பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

‘‘மத்திய அரசு பெரியண்ணன் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறதா?’’

அனந்த நாகேஸ்வரனுடன் பா.சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
அனந்த நாகேஸ்வரனுடன் பா.சீனிவாசன்

விருது விழா

அண்மையில் நடந்து முடிந்த 5-வது நாணயம் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார், இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன்.

‘‘மத்திய அரசு பெரியண்ணன்
மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறதா?’’

இந்த விழாவில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்த அவர், அதற்கு முன்பாக இந்தியப் பொருளாதாரத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் சுணக்கம், உக்ரைன் - ரஷ்யப் போர் ஏற்படுத்தும் தாக்கம், இந்தியப் பொருளாதார மந்தநிலையைச் சமாளிக்க மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார்.

அதன் பின்பு, விகடன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பா.சீனிவாசன் தற்போதைய பொருளாதாரச் சூழல் குறித்து கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அனந்த நாகேஸ்வரன் பதில் அளித்தார். அவை...

அனந்த நாகேஸ்வரனுடன் பா.சீனிவாசன்
அனந்த நாகேஸ்வரனுடன் பா.சீனிவாசன்

``தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட நலத் திட்டங்களில் (Welfare Schemes) சிலவற்றை இன்று இந்திய அரசும் பின்பற்றுகிறது. பல மாநிலங்களிலும் இதைக் காண முடிகிறது. அண்மையில் உத்தரப் பிரதேசத்தில் நடந்த தேர்தலிலும், இந்த `தமிழ்நாடு மாடல்’தான் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்படியெனில், இந்தியாவிலேயே `தமிழ்நாடு மாடல்’தான் சிறந்த மாடலா?”

``உண்மையில் அது பெருமைப்படக்கூடிய விஷயம்தான். மதிய உணவுத்திட்டம் உட்பட பல திட்டங்கள் தமிழகத்திலிருந்து வந்தவைதான். தற்போது அந்தத் திட்டம் இந்தியா முழுவதும் பரவியுள்ளது. இந்த விஷயத்தில் தமிழகம் முன்னோடி என்பது உண்மையே. இதே போல, மற்ற மாநிலங்களும் சில விஷயங்களில் முன்மாதிரியாக இருக்கின்றன. உதாரணமாக, பால் உற்பத்தி யில் குஜராத் சிறந்து விளங்குகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை கர்நாடகாவில் தொடங்கி, பின்பு பிற மாநிலங்களுக்குப் பரவியது.

தமிழ்நாடு போல, பிற மாநிலங்களும், வெவ்வேறு துறைகளில் தங்கள் சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றன என்பதையும் நாம் பார்க்க வேண்டும். உதாரணமாக, தகவல் உரிமைச் சட்டத்தை எடுத்துக்கொண்டால், அது முதன்முதலில் ராஜஸ்தானிலிருந்துதான் தொடங்கியது. எனவே, இதை இந்தியக் கூட்டாட்சியின் வெற்றி என்றே பெருமையாகக் கருதலாம். மாறாக, தனித்த ஓர் அரசின் / மாநிலத்தின் வெற்றியாக (Unitary Success) இதைக் கருத முடியாது.”

``கூட்டாட்சி முறை பற்றிக் குறிப்பிடுகிறீர்கள்; ஆனால், சில முறை மத்திய அரசு பெரியண்ணன் மனோபாவத்தில் நடந்துகொள்கிறதோ என்றே தோன்றுகிறது. அது நீங்கள் சொல்லும் கூட்டாட்சி மனப் பான்மையிலிருந்து லேசாக விலகுவதைப்போல தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். ஜி.எஸ்.டி அதில் ஒன்று. இந்தக் கூட்டாட்சி விஷயத்தில் மத்திய அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது, கூட்டாட்சி மனப்பான்மை தொடருமா அல்லது மாற்றங்கள் இருக்குமா?”

