Published:Updated:

“டிரெஸ் வேண்டாம், செருப்பு வாங்கிக் கொடு...” நாஞ்சில் நாடன் சொல்லும் பணத் திட்டம்!

நாஞ்சில் நாடன்
பிரீமியம் ஸ்டோரி
News
நாஞ்சில் நாடன்

ஆயிரம் முதல் லட்சம் வரை... அனுபவம் பகிரும் பிரபலங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தனது பண அனுபவத்தைப் பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

“நாஞ்சில் நாட்டில் வீரநாராயணமங்கலம் என்கிற சின்ன கிராமத்தில பிறந்தவன். எங்க அப்பா, நாலு ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்து பயிர் செய்தார். ஒரு எருமை மாடு, இரண்டு ஏர் உழுகிற எருமைக்கிடா வச்சிருந்தார். மூணு சென்ட்ல சின்னதா கூரை வீடு இருந்தது. சின்ன கோழிக்கூடு, அதில பத்து, இருபது கோழி கிடக்கும். வீட்டுக்குப் பின்னாடி இரண்டு தென்னை மரம், ஒரு முருங்கை மரம், ஒரு கருவேப்பிலை மரம், சின்ன மாட்டுத்தொழு. இவ்வளவுதான் அவருக்கு ஆஸ்தி.

எங்க அப்பாவுக்கு ஏழு பிள்ளைகள், நான் மூத்தவன். இது தவிர, அப்பாவைப் பெத்த ஆத்தா, அம்மையைப் பெத்த ஆச்சி ரெண்டு பேரும் கூட இருந்தாங்க. மொத்தம் நாலு ஃபுல் டிக்கெட், ஏழு ஆஃப் டிக்கெட். ஒருத்தர் ஏர் உழவு செய்து இந்தக் குடும்பத்தைக் காப்பாத்தணும். நான் வீட்டுக்கு மூத்த பையன். அதனால அவர் படக்கூடிய கஷ்டங்களை சின்ன வயசுலயே நானும் பட்டு வளர்ந் திருக்கேன்.

நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன்

ஆறு மாசத்துக்கு ஒரு முறைதான் நெல் அறுவடை. அறுவடைக் காலங்களில சோத்துக்கு நெல் இருக்கும். சில காலங்களில சரியா விளையலன்னாலோ, மழைத்தண்ணி இல்லாம பஞ்சம் வந்தாலோ, அறுவடைக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி வீட்டுல அரிசிக்குத் தட்டுபாடு வந்திரும். அதுக்காக கோட்டக் (அடமானக்) கடன் வாங்குவோம். அதாவது, அந்தக் காலத்தில 40 ரூபாய்க்கு நெல் விக்குதுன்னா, அறுவடை முடிஞ்ச பிறகு, 25 ரூபாய்க்கு நெல்லு தாறேன்னு சொல்லி, வசதியுள்ளவர்களிடம் முன்பே நெல்லை வாங்குவோம். அறுவடைக்குப் பிறகு, அந்த விலைக்கு நெல்லை கொடுத்திருவோம்; இல்லைன்னா, நெல்லுக்கான காசை கொடுத்திருவோம். அதுக்கும் வழி இல்லைன்னா அம்மாக்கத் தாலிச் செயினை அடகு வச்சு பணம் வாங்குறதும் நடக்கும். இப்பிடித்தான் எங்க தந்தையோட நிதி நிர்வாகம் இருந்தது.

நான் மூன்று அரசுப் பள்ளிகளில படிச்சேன். நான் டூத் பேஸ்ட் பயன்படுத்தத் தொடங்கியது 16 வயசுக்கு அப்புறம்தான். அதுவரைக்கும் உமியைக் கரி ஆக்கி, உமிக்கரியால் பல்லு தேய்ப்போம். அல்லது ஆலம் விழுது, வேப்பங் குச்சியால பல் தேய்ப்போம். மேலுக்கு சோப்பு போடுறது எல்லாம் ரொம்ப பிந்தித்தான் நாங்க தெரிஞ்சுகிட்டோம். டால்கம் பவுடர் போடுறது எங்களுக்கு ஆடம்பரமாத்தான் இருந்துச்சு.

