Published:Updated:

`உலகப் போரின்போதுகூட இப்படி ஒரு சரிவைக் கண்டதில்லை' - வேதனை தெரிவித்த மோடி #corona

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

நேற்று, காணொளி கலந்துரையாடல் மூலம் ASSOCHAM, FICCI ,CII மற்றும் இதர பல அமைப்புகளுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து கலந்தாலோசித்தார்.

உலக நாடுகளின் பொருளாதாரத்தைத் தடம்புரளச் செய்துள்ள கொரோனாவின் தாக்கம், இந்தியப் பொருளாதாரத்தையும் மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. நாட்டின் எல்லாத் துறைகளும் நோய்த் தொற்றின் காரணமாக முடங்கிக்கிடக்க, நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத சரிவைக் கடந்த சில வாரகாலமாகச் சந்தித்துவருகிறது. உலகப் பொருளாதார அடிப்படையில் 5-வது மிகப் பெரிய நாடாக இருக்கும் இந்தியா, வரும் நிதியாண்டில் நிலை தடுமாற வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

முன்னதாக, நாட்டின் பொருளாதாரம் வரும் நிதியாண்டில் 5.7 சதவிகிதம் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், கொரோனாவால் எதிர்பார்க்கப்பட்ட 5.7 சதவிகிதம் ஜி.டி.பி உயர்வு சாத்தியமில்லை என்றும் 5 சதவிகிதம் மட்டுமே சாத்தியம் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

சரியும் பொருளாதாரம்... மீட்க முடியுமா?

இந்தியாவில், கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதனால், இந்தியாவின் நுகர்வு, முதலீடுகள் மற்றும் உற்பத்தி என எல்லாமே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும்விதமாக நாடு முழுவதும் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. நேற்று ஒருநாள் மட்டுமே சுய ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் 31 வரை அந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தொழில் முனைவோர் மத்தியில் தொழில்துறை குறித்த அவநம்பிக்கை உண்டாகியுள்ளது.

அசோசெம் அமைப்பு
அசோசெம் அமைப்பு

இந்நிலையில், நேற்று (23.03.2020) காணொளி கலந்துரையாடல் மூலம் ASSOCHAM, FICCI ,CII மற்றும் இதர பல அமைப்புகளுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்தார். அந்தக் காணொளி கலந்துரையாடலில் பேசிய மோடி, "இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை ஆதாரமே நம்பிக்கைதான். அதற்கென்று தனி அளவுகோல்கள் இருக்கின்றன. சூழலுக்கு ஏற்றாற்போல் அதன் அளவு ஏறவோ இறங்கவோ செய்கிறது.

கொரோனா நோய்த்தொற்றால் நாட்டின் அனைத்துத் துறைகளும் ஆட்டம்கண்டிருக்கின்றன. சுற்றுலாத் துறையில் தொடங்கி உற்பத்தி துறை வரை கொரோனாவால் பாதிப்படைந்துள்ளன. இதைத் தவிர்த்து, நாட்டில் இயங்கும் அமைப்பு சாரா மற்றும் சிறு குறு நிறுவனங்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம். வளர்ச்சி அடையும் நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த நோய் பாதிப்பால், நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறி இருக்கிறது. தற்போது நாம் எதிர்கொண்டுவரும் சவால், இதற்கு முன் இந்தியப் பொருளாதாரம் கண்ட நெருக்கடிகளைவிடவும் கடுமையானதாக உள்ளது. உலகப் போரின்போது ஏற்பட்ட நிலையைவிடவும் நிலைமை தற்போது மிக மோசமாக உள்ளதை உணர்கிறோம். அதேபோல் மிகவும் கவனமாகவும் விழிப்புடனும் நாம் இந்தத் தருணத்தில் செயலாற்ற வேண்டும்" என்றார்.

உலகப் பொருளாதார சரிவு; 38 மத்திய வங்கிகளின் அதிரடி நடவடிக்கை; வட்டியை மீண்டும் குறைக்குமா ஆர்.பி.ஐ?

அந்தக் காணொளி கலந்துரையாடலில் கலந்துகொண்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், நாட்டின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள சரிவை சுட்டிக்காட்டி, இந்தச் சவால்களிலிருந்து மீண்டு வருவதற்குத் தங்களுக்கு அரசு தரப்பிலிருந்து உதவிகள் தேவைப்படுவதாகக் கூறி, பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும், அந்தக் காணொளி கலந்துரையாடலில் மோடி, மருத்துவத் துறையினரை போர்க்கால அடிப்படையில் கொரோனா நோய்க்கு ஆர்.என்.ஏ பரிசோதனைக் கருவிகளைத் தயாரிக்கவும் வலியுறுத்தினார். அதேபோல் அத்தியாவசிய மருந்துப் பொருள்களின் உற்பத்தியையும் விநியோகத்தையும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளதைக் குறிப்பிட்ட மோடி மருந்துப்பொருள்களைப் பதுக்கி, கறுப்புச் சந்தையில் விற்பதைத் தடுக்கும் வகையில் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

நிறுவனங்கள், அதன் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணிபுரிவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் பணிநீக்க நடவடிக்கைகள் ஏதும் அவர்கள் மேல் மேற்கொள்ள வேண்டாம் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். இந்த இக்கட்டான சூழலில், கொரோனா நோய்த் தொற்றிடமிருந்து நம்மைக் தற்காத்துக்கொள்ள, தனித்து இருப்பதுதான் ஆகச் சிறந்த வழி என்பதனையும் வலியுறுத்தினார் பிரதமர் மோடி.

அடுத்த கட்டுரைக்கு