``பத்திரிகைச் செய்திகளின் தலைப்புகளைத் தாண்டி பார்த்தால், இந்த விவகாரத்தில் உண்மை புரியும். உதாரண மாக, மாநிலங்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய எல்லா ஜி.எஸ்.டி தொகைகளையும், நிலுவைத் தொகைகள் அனைத்தையும் மத்திய அரசு செலுத்திவிட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில்கூட, மாநில அரசு மூலதனச் செல வினங்களை மேற்கொள்ள 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டாட்சி கட்டமைப்பின் மாண்பை மத்திய அரசு தொடர்ந்து மதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இதை வெறும் வார்த்தைகளில் மட்டுமல்லாமல், செயலிலும் காட்டுகிறது மத்திய அரசு.”

``பிரதமர் மோடி 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் பற்றிப் பேசி வருகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் பற்றிப் பேசி வருகிறார். தற்போது உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் பற்றி பேசி வருகிறார். இந்த எண்களையெல்லாம் கேட்கும்போது கர்வமாகவும் மலைப்பாகவும் இருக்கிறது. ஆனால், இவையெல்லாம் சாத்தியமா, இவற்றைச் சாத்தியப்படுத்த என்னென்ன தடைகள் இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?”

``முதலில் இப்படி இலக்குகள் நிர்ணயிக்கப்படுவதை வரவேற்க வேண்டும். காரணம், நாம் எப்படிச் செயல்பட வேண்டுமென்ற தெளிவான சிந்தனையை இவை வழங்குகின்றன. அதே சமயம், இந்த இலக்குகளை நம்மால் அடைய முடியுமா, முடியாதா என்பதைப் பல்வேறு காரணி களே தீர்மானிக்கின்றன. உதாரணம், கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் போன்றவை. எனவே, இந்த இலக்குகளை நாம் அடை கிறோமா, இல்லையா என்பதை மட்டுமே வைத்து, நம் வெற்றி தோல்விகளை அளவிடக் கூடாது. மாறாக, அந்த இலக்கு களை அடைய நாம் என்னென்ன முயற்சிகளை எடுத்தோம் என்பதை வைத்தே நம் வெற்றியை அளவிட வேண்டும்.

இந்த இலக்கை அடைய ஓர் அரசாங்கத்தால் என்ன வெல்லாம் செய்ய முடியும்? சாலைகள், விமான நிலையங்கள், மெட்ரோ உள்ளிட்ட நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அதில் ஒன்று. இந்த வளர்ச்சியை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். நாடு முழுக்க இந்த வசதிகள் அதிகரித்து வருகின்றன.

இதேபோல, டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்பட்டு வருகின்றன. இதைத் தாண்டி செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் என நான் இரண்டைக் குறிப்பிடுவேன். ஒன்று, உயர்கல்வி. நாம் இரண்டு ஆண்டுகளை கொரோனாவால் இழந்துவிட்டோம். இந்த இழப்பை நாம் சரிசெய்ய வேண்டும். அடுத்தது, மக்களின் உடல்நலன். அண்மையில் வெளியான தேசிய குடும்பநல சர்வே 5-ன்படி, நாட்டில் 40% பேரின் BMI (Body Mass Index) 25-க்குமேல் இருக்கிறது. இது அவர்கள் எதிர்காலத்தில் வெவ்வேறு உடல்நல பாதிப்புகள் மற்றும் தொற்றுகளுக்கு ஆளாகும் ஆபத்தையும் உருவாக்குகிறது. இதைச் சரிசெய்ய வேண்டும். குறிப்பாக, உணவு விஷயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இதையெல்லாம் தாண்டி, இன்னொரு விஷயத்தையும் சொல்லலாம். நாம் அனைவரும் எல்.ஐ.சி-யின் 5% பங்கு விலக்கல் (Disinvestment) பற்றிப் பேசி வரு கிறோம். இதேபோல, இன்னொரு LIC-யிலும் அரசின் ஆதிக்கம் குறைய வேண்டும். License, Inspection, Compliance என்பதைத்தான் LIC என்று குறிப்பிடுகிறேன். இந்த LIC ராஜ் முடிவுக்கு வர வேண்டும். இதை மத்திய அரசு மட்டும் செய்ய முடியாது. மாநிலங்களும் செய்ய வேண்டும். சிறிய தொழில் நிறுவனங்கள் பெருமளவில் தங்கள் நேரத்தைச் செலவிடுவது சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பதை உறுதிசெய்யும் அலுவல் பணிகளுக்குத்தான். இது மாற வேண்டும். இந்த மாற்றத்தை அரசும், தொழில் துறையினரும் இணைந்து நிகழ்த்த வேண்டும்.”