ஆத்தங்கரைகளில புறம்போக்குல புன்னை மரம் வளர்ந்து நிற்கும். எலுமிச்சை பழ சைஸ்ல புன்னைக் காய் பச்சையாக் காய்க்கும். நான் காலையில ஐந்தரை மணிக்கே புன்னக் கொட்டைப் பெரக்கப் போவேன். வீட்டுல ஆளுயர ரெண்டு சாக்கு வச்சு, அதில தினமும் சேகரிப்பேன். பூட்டுங்கிறது 10 காய், 10 பூட்டுங்கிறது 100 காய். பத்து பூட்டுக்கு ஒரு அணா கொடுப்பாங்க. 16 அணா சேர்ந்தாத்தான் ஒரு ரூபாய். அந்தக் காலத்தில நான் தீவிரமா சினிமா பார்ப்பேன். புன்னக்கா விக்கிற காசுல மிச்சம் பிடிச்சு சினிமா பார்ப்பேன்.

1964-ல் எஸ்.எஸ்.எல்.சி படிச்சேன். 600-க்கு 406 வாங்கி மாவட்டத்தில ரெண்டாவதா வந்தேன். அந்தக் காலத்தில எந்தப் பத்திரிகையும் போட்டா போடல; பெற்றோர் கேக்கும் ஊட்டல. நான் நாகர்கோவில் இந்து காலேஜில சேர ஃபாம் வாங்கிட்டு வந்தேன். 118 ரூபாய் வருஷத்துக்கு பீஸ் கட்டணும். எங்க அப்பா கிட்ட பணம் கிடையாது. ‘நம்மக்கொண்டு முடியாது மக்கா; பலசரக்கு கடையில போய் வேலைக்கு நில்லு’ன்னு சொன்னார். நான் படிப்பேன்னு அழுதேன். எங்க அடுத்த வீட்டுல வசிச்ச சித்தப்பா, எனக்காக பீஸ் கட்டினார். அப்பிடி பி.யூ.சி-யில சேர்ந்தேன்.

அப்ப டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயர்ல நேஷனல் லோன் ஸ்காலர்ஷிப்புன்னு ஒண்ணு இருந்தது. பிரி யுனிவர் சிட்டி சேர்ந்ததுக்கப்புறம் 720 ரூபாய் ஸ்காலர்ஷிப் வந்தது. பி.யூ.சி முடிச்சிட்டு பி.எஸ்ஸி மேக்ஸ் படிச்சேன். நான் முதன் முதல்ல காலுக்கு செருப்புப் போட்டது காலேஜுக்கு போனப்பதான். என்.சி.சி-யில சேர்ந்ததுனால ஷூ போட்டேன். அடுத்து, திருவனந்தபுரம் மகாத்மா காந்தி மெமோரியல் காலேஜில் எம்.எஸ்ஸி படிச்சு முடிச்சு வேலைக்கு முயற்சி பண்ணினேன். சர்வீஸ் கமிஷன் எழுதியும் ஒண்ணும் கிடைக்கல. 1972 தீபாவளிக்குப் பிறகு, நான் பையைத் தூக்கிக்கிட்டு பாம்பேக்குப் போனேன்.

பாம்பேயில டபிள்யூ.ஹெச்.பிரடி அன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில கேஷுவல் லேபரா 7 ரூபாய் சம்பளத்துக்கு மூணு நாலு மாசம் வேலை பார்த்தேன். ஒருநாள் லஞ்ச் பிரேக்கில் வெளியில போய் வடாபாவு வாங்கித் தின்னுகிட்டு உக்காந்து இங்கிலீஸ் புக்கு படிச்சுகிட்டு இருந்தேன். கோட்டு சூட் போட்டுகிட்டு ஆபீஸுக்கு வந்த ஆபீஸ் செக்கரட்டரி என்னை கேபினுக்குக் கூப்பிட்டார். ‘‘என்ன பண்ணிகிட்டு இருக்கே’’ன்னு கேட்டார். ‘‘லஞ்ச் பிரேக்தானே சார்... படிச்சுகிட்டு இருக்கேன்’’ என்றேன். ‘‘உன்னுடைய குவாலிபிகேசன் என்ன’’ன்னு கேட்டார். நான், ‘‘எம்.எஸ்ஸி மேத்தமேட்டிக்ஸ்’’னு சொன்னேன். என் முன்னாலேயே ஹெட் ஆபீஸுக்கு போன் பண்ணி மாசம் 7 ரூபாய் சம்பளத்த 210 ரூபாயா உயர்த்தி கிளார்க்காக அப்பாயின்மென்ட் கொடுத்தார்.

