Published:Updated:

Income Tax e-filing: செயல்பாட்டுக்கு வராத வருமான வரி கணக்குக்கான புதிய தளம்; முதல் நாளே ஏமாற்றம்!

வருமான வரி
வருமான வரி

வருமான வரி செலுத்துவோருக்கு உடனடியாக, `ரீஃபண்டு' வழங்குவதற்கு ஏதுவாகவும், ஆன்லைன் வாயிலாகக் கணக்கு தாக்கல் செய்ய ஏதுவாகவும், இந்தப் புதிய இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, இதுவரை நடைமுறையில் இருந்து வந்த www.incometaxindiaefiling.gov.in என்ற இணைய தளத்தின் பயன்பாடு நிறுத்தப்படுகிறது. இதற்குப் பதிலாக, www.incometax.gov.in என்ற புதிய இணையதளம், இன்று (ஜூன் 7) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், இன்று மாலை வரை செயல்பாட்டுக்கு வரவில்லை.

வருமான வரி செலுத்துவோருக்கு எளிமையாகவும், உடனடியாக, `ரீபண்டு' வழங்குவதற்கு ஏதுவாகவும், ஆன்லைன் வாயிலாகக் கணக்கு தாக்கல் செய்ய ஏதுவாகவும், இந்தப் புதிய இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து கலந்துரையாடல்கள், பதிவேற்றம், நிலுவையில் உள்ள செயல்கள் அனைத்தும், ஒரே பக்கத்தில் தெரியும்படி, இந்த இணையதளம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

income tax
income tax

வரி செலுத்துவோர் புதிய இணையதளத்தின் பல்வேறு அம்சங்களைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் புதிய மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது அறிமுகப் படுத்தப்பட்டிருக்கும் புதிய இணையதளம் குறித்து புரிந்துகொள்ள சிறுது நேரம் ஆகலாம், எனவே புதிய போர்ட்டல் தொடங்கப்பட்ட பின்னர், ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பாக சிறிது பொறுமை காக்க வேண்டும் என வருமான வரித்துறை கோரிக்கை வைத்துள்ளது.

ஐ.டி.ஆர் 1 மற்றும் 4 (ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்) மற்றும் ஐ.டி.ஆர் 2 (ஆஃப்லைன்) வரி படிவங்களைப் பொறுத்தவரை, புதிய போர்டலில் வருமான வரி தாக்கல் தொடர்பான மென்பொருள் இலவசமாகக் கிடைக்கும். அந்த மென்பொருளில், படிவங்களை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்கான விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது எனவும், ஐ.டி.ஆர் 3, 5, 6, 7 படிவங்களைப் பொறுத்தவரை, வரி தாக்கல் தொடர்பான வசதிகள் விரைவில் கிடைக்கும் எனவும் வரித்துறை தெரிவித்துள்ளது.

New IT Website
New IT Website
வருமான வரி சோதனையின்போது என்ன நடக்கும்?

புதிய இணையதளம் குறித்து, ஆடிட்டர் கே.ஆர். சத்ய நாராயணனிடம் பேசினோம். ``இன்று www.incometax.gov.in என்கிற இணையதளம், இன்றே பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், இன்னும் வரவில்லை. இன்று இரவுக்குள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கிறேன். வந்த பிறகு, ஓரிரு நாள்களில் இந்த இணையதளத்தில் இருக்கும் வசதிகள் என்னென்ன என்பது தெரிந்துவிடும்.

ஏற்கெனவே இருந்த பழைய இணையதளத்தில், சில பயன்பாட்டுக் குறைபாடுகள் இருந்தன. வருமான வரி தாக்கல் செய்வோருக்கு சில வசதிகள் இல்லாமல்கூட இருந்தது. அதையெல்லாம் நிவர்த்தி செய்யும் வகையில் இந்தப் புதிய இணையதளம் இருக்கும் என நம்புகிறேன். வரித்தாக்கல் செய்துவிட்டு, அது பெண்டிங்கில் வைக்கப்பட்டால், அதற்கான காரணம் என்ன என்பதைப் பழைய இணையதளத்தில் தெரிந்துகொள்ள முடியாது. ஆனால், இந்தப் புதிய இணையதளத்தில் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற முடியும் என வரித்துறை தெரிவித்துள்ளது.

ஆடிட்டர் சத்யநாராயணன்
ஆடிட்டர் சத்யநாராயணன்

படிவம் 1 மற்றும் 2-க்கு சாஃப்ட்வேர் இலவசமாகத் தயாரித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை மேலும் எளிமையாக்குவதற்காக, இந்தப் புதிய இணையதளம் கொண்டுவரப்பட்டிருப்பதாக, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்த இணையதளத்தைப் பயன்படுத்த, பயன்படுத்தத்தான்அதிலிருக்கும் விஷயங்கள் புரியவரும். இந்த இணையதளத்திலும் குறைபாடுகள் இருக்கும். அதைத் தெரிந்துகொண்டு சரி செய்ய இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகலாம்" என்றார்.

பலரும் இன்று புதிய இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இன்னும் தளம் செயல்படாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு