புதிய மியூச்சுவல் ஃபண்ட் (NFO) திட்டங்களுக்கு சென்ற ஏப்ரல் மாத மத்தியிலிருந்து மூன்று மாதங்களுக்கு இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, இடைக்கால தடை விதித்திருந்தது. அதனால் புதிய திட்டங்கள் கடந்த மூன்று மாதங்களாக வெளிவரவில்லை.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
புதிய திட்டங்கள்..!
தற்போது அந்த மூன்று மாத தடை காலம் முடிவுக்கு வந்துள்ளதால் பல முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் புதிய திட்டங்களுடன் முதலீட்டை திரட்டும் உத்வேகத்துடன் களம் இறங்குகின்றன.
இதன் ஒரு பகுதியாக இந்த வாரம் ஒயிட் ஓக் ப்ளஎக்ஸி கேப் ஃபண்ட் மற்றும் எடெல்வெய்ஸ் மல்டி கேப் ஃபண்ட் ஆகிய இரண்டு திட்டங்கள் அறிமுகமாகின்றன. என்றாலும் ஒரே மாதிரி இரண்டு திட்டங்களை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கொண்டு வரக்கூடாது என்று செபி உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறைவான என்.ஏ.வி மதிப்பு..!
என்.எஃப்.ஓ மூலம் நிதி திரட்டும் போது மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களின் என்.ஏ.வி மதிப்பு குறைந்த அளவில் 10 ரூபாயாக இருக்கும். கொடுக்கும் பணத்திற்கு அதிக யூனிட்டுகள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் புதிய திட்டங்களில் முதலீடு ஒருவர் செய்யக்கூடாது.
தற்போது சந்தையில் ஆயிரக்கணக்கான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அந்தத் திட்டங்களில் முதலீடு செய்யும்போது அதன் கடந்த கால செயல்பாடுகளை ஆராய்ந்து நமக்குத் தோதான திட்டங்களை தேர்ந்தெடுக்க முடியும். புதிய திட்டங்களில் சேரும் பொழுது கடந்த கால செயல்பாடுகளை அறிய முடியாது என்பதையும் முதலீட்டாளர்கள் உணர வேண்டும்.

சென்ற ஜூன் 2021 முதல் ஏப்ரல் 2002 வரை புதிய என்எஃப்போ திட்டங்களின் மூலம் அதிகபட்சமாக ரூ. 67,400 கோடி முதலீட்டு நிதி திரட்டப்பட்டுள்ளது. மேலும் கடந்த எட்டு மாதங்களில் இந்தியப் பங்குச் சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
கடந்த ஒரு வருட காலமாக முதலீடு செய்தவர்கள் நஷ்டத்தில் அல்லது பெரிய அளவு லாபம் இல்லாமலோ இருக்கும் சூழ்நிலையே நிலவுகிறது. என்றாலும் கடந்த 16 மாதங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் முதலீடு செய்யும் மக்களின் ஆர்வம் குறையவில்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக தொடர்ந்து அதிக அளவு பணம் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்ஐபி) முறை மூலமாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுகிறது.
நீண்ட கால முதலீடு..!
நமது இந்திய பங்குச் சந்தை நீண்ட கால நோக்கில் காளையின் பிடியில் இருக்கும் என்று பல முன்னணி தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. முதலீட்டினை சரியும் சந்தைகளில் நிறுத்தாமல் தொடர்ந்தோ அல்லது மேலும் அதிகமான முதலீட்டை மேற்கொள்வது சந்தை திரும்பவும் ஏறும் பொழுது அதிக லாபத்தை ஒருவருக்கு பெற்றுத்தரும்.
கொரோனா நோய்த்தொற்று ஆரம்பித்த பொழுது சந்தை கடுமையான இறக்கத்தை சந்தித்தது. அந்த காலகட்டத்தில் முதலீடு செய்தவர்கள் மிக அதிகமான லாபத்தை எடுத்ததை தற்போது கருத்தில் கொள்ள வேண்டும்.

அதனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் தமது முதலீடுகளை தொடர்ந்து செய்து வருவது நீண்ட கால நோக்கில் நல்ல லாபத்தை ஒருவருக்கு பெற்றுத்தரும். அந்த வகையில் புதிதாக வர இருக்கும் என்.எஃப். ஓ திட்டங்களில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்த அல்லது சந்தையில் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் பழைய திட்டங்களில் தோதானவற்றை தேர்ந்தெடுத்தோ ஒருவர் தமது முதலீடுகளை தொடரலாம்.