1973-ல 210 ரூபாய் சம்பளம். அடுத்ததா ஸ்டோர் கீப்பர், சேல்ஸ் ஆபீஸர் ஆகி, சேல்ஸ் மேனேஜர் ஆகி, 19 வருஷம் பாம்பேயில வாழ்ந்தேன். 1979-ல் திருமணம் ஆனது. 1989-ல் கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்பர்ல வந்தேன். அப்ப மகள் மூணாம் கிளாஸ் படிச்சுகிட்டு இருந்தா, மகன் யு.கே.ஜி படிச்சுகிட்டு இருந்தான். 2005 டிசம்பர் 31-ம் தேதி வரைக்கும் கிளை மேலாளரா இருந்து ஓய்வு பெற்றேன். ஓய்வு பெற்றப்ப என்னோட கிராஸ் சேலரி 12,000 ரூபாய். நான் எப்படி சமாளித்தேன் தெரியுமா?” எனக் கேட்டவர், தான் பின்பற்றிய நிதி மேலாண்மை பற்றி விவரித்தார்.

“டிரெஸ் வேண்டாம், செருப்பு வாங்கிக் கொடு...” நாஞ்சில் நாடன் சொல்லும் பணத் திட்டம்!

“நான் மார்க்கெட்டிங்ல இருந்தவன். மாசம் 15 நாள், 20 நாள் டூர்ல இருப்பேன். டூர்ல ஒரு நாள் ஹோட்டல்ல தங்குறதுக்கும், சாப்பிடுவதற்கும் 750 ரூபாய் பில் கொடுத்து செலவு பண்ணலாம். பில் இல்லாம 500 ரூபாய் செலவு பண்ணலாம். நான் அதை க்ளெய்ம் பண்ணிடு வேன். மலிவான உணவுகள் வாங்கித் தின்னு, நடந்தும் பஸ் புடிச்சும் போவேன். ஆனா, கஷ்டப்பட்டு வேலை செஞ்சு நல்ல ரிசல்ட் கொண்டுவருவேன்.

மும்பைல என் ஆபீஸ் ‘ரே’ ரோட்ல இருந்தது. நான் பஸ்ல போகும்போது, ஆபீஸ் ஸ்டாப்புக்கு 15 பைசா, முந்தின ஸ்டாப்புக்கு 10 பைசா டிக்கெட். நான் ஒரு ஸ்டாப் முன்னாடி இறங்கி நடந்துபோவேன். வேலை பார்க்கும்போது மூணு பேன்ட், மூணு சட்டை, மூணு செட் உள்ளாடை, ஒரு லுங்கி வச்சிருந்தேன். என்னை இன்னலுக்கும் கஷ்டத்துக்கும் ஆட்படுத்திக்கொண்டு அந்தப் பணத்தை மிச்சப்படுத்தினேன்” என்றவர், சற்று இடைவெளி விட்டு தொடர்ந்தார்.

“நான் எவ்வளவு கஷ்டப்பட் டேனோ, அதெல்லாம் என் பிள்ளைங்க தெரிஞ்சுதான் வளர்ந்திருக்கிறாங்க. பிள்ளைங்க கஷ்டம் தெரிஞ்சுதான் வளரணும். பிள்ளைங்ககிட்ட ஆடம்பரத்தைக் காட்டவே கூடாது. என் பொண்ணு இப்ப அனஸ்தீஸ்தியா டாக்டரா இருக்கா. மாப்பிள்ளை அரசு மருத்துவமனையில் ஆர்த்தோ சர்ஜன். இப்ப கோவை மெடிக்கல் காலேஜில சீனியர் அஸிஸ்டன்ட் புரொபசரா இருக்கார். மகன் கோவையில பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சு, கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட் ஆகி ஐ.டி கம்பெனியில மேனேஜரா இருக்கான்.