‘‘மத்திய அரசு பெரியண்ணன்
மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறதா?’’

‘‘சரி, இப்போது கொஞ்சம் உலகப் பொருளாதாரம் பற்றியும் பார்ப்போம். தற்போதைய கொரோனா பெருந் தொற்றுக்குப் பிறகு, உலக கார்ப்பரேட் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்துமே `China Plus One’ அவுட்சோர்சிங் பாலிசியை முன்னெடுத்திருக்கின்றன. இந்த `China Plus One’ பாலிசியில் இந்தியா மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. சீனாவிலிருந்து நிறைய வாய்ப்புகளை நாம் பெறுவோம் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த விஷயத்தில் நாம் இப்போது எங்கு இருக்கிறோம், நமக்கு இருக்கும் சவால்கள் என்ன?”

``இது மிக நல்ல கேள்வி. ஆனால், இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை. நாம் உடனடியாக அவுட்புட்டை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், `China Plus One’ பாலிசியில் முக்கிய அம்சமாக, பல நாடுகளும் முதலில் உற்பத்தியை தங்கள் சொந்த நாடுகளுக்கே எடுத்துப்போக முடியுமா என்றுதான் பார்க்கின்றன. உதாரணமாக, செமி கண்டக்டர் உற்பத்தி செய்யும் இன்டெல் நிறுவனம், அதன் பல புதிய கிளைகளை தன் நாட்டிலேயேதான் திறந்துவருகிறது. காரணம், நாளைக்கு தைவானுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், அது தன்னை பாதிக்கும் என உணர்ந்திருக்கிறது. எனவே, சொந்த நாட்டுக்குச் செல்வதுதான் நிறுவனங்களின் முதல் இலக்காக இருக்கிறது. அதன்பின்பே வேறுநாடுகளைப் பற்றி யோசிக்கின்றன.

அப்படி யோசிக்கும்போது அந்த வாய்ப்புகளை இந்தியா தவறவிடக் கூடாது என்பதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. Production Linked Incentive (PLI) Scheme அதற்கு ஓர் உதாரணம். இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் இருவருக்கும் சமவாய்ப்பை வழங்குகிறது. படிப்படியாக விரிவுபடுத்தப் படும் இந்தத் திட்டம் தற்போது 14 வெவ்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த `China Plus One’ விவகாரத்தில் இப்போதைக்கு சில நல்ல விஷயங்களை செய்தி அளவில் மட்டும் கேள்விப் படுகிறேன். உதாரணமாக, சில ஃபார்மா நிறுவனங்கள் மற்றும் ஜப்பானின் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆகியவை இந்தியாவுக்கு வர தீவிரமாக யோசித்துவருவதாகச் சொல்கிறார்கள். இவையெல்லாம் மகிழ்ச்சி அளிக்கக்கூடியவையே. ஆனால், உண்மையிலேயே இந்தியா `China Plus One’ விவகாரத்தில் வெற்றியடைந்து விட்டதா என்பதைக் காண நாம் இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.’’

‘‘மத்திய அரசு பெரியண்ணன்
மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறதா?’’