்விகளை இவ்விரு வல்லுநர்களுடன் கேட்டு தெளிவு பெற்றனர். இந்தக் கூட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண் முதலீட்டாளர்களும் கலந்துகொண்டது ஆச்சர்யமாக இருந்தது. தவிர, 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், சிலர் குடும்ப சகிதமாக இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்ததும் குறிப்பிடத்தக்க விஷயமாக இருந்தது.