1990-ல் கோவையில் ஐந்தரை சென்ட் நிலம் வாங்கினேன். நான் ஓய்வு ெறும்போது ரூ.8 லட்சம் கிராஜிவிட்டியா கிடைச்சது. 2011-ல என் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வச்சேன். வீடு இருக்கிற இடம் மாத்திரம்தான் நான் வாங்கிப் போட்டது. என் மகன் சம்பாதித்த பணத்தில் அந்த நிலத்தில் சொந்த வீட்டைக் கட்டி, அதில காலாட்டிகிட்டு உக்காந்து இருக்கிறேன்.

இப்ப மாச பென்ஷன் வெறும் 1,418 ரூபாய். ஓய்வுக்குப் பிறகு, பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் மாணவர்களுக்கு உரையாற்ற கூப்பிடுவாங்க. யாருகிட்டயும் இவ்வளவு பணம் கொடுங்கன்னு கேட்டு வாங்குற பழக்கம் இல்ல. புத்தகமோ, துண்டோ, பணமோ எது கொடுத்தாலும் வாங்கிட்டு வந்திருவேன். அந்த வரவு எனக்கு புத்தகங்கள் வாங்குறதுக்கும், கூரியர் அனுப்புறதுக்கும் வசதியாக இருந்தது. இப்ப கொரோனா காரணமா ஒன்றரை வருஷமா அதுவும் கிடையாது.

எழுதக்கூடிய பேப்பர்கூட ஒன் சைட் பேப்பர்தான் பயன்படுத்து றேன். இப்ப என்கிட்ட பத்து வருஷத்துக்கு எழுதுறதுக்கான ஒன்சைட் பேப்பர்ஸ் இருக்கு. எதையும் வீணாக்குறது இல்ல.

எனக்குக் கடன் வாங்குறது பிடிக்காது. வீடு கட்டுறதுக்குக் கூட கடன் வாங்கல. பொண்ணு கல்யாணத்துக்குக் கடன் வாங்கி னேன். சிலர் பணம் தந்துட்டு, ‘‘நாஞ்சில் நாடன் நீங்க படுற கஷ்டம் தெரியும். அதனால இதைக் கடனா தரல; திருப்பித் தர வேண்டாம்’’னு ஐந்தாறு நண்பர்கள் சொன்னாங்க. மிச்சம் உள்ளவங்ககிட்ட வாங்கின கடனை கனடா, அமெரிக்காவுல விருது கொடுத்த பணத்தில கடனை மீட்டிட்டேன்.

இப்ப எனக்கு 74 வயசு ஆகுது. கொரோனா இல்லாத காலத்தில வாரத்துக்கு ஒருநாள் டவுனுக்குப் போயிட்டு வருவேன். தாழ்தள சொகுசுப்பேருந்துக்கு 23 ரூபாய் டிக்கெட், சாதா பஸ்ஸுக்கு 11 ரூபாய் டிக்கெட். நான் அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணி சாதா பஸ்ல போவேன்.

தீபாவளிக்கு டிரெஸ் வாங்கித் தரேன்னு மகள் சொன்னா. என் செல்ப்பில் இருக்கும் துணிகள் இன்னும் பத்து வருஷத்துக்கு போடுறதுக்கு போதும். எனவே, டிரெஸ் வேணாம்; என் செருப்பு பிஞ்சுபோச்சு; ஒரு செருப்பு வாங்கிக்குடுன்னு கேட்டிருக்கேன். இந்தத் திட்டமிடல்தான் என்னை வழிநடத்துகிறது.

என் அப்பா, ‘சிவன் சொத்து குலநாசம்’ என்பார். சிவன் என்றால், இந்துக்கடவுளாக எடுக்க வேண்டாம். எந்த பொதுச் சொத்தும் குலத்தை நாசம் செய்யும். அதுமட்டுமல்ல, தேவை இல்லாமல் எதையும் வாங்கக் கூடாது. எதையும் அநாவசியமாக வீண் செய்யக் கூடாது என்பதையும் என் பாலிசியாக வைத்திருக்கிறேன்” என்றார் கம்பீரமாக.

தான் பின்பற்றிய நிதி மேலாண்மை குறித்து நாஞ்சில் நாடன் சொன்ன விஷயங்கள் அனைத்தையுமே இன்றைய தலைமுறை நிச்சயம் வியந்து பார்க்கும்!