Published:Updated:

பட்ஜெட் 2020: `வரிச் சலுகை... விவசாயம்... பொருளாதாரம்!' - நாணயம் விகடன் சர்வே முடிவுகள் சொல்வதென்ன?

பட்ஜெட் 2020
பட்ஜெட் 2020 ( vikatan )

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 36.8% பேர், ரூ.5 லட்சம் வரையிலான வரிச் சலுகைதான் எங்களுக்கு வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த பட்ஜெட் தொடர்பாக அனைத்து தரப்பினரும் பலவிதமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கின்றனர்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்தநிலையில், நிதி அமைச்சரிடம் இருந்து நீங்கள் எதிர்பார்ப்பது என்ன என்று `நாணயம் விகடன்' சார்பில் ட்விட்டரில் ஒரு சர்வே நடத்தினோம்.

இந்த சர்வேயில் வாசகர்கள் தேர்வு செய்கிற மாதிரி மூன்று பதில்களையும் தந்தோம்.

1. ரூ.5 லட்சம் வரை வருமான வரிச் சலுகை.

2. பொருளாதார முன்னேற்றம்.

3. விவசாய வளர்ச்சி.

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்த கருத்துகள் வித்தியாசமானதாகவே இருந்தன. இந்த சர்வே மூலம் தெரியவரும் வாசகர் மனநிலையை என்னவென்று பார்ப்போம்.

வரிச் சலுகைதான் வேண்டும்!

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 36.8% பேர், ரூ.5 லட்சம் வரையிலான வரிச் சலுகை எங்களுக்கு வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். தற்போது ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் ஈட்டுகிறவர்கள் எந்த வரியையும் கட்ட வேண்டியதில்லை. ஆனால், ரூ.5 லட்சத்துக்குமேல் வருமானம் ஈட்டுகிறவர்கள் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான தொகைக்கு 5% அதாவது, ரூ.12,500 வரி கட்ட வேண்டும். ஆனால், சம்பளதாரர்களோ இந்த 5% வரியையும் நீக்க வேண்டும் என்று தற்போது எதிர்பார்க்கின்றனர்.

வரிச் சலுகை
வரிச் சலுகை

விவசாய வளர்ச்சி வேண்டும்!

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 32.1% பேர், விவசாய வளர்ச்சியைத்தான் இந்த பட்ஜெட்டில் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளனர். நம் நாட்டில் தொழில்துறை என்னதான் முன்னேற்றம் கண்டாலும், நாம் இன்னமும் ஒரு விவசாய நாடாகவே இருக்கிறோம். நம் நாட்டில் விவசாயம் செய்கிற மக்கள் மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகமாகவே இருக்கின்றனர். இந்தநிலையில், விவசாயிகள் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே நமது பொருளாதாரம் உண்மையான முன்னேற்றம் காணமுடியும். எனவேதான், பல வாசகர்கள் விவசாய வளர்ச்சி வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

`புதிய வெளிச்சத்தைத் தருமா மத்திய பட்ஜெட்?' -அறிவிப்புக்காகக் காத்திருக்கும் தீப்பெட்டி தொழிலாளர்கள்

இந்த சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 31.1% பேர், பொருளாதார முன்னேற்றத்தைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளனர். நமது ஜி.டி.பி. சில ஆண்டுகளுக்குமுன் 8 சதவிகிதத்துக்குமேல் இருந்தது. ஆனால், இந்த நிதியாண்டில் 4.8 சதவிகிதமாகவே இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் மதிப்பிட்டிருக்கிறது. இந்தநிலையில், நமது பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே சரியாக இருக்கும் எனப் பல வாசகர்கள் நினைத்ததன் விளைவாகவே இந்த விஷயத்தைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

வரிச் சலுகை
வரிச் சலுகை

இந்த மூன்று விஷயங்களில் வாசகர்கள் ஏறக்குறைய சம அளவில் முக்கியத்துவம் கொடுத்ததைப் பார்க்கும்போது பொதுமக்களுக்கு இந்த மூன்று விஷயங்களுமே முக்கியமானது என்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது!

அடுத்த கட்டுரைக